ஆரோக்கிய உணவு
ஆற்றலைத் தரும் சப்போட்டா
மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட சப்போட்டா மெக்சிகோ, பெலிசி போன்ற பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா போன்ற வெப்ப மண்டல நாடுகளிலும் அதிக அளவில் விளைகிறது.
ஆங்கிலத்தில் Sapota என்றும் Sapodilla என்றும் கூறப்படும் இதன் தாவரவியல் பெயர் Achars Sapota. Sapotceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. அமெரிக்கன்புல்லி என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றுள்ளது.
இதன் தூய தமிழ்ப்பெயர் சீமை இலுப்பை என்பதாகும். இலுப்பைப் பழத்தைப் போன்ற உருவத்தைப் பெற்றிருப்பதால் இப்பெயர் பெற்றது என்ற கருத்து கூறப்படினும் சப்போட்டா இலுப்பைப் பழத்தினைவிட அளவில் பெரியது ஆகும். குஜராத்தில் அதிக அளவில் பயிரிடப்படுவதால் அதனை சப்போட்டா மாநிலம் எனவும் கூறுவர்.
100 கிராம் சப்போட்டா பழத்தில் 83 கலோரி ஆற்றலும் 5.6 கிராம் நார்ச்சத்தும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது, 24.5 சதவிகிதம் ஆர்.டி.ஏ. அளவு வைட்டமின் சி உள்ளது. இது தீமை தரும் பிரீரேடிக்கல்களைப் போக்குவதிலும் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதிலும் துணைபுரிகிறது.
காயாக இருக்கும்போது வெளியாகும் கசப்புத்தன்மை கொண்ட பால்போன்ற வேதிப்பொருளுக்கு டேனின் என்று பெயர். இது, வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளிலிருந்து உடலுக்கு எதிர்ப்பாற்றலைக் கொடுக்கக் கூடியது. உடல் எரிச்சலிலிருந்து நம்மைக் காக்கும். குடல், இரைப்பை போன்ற உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும் திறன் டேனினுக்கு உள்ளது.
மேலும், சப்போட்டா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சருமம் மற்றும் செல் சவ்வுகள் நன்கு வளர உதவுவதுடன், நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்க்கும் எதிர்ப்பாற்றலாகச் செயல்படுகிறது.
பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும் போலேட், நியாசின் போன்றனவும் வளர்சிதை மாற்றச் செயல்களிலும் நொதிகளின் செயல்பாட்டிற்குத் துணைபுரிவதிலும் உதவுகின்றன. மேலும், புற்றுநோயினை உண்டாக்கும் நச்சுப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளது.
அதிக அளவில் உள்ள குளுக்கோஸ் உடனடி ஆற்றலினை உடலுக்குத் தருகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பி, உடலின் சீத அமைப்பு மற்றும் தோலின் திசு அமைப்பின் சுகாதாரத்தைப் பேணுகிறது.
இரைப்பையில் நொதிகளின் சுரப்பினைக் கட்டுப்படுத்தி உடல் பருமனைக் குறைக்கும் ஆற்றல் கொண்ட சப்போட்டா சிறந்த சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது.
இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுத்துச் சீராக வைக்கும். இரத்த சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சப்போட்டா சிறந்தது என்று ஓர் அமெரிக்க ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது. இரவில் படுக்கச் செல்லும்முன் ஒரு டம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால் ஆழ்ந்த தூக்கம் வருமாம்.