பிரபஞ்ச ரகசியம் 15
சூரியன் பிறந்த ஒளிர்முகில் கூட்டம்
நண்டு நெபுலா
– சரவணா இராஜேந்திரன்
சூரியன் பிறந்த ஒளிர்முகில் (nebula):
அண்மையில் நாசா வானியல் அறிஞர்களிடம் ஒரு கேள்வி வைக்கப்பட்டது. வாயுக்களின் அழுத்தத்தால் உருவாகும் இந்த விண்மீன்களில் ஈர்ப்புத்தன்மை அதிகமாக இருக்கும்பொழுது அந்த விண்மீன்கள் எவ்வாறு தூரத்திற்கு புதிதாகத் தோன்றும் விண்மீன்களிடம் இருந்து விலகிச் செல்கின்றன? இந்தக் கேள்வியைக் கேட்டது, மாட்ரிட் (ஸ்பெயின்) நகரில் வசிக்கும் ஸ்வான் டி வில்லே என்ற 16 வயதுப் பையன். இதே கேள்விதான் நியூட்டனுக்குத் தோன்றியது. இதற்கான விடையாக ஆப்பிள் விழுந்த கதை நாம் அறிந்ததே.
இப்பெருவெளியில் காலம், வேகம், ஈர்ப்பு இந்த மூன்றும் ஒன்றை ஒன்று போட்டிபோட்டுக் கொண்டு செயல்படுகின்றன. இதில், ஒன்று தோற்றால் கூட இந்தப் பெருவெளி(பிரபஞ்சம்) அண்டவெளியில் கரைந்து போய்விடும். விண்மீன்களின் விலகலுக்கும் இந்த மூன்று தத்துவங்கள்தான் முக்கியக் காரணங்களாகின்றன. இரண்டு பால்வெளி மண்டலத்திற்கு இடையில் உள்ள வெற்றுவெளியில் ஏற்படும் ஈர்ப்பு சக்தியினால் சுருளான பால்வெளி மண்டலம் வெகுவேகமாக விரியத் தொடங்குகிறது.
இப்படி விரியும்போது ஏற்படும் விசைதான் புதிதாகப் பிறந்த நட்சத்திரங்களை ஒன்றில் இருந்து ஒன்று விலகிச் செல்லுமாறு தூரமாக விலக்கி வைக்கிறது. பால்வெளி மண்டலத்தின் விலகல் சக்திக்கு முன்பு நட்சத்திரங்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை செல்லாக்காசாகி விடுகிறது.
இவ்விலகலைப் பரிசோதனை செய்ய, ஒரு நூலில் சிறிய இரும்புக்குண்டைக் கட்டி காந்தத்துண்டின் அருகில் வேகமாகச் சுற்றுங்கள். மெதுவாகச் சுழலும்போது இரும்புக்குண்டு காந்தத்தின் ஈர்ப்பு விசையால் ஒட்டிக்கொள்ளும். வேகம் கூடக்கூட காந்த விசையைப் புறந்தள்ளி இரும்புக்குண்டு வேகமாகச் சுழலும்.
இதுதான் இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையில் நடக்கிறது. இந்த இயற்பியல் விதியின்படிதான் நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று விலகிச் சுழல்கின்றன. அப்படி விலகுவதால் தன்னிச்சையாக ஆற்றல் பெற்று ஒவ்வொரு நட்சத்திரமும் தனக்கென்று ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி பெருவெளியில் சுற்றி வருகிறது. நமது சூரியக் குடும்பமும் இப்படிப் பிரிந்த ஒன்றுதான். நமது சூரியனுக்கு அருகில் உள்ள விண்மீன் பற்றி நாம் முன்பே படித்து இருக்கிறோம்.
ஒளிர்முகில் கூட்டம் (nebula):
நமது பால்வெளி மண்டலம் தோன்றிய காலத்தில் உயர் அழுத்தம் வாய்ந்த பல்வேறு வகையான வாயுக்களின் அணுத்திரள்கள் இணைந்து அடர்த்தியான தூசுகள் அடங்கிய மேகங்களாக ஆங்காங்கே தேங்கத் தொடங்கின. இவை பால்வெளி மண்டலத்தின் சுழற்சி விசைக்கேற்ப பல்வேறு திசைகளில் பரவத் தொடங்கின. அடர்த்தியான நிலையில் இவை அதிக வெளிச்சம் நிறைந்த மேகங்கள் போல் காணப்படும்.
இவற்றை ஒளிர்முகில் கூட்டம் (nebula) என்று அழைப்பார்கள். இந்த நெபுலா மேகக்கூட்டத்தில் சில இடங்களில் மிகவும் அதிக வெப்பத்தின் காரணமாக அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தங்களுக்குள் அதிவுயர்அழுத்தம் கொண்ட ஒரு மய்யத்தை உருவாக்குகிறது.
இந்த மய்யத்தின் ஈர்ப்பால் அருகருகே உள்ள அணுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த பிறகு வெப்பமான கோளகம் ஒன்று உருவாகிறது. இவை மேலும் மேலும் விரிவடைந்து மாபெரும் விண்மீன்களாக உருவெடுக்கின்றன. இந்த விண்மீன்கள்தான் ஒளிர்முகிலில் (nebula) இருந்து விலகி தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு விண்ணில் விண்மீன்களாக வலம் வருகின்றன. நமது சூரியனும் இப்படி ஒளிர்முகில் கூட்டத்தில் இருந்து பிறந்த விண்மீன்தான்.
