கணக்கில் புலியா? நீங்களும் உலக சாதனையாளர்தான்!
கணிதப் பாடத்தை அதிக ஈடுபாட்டோட செய்து விரைந்து சரியான விடை கண்டுபிடிப்பவர்களை கணக்கில் புலி எனச் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீங்க. கணக்குப் புலிகள் எல்லாம் கவனமா இதைப் படிங்க.
உலக அளவில் கணிதத்தில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன. இந்தப் போட்டி பன்னாட்டுக் கணித அமைப்பினால் நடத்தப்பட்டு வருகிறது. இறுதிப் போட்டிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் முதன்மை பெறுபவருக்கு பன்னாட்டு விருது வழங்கப்படும்.
இந்த ஆண்டு போட்டி தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் நடைபெற்றுள்ளது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். போட்டியில், ஈரான் நாட்டைச் சேர்ந்த மரியம் மிர்சாகனி முதல் பரிசைத் தட்டிச் சென்று உலக சாதனையாளராகி உள்ளார். ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இது போன்ற பரிசினை வெல்வது இதுவே முதல் முறையாகும் என்பதால் ஈரான் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மரியம் மிர்சாகனி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மரியம் மிர்சாகனி கணிதப் பேராசிரியையாக உள்ளார். பன்னாட்டுக் கணித அமைப்பு நடத்திய போட்டியில், கணித நுட்பங்களை பல்வேறு வரம்புகளில் தொழில்நுட்பத்திறன், தொலைநோக்குப் பார்வை ஆகிய சேர்க்கைகள் உள்ளடக்கிய அறிக்கையை ஆய்வுக் கட்டுரையாகச் சமர்ப்பித்துள்ளார். இந்த ஆய்வுக் கட்டுரை நடுவர் குழுவால் முதல் பரிசுக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கணிதத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் இந்தப் பேராசிரியை 2013ஆம் ஆண்டு அமெரிக்கா கணித சங்கம் நடத்திய ஷாட்டர் பரிசுக்கான விருதையும், 2009ஆம் ஆண்டு புளுமெந்தால் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுப்பதாகவும், மற்ற பெண் அறிவியல், கணித ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும் என்று கூறியதுடன், வரும் காலங்களில் போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மரியம் மிர்சாகனி.