உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி
கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிடையில் பிரேசில் நாட்டின் எரீனா கோரிந்தியான் விளையாட்டரங்கில் ஜூன் 13 அன்று 20ஆவது உலகக் கால்பந்தாட்டப் போட்டி தொடங்கியது.
பிரேசில் நாட்டின் இயற்கை வளங்கள், மக்களின் வாழ்வோடு கலந்துள்ள கால்பந்து போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள், இசை, நடனம் ஆகியன நடைபெற்றன.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடக்க விழா நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் 300 கோடிப் பேர் ரசித்து மகிழ்ந்துள்ளனர். கால்பந்துப் போட்டிகளை நேரில் காண உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிரேசிலில் குவிந்துள்ளனர்.
முதல் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி 1930ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 1934, 1938ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946இல் கால்பந்துப் போட்டிகள் நடைபெறவில்லை. 1950ஆம் ஆண்டு முதல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் நடைபெற்று வருகிறது.
1930ஆம் ஆண்டு 13 அணிகள் பங்கேற்றுள்ளன. பின்னர் 16, 24 அணிகள் என உயர்ந்து 1998இல் 32 நாடுகள் பங்கேற்கும் போட்டியாக ஆகியுள்ளது. பல கட்டங்களில் தகுதிப் போட்டிகள் நடத்தி 32 அணிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
64 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது முறையாக உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் வாய்ப்பினைப் பிரேசில் பெற்றுள்ளது. இதுவரை 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள பிரேசில் அணி தன் சொந்த நாட்டில் வென்று கோப்பையைக் கைப்பற்றவில்லை.
உலகக் கோப்பைப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை 3,400 கோடி ரூபாயாகும். வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் அணிக்கு 207 கோடி ரூபாயும், இரண்டாவது இடத்தைப் பெறும் அணிக்கு 148 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளன.
ஜூலை 13 வரை நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளை அனைவரும் உற்சாகமாக ரசித்து மகிழும் நிலையில், கால்பந்தாட்டத்திற்கு இவ்வளவு பெரிய தொகையினைச் செலவு செய்வதா என அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.