விண்மீன்களும் மனிதர்கள் போலத்தான் பிறக்கின்றன, வாழ்கின்றன இறுதியில் செத்துப்போகின்றன. மனிதர்களின் வாழ்க்கை நூறுஆண்டுகளுக்கு முன்பாகவே முடிந்துவிடும். ஆனால் விண்மீன்களின் வாழ்நாட்கள் குறைந்த பட்சம் 700 முதல் ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகும். நமது சூரியனின் வயது தற்போது 500 கோடி ஆண்டுகள். இன்னும் 300 கோடி ஆண்டுகள்வரை நமது சூரியன் உயிர் வாழும்.
ஹப்பிள் தொலைநோக்கியின் உதவியால் நமது பால்வெளி மண்டலத்தில் இதுவரை 400க்கும் மேற்பட்ட ஒளிர்முகில்களைக் (nebula) கண்டறிந்துள்ளோம். அதில் பிரபலமானவை: எறும்பு ஒளிர்முகில் (Ant Nebula), பர்நாடு சுழற்சி (Barnard’s Loop), பூமரங் ஒளிர்முகில் (Boomerang Nebula), பூனைக்கண் ஒளிர்முகில் (Cat’s Eye Nebula), நண்டு ஒளிர்முகில் (Crab Nebula), கழுகு ஒளிர்முகில் (Eagle Nebula)(Pillars of Creation), எஸ்கிமோ ஒளிர்முகில் (Eskimo Nebula), ஈட்டா ஒளிர்முகில் (Eta Carinae Nebula),
சுருள் ஒளிர்முகில் (Fox Fur Nebula), ஹெலிக்ஸ் ஒளிர்முகில் (Helix Nebula), குதிரைத் தலை ஒளிர்முகில் (Horse head Nebula), ஓரியன் ஒளிர்முகில் (Orion Nebula), பெலிகன் ஒளிர்முகில் (Pelican Nebula), செஞ்சதுர நெபுலா (Red Square Nebula), கங்கண நெபுலா (Hourglass Nebula), ரொசெட் ஒளிர்முகில் (Rosette Nebula), லகூன் ஒளிர்முகில் (Lagoon Nebula), வளைய ஒளிர்முகில் (Ring Nebula), சிலந்தி ஒளிர்முகில் (Tarantula Nebula), கடிகாரக் கண்ணாடி ஒளிர்முகில் (Hourglass Nebula),
அன்ன ஒளிர்முகில் (Swan Nebula) போன்றவை ஆகும். கழுகு ஒளிர்முகில் [Eagle Nebula (Pillars of Creation)] கழுகு ஒளிர்முகில் கூட்டம் நமக்கு மிகவும் நெருங்கிய ஒளிர்முகில் கூட்டமாகும். ஏன்? நமது சூரியனின் பிறப்பிடம் இந்த ஒளிர்முகில் கூட்டம்தான் என்று கூறுகிறார்கள் நமது வானியல் அறிஞர்கள். இந்த ஒளிர்முகில் கூட்டத்தில் உள்ள படைப்புத்தூண்கள் என்று அழைக்கப்படும் Pillars of Creation-இல் இருந்துதான் நமது சூரியன் பிறந்தது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இந்த கழுகு ஒளிர்முகில் கூட்டத்தில் இருந்து வெளிவரும் விண்மீன்களின் இயக்கம் மற்றும் அந்த விண்மீன்களின் ஒளியை நிறமானி கொண்டு ஆய்வு செய்கையில் நமது சூரிய ஒளியின் தன்மையும் இவற்றின் தன்மையும் ஒத்துப்போகின்றன. ஆகையால் நமது சூரியன் இந்த கழுகு ஒளிர்முகில் கூட்டத்தில்தான் பிறந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இருப்பினும் இது குறித்த ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.
கழுகு நெபுலா _
தனுசு விண்மீன் மண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள அல்பல்தா என்ற விண்மீனிற்கு உயரத்தில் காய்ந்த பாலாடைத் தூளைத் தூவி விட்டதுபோல் காட்சிதரும்.
சாதாரண கண்களால் இதைப் பார்ப்பது மிகவும் அரிது. நிலவு இல்லாத நள்ளிரவு வேளையில் மிகவும் அரிதாக வெறும் கண்களுக்குப் புலப்படும். தொலைநோக்கி கொண்டு பார்க்கும்போது கழுகு ஒன்று பறக்கும் வடிவத்தில் காணப்படுவதால், இதற்கு கழுகு ஒளிர்முகில் கூட்டம் என்று வானியல் அறிஞர்கள் பெயர் வைத்தனர்.
படைப்புத் தூண்கள் Pillars of Creation
நமது சூரியன் இந்த முகில் கூட்டத்தில் இருந்து பிரிந்த காலத்தில் உடன் பிரிந்த வேறு விண்மீன்கள் குறித்த ஆய்வு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. ஏனென்றால் நமது சூரியக் குடும்பத்தில், பூமி இதர கோள்கள் உள்ளபோது, அதே காலகட்டத்தில் தோன்றிய வேறு விண்மீன்களிடமும் கோள்கள் உள்ளன. அதில் உயிரினங்கள் இருக்க வாய்ப்புள்ளது.
ஆனால் அந்த விண்மீனைத் தேடும் அதிஉயர் வானியல் தொழில்நுட்பம் நம்மிடம் இன்றுவரை கிடைக்கவில்லை. ஆனால் ஒரே தன்மையுடைய விண்மீன்களை அடையாளம் காணும் ஆய்வுகள் நடந்துகொண்டு வருகின்றன. இதன் வரிசையில்தான் இன்று நாம் அடிக்கடி பத்திரிகையில் படிக்கும் உயிரினம் வாழ்வதற்கு உகந்த கோள் கண்டுபிடிப்பு என்ற செய்தி நமக்குக் கிடைக்கிறது.
அடுத்த தொடரில் இதர ஒளிர்முகில் கூட்டங்களை நோக்கிப் பயணிப்போம்.