சைபீரியாவின் முத்து பைக்கால் ஏரி
உலகின் மிகப் பெரிய ஏரியான பைக்கால் ஏரி ரஷ்ய நாட்டின் சைபீரியப் பகுதியில் அமைந்துள்ளது. உலகில் நீர்ம வடிவில் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீரில் 20 சதவிகிதம் இந்த ஏரியில்தான் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 31,722 ச.கி.மீட்டர் (12,248 சதுர மைல்) பரப்பளவினைக் கொண்ட இந்த ஏரியின் நீளம் 636 கி.மீட்டர், அகலம் 79 கி.மீட்டர், ஆழம் 1,642 மீட்டர் ஆகும். பைக்கால் ஏரி தோன்றி சுமார் 25 முதல் 30 மில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஏரியைச் சுற்றி மலைகளும் காடுகளும் காணப்படுகின்றன. 27 தீவுகளை உள்ளடக்கிய பைக்கால் ஏரியின் பெரிய தீவாக ஓல்கான் (Olkhon) தீவு உள்ளது. 72 கி.மீட்டர் நீளம் உடைய ஓல்கான் தீவு உலகின் மூன்றாவது நீளமான ஏரிசூழ் தீவு (Lake-bound Island) என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது.
330க்கும் அதிகமான ஆறுகளிலிருந்து பைக்கால் ஏரிக்குத் தண்ணீர் வருகிறது. அவற்றுள் செலங்கா ஆறு (Selenga River), பர்குசின் ஆறு (Barguzin River), அப்பர் அங்காரா ஆறு (Upper Angara River), டுர்கா ஆறு (Turga River), சர்மா ஆறு (Sarma River), நேஷ்னயா ஆறு (Snezhnaya River) ஆகியன குறிப்பிடத்தக்க ஆறுகளாகும். ஏரி நிறைந்து தண்ணீர் வடியும்போது அங்காரா ஆற்றின் வழியாக வெளியேறுகிறது.
1085 வகையான தாவர இனங்களும் 1,550 மிருக இனங்களும் ஏரியில் காணப்படுகின்றன. இதில் 80 சதவிகிதம் இந்த ஏரியில் மட்டுமே காணப்படுபவையாகத் திகழ்வது இதன் சிறப்பம்சமாகும். இவற்றில் பல உயிரினங்கள் உலக அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலினுள் உள்ளன. ஏரியின் ஆழமான பகுதிகளிலும் எண்ணற்ற அபூர்வ உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தொடர்ந்து ஆதிமனிதர்கள் முதல் மன்னர் பரம்பரை வரை வாழ்ந்து வந்துள்ள இந்தப் பகுதியில் 1200க்கும் மேற்பட்ட தொல்வரலாற்றுச் சின்னங்கள் காணப்படுகின்றன.
பைக்கால் ஏரியின் செல்லப்பெயர் சைபீரியாவின் முத்து (The Pearl of Siberia) என்பதாகும். மேலும், (Older sister of sister Lakes) ஏரிகளின் மூத்த சகோதரி என்றும் அழைக்கப்படுகிறது. யுனெஸ்கோவினால் 1996இல் உலக வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவது இதன் சிறப்பினை பெருமையினை வெளிப்படுத்தும்.