யோசித்துப் பாருங்க!
காலை 6 மணி. படுக்கையை விட்டு எழுந்த குமரனுக்கு இன்று எப்படியாவது அப்பாவிடம் சொல்லி புத்தகச் சங்கமத்திற்குப் போய்விட வேண்டும். அவனுடைய வகுப்பாசிரியர் புத்தகச் சங்கமத்திற்குச் சென்று நல்ல புத்தகங்களை வாங்கி எல்லா மாணவர்களும் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
எட்டாம் வகுப்பில் படிக்கும் குமரனோடு சேர்ந்து படிக்கும் நிறைய மாணவர்கள் புத்தகச் சங்கமத்திற்குப் போய்வந்து அங்கு புத்தகங்கள் வாங்கியது சிறுவர்களுக்கு நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டது பற்றிச் சொல்லியபொழுது குமரனுக்கு ஏக்கமாகவும் பொறாமையாகவும் இருந்தது.
அப்பாவின்முன் நின்றான். அப்பா செய்தித்தாளினைப் படித்துக் கொண்டிருந்தார். திருப்பதி சென்றவர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை என்ற செய்தியைச் சத்தம்போட்டுப் படித்துவிட்டு, முட்டாப் பய. இவன் நகையைப் பத்திரமா வைச்சிக்கிறாம கோவிலுக்குப் போனப்ப நகை கொள்ளைன்னு சொல்றான். நம்மோட பொருளை நாமதான் பாதுகாக்கணும்.
அதைவிட்டுவிட்டு சாமியைக் குற்றப்படுத்துற மாதிரிச் சொல்றானுக. இவனுக எப்படிச் சம்பாதிச்சானுகளோ… என்று அவராகவே பேசிக்கொண்டிருந்தார்.
அப்பா… என்னடா…
புத்தகச் சங்கமத்தைப்பற்றிச் சொன்னான். மாணவர்கள் போய்விட்டு வந்ததைச் சொன்னான். ஆசிரியர் நல்ல புத்தகங்களை வாங்கிப் படித்தால் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னதைச் சொல்லி என்னைக் கூட்டிச் செல்லுங்கள் என்று கெஞ்சலாகவும், பயந்துகொண்டும் சொன்னான்.
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இன்னைக்கி நாம பாண்டி முனீஸ்வரர் கோவிலுக்குப் போய் மாவிளக்குப் போட்டு உன்னோட முடியைக் காணிக்கையாகக் கொடுக்கப் போறோம். கடவுளை நல்லா வேண்டிக்க, உனக்கு நல்ல அறிவைக் கொடுப்பாரு, படிப்பைக் கொடுப்பாரு. அவருதான்டா நமக்கு எல்லாம் கொடுக்குறவரு என்று அன்பாகவும், அதட்டலாகவும் சொன்னார்.
குமரனின் முகம் தொங்கிப்போய் விட்டது. நமக்கு முன்னாடி நின்று பாடம் நடத்துகின்ற ஆசிரியர் சொல்வதைக் கேட்டால் அறிவு வளருமா? இதுவரைக்கும் நாம் பார்க்காத, எங்கேயிருக்குன்னுகூடத் தெரியாத கடவுளால அறிவு வளருமா? ஒரே குழப்பமாக இருந்தது.
கோவிலுக்குச் சென்றார்கள். தூரத்திலிருந்து பார்க்கும்போதே கோவிலுக்கு முன்னே பெருங்கூட்டம் தெரிந்தது. அப்பா மகிழ்ச்சியாக, எவ்வளவு பேர் கடவுள்மேல பாரத்தைப் போட்டுட்டு நமக்கு நல்லது செய்வார்னு நிக்கிறாங்க பார்த்தியா என்று சொன்னார். பக்கத்தில் சென்றபோது கோவிலுக்குள் இருந்து மோப்ப நாயை இழுத்துக் கொண்டு காவல்துறையினர் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.
என்னாயிற்று? அப்பா அங்கேயிருந்த ஒருவரிடம் கேட்டார்.
இரவு திருடனுங்க உள்ள புகுந்து சாமி போட்டிருந்த நகையையெல்லாம் எடுத்துக்கிட்டு, உண்டியலை உடைச்சுப் பணத்தையெல்லாம் கொள்ளையடிச்சுட்டுப் போயிட்டானுங்களாம். காணாம போன நகை, பணமெல்லாம் சேர்த்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல இருக்குமாம் என்றார்.
நாய் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தது. சாமி சிலையையெல்லாம் முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.
குமரன் அப்பாவிடம் அப்பாவியாய் கேட்டான். தன்னோட பொருளைக்கூட காப்பாத்திக்கத் தெரியாத கடவுள் நம்மள எப்படிப்பா காப்பாத்துவார்? அவரோட பொருளைக்கூட நாயும், காவல்துறையினரும்தான் தேடவேண்டியதாயிருக்கு என்றான்.
அப்பா கடவுளுக்குப் போட்டியாக சிலையாக மாறி நின்றார்.
அப்பா, அப்பா என்று உலுக்கினான். தன்னிலைக்கு வந்த அப்பா வா போகலாம் என்றார்.
எங்கே அப்பா? புத்தகச் சங்கமத்திற்கு.
மகிழ்ச்சியோடு அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு சென்றான்.
இ.ப.இனநலம், ஒன்பதாம் வகுப்பு,
பெரியார் நூற்றாண்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
ஜெயங்கொண்டம்.