சதுரங்கத்தில் சாதித்த பிஞ்சு
கியூபா
அகில இந்திய அளவிலான 2ஆவது சதுரங்கப் போட்டி கிங் செஸ் பவுண்டேசன் சார்பில் ஆகஸ்ட் 15 முதல் 17 ஆம் தேதி முடிய சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 500 பேர் இதில் பங்கேற்றனர்.
திருச்சி திருவெறும்பூர் பி.ஹெச்.இ.எல். தமிழ்ப் பயிற்று மொழி நடுநிலைப் பள்ளியில் 3ஆம் வகுப்புப் பயிலும் பெரியார் பிஞ்சு பு.வி.கியூபா, 8 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் விளையாடி, இந்திய அளவில் 7 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
சிறு வயதிலேயே சதுரங