நீரிழிவினைக் கட்டுப்படுத்தும் நாவல் பழம்
எளிமையும் வலிமையும் கொண்ட அருமையான பழம் நாவல் பழமாகும்.
நாவல் பழம் சாப்பிட்டால் நாவின் நிறம் கருமையாக மாறும். நாக்கு வறண்டு தண்ணீர் தாகம் அதிகமாகும். நாவின் தன்மையை மாற்றுவதால் நா + அல் (நாவல்) என்றனர். வழக்கில் பல இடங்களில் நவாப்பழம் என்றும், நாகப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது.
கோடை விடுமுறை தொடங்கும்போது நாவல் மரத்தில் ஏறி, கிளைகளைப் பிடித்து ஆட்டி உலுக்கி, விழும் பழங்களை நண்பர் கூட்டத்துடன் எடுத்துச் சாப்பிடும்போது இருக்கும் சுவையே தனிச்சுவைதான்.
கனிமங்கள், புரதங்கள், சுண்ணாம்புச் சத்துடன் அதிக அளவு இரும்புச் சத்தையும் கொண்டுள்ளது நாவல் பழம்.
உடம்பில் ஏற்படும் நோயின் தாக்கத்தைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்ட நாவல் பழம் சிறுநீரகத்தையும் சீராகச் செயல்பட வைக்கும். செரிமானக் கோளாறுகளை நீக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்து பசியைத் தூண்டும் இயல்புடையது. ரத்தக் கொதிப்பு மற்றும் நீர்க்கடுப்பிற்கும் சிறந்தது.
இதயத் தசைகளை உறுதிப்படுத்தும். கல்லீரல் பிரச்சினைகள், குடற்புண், மூலநோய் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளுக்கும் சிறந்தது. இரத்தத்தைச் சுத்திகரித்து விருத்தி செய்யும். பித்தத்தைத் தணிக்கும். நாக்கு மற்றும் பல் ஈறுகளைச் சுத்தம் செய்யும். சிறுநீர்ச் சுருக்கினைக் குணமாக்கி, உடம்புக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும்.
மனித உடம்பில் கணையத்தின் தன்மை துவர்ப்புச் சுவையின் தன்மையைக் கொண்டதாகும். இந்தக் கணையத்திலிருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. கணையத்தில் துவர்ப்பின் ஆதிக்கம் குறையும்போது இன்சுலின் சுரப்பு குறைகிறது. இன்சுலின் குறையும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளுக்கோசைட் உள்ளது. இதன் செயல்பாடு உடம்புக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயலினைத் தடுக்கிறது. எனவே, நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று லக்னோவில் உள்ள நீரிழிவு நோய் ஆராய்ச்சி மய்யத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாவல் பழத்தில் நீளவாட்டில் பெரியதாக இருப்பதில் இனிப்புச் சுவை அதிகம் இருக்கும். உருண்டை வடிவில் இருக்கும் பழமே மருத்துவ குணம் உடையது.
இத்தகு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள நாவல் பழத்தினை அளவுடன் சாப்பிட்டு, அதன் அளவில்லாப் பயன்களைப் பெற்று மகிழ்வோம்.