திராட்சைப் பழம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே திராட்சைப் பழங்கள் மனிதனால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பெரும்பாலான திராட்சைகள் அய்ரோப்பியத் திராட்சைக் கொடிச் சிற்றினமான விட்டிஸ் வினிஃபெரா என்பதிலிருந்து கிடைக்கின்றன. இது நடுக்கடல் பகுதி மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. வெப்பம் மிகுந்த பகுதிகளில் வளமான மணற்பரப்பில் அதிகம் விளையக்கூடியன.
திராட்சை, கொடியினத்தைச் சேர்ந்த தாவரமாகும். உருண்டையான அல்லது முட்டை வடிவமான பழங்கள் குலைகுலையாகக் காய்த்திருக்கும். ஒரு குலையில் 300 பழங்கள் வரை இருக்கும். கருப்பு, கருநீலம், பச்சை, இளஞ்சிவப்பு என பல நிறங்களில் உள்ளன. கொடி முந்திரிப்பழம் எனவும் கொடி முந்திரி எனவும் வழங்கப்படுகிறது. பழங்களின் ராணி எனவும் அழைக்கப்படுகிறது.
வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்துகள் திராட்சையில் உள்ளன. 100 கிராம் திராட்சையில் கார்போஹைட்ரேட் 18.1 கிராமும் சர்க்கரை 15.48 கிராமும் நார்ச்சத்து 0.9 கிராமும் கொழுப்புச் சத்து 0.16 கிராமும் புரோட்டின் 0.72 கிராமும் உள்ளன. மேலும், வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, பி9, கொலைன் (Choline), வைட்டமின் சி, ஈ மற்றும் கே, கால்சியம், இரும்புச்சத்து, மக்னிசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்றன சிறிதளவும் உள்ளன.
ரத்த சோகை, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறை நீக்கும். உடல் வறட்சியைப் போக்கும். ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும். செரியாமைப் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். உடல் வெப்பத்தையும், பயணத்தினால் ஏற்படும் சூட்டையும் தணிக்கும். எலும்பு, பற்களை வலுவடையச் செய்யும். குளிர்ச்சியான உடல் அமைப்புடையவர்கள் அதிகம் சாப்பிடக் கூடாது. திராட்சைச் சாற்றிலிருந்து ஒயின் தயாரிக்கப்படுகிறது.
திராட்சைப் பழங்களைப் பதப்படுத்தி உலர் திராட்சை தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் தொடர்ந்து உலர் திராட்சை சாப்பிட்டு வர நல்ல பலன் பெறலாம்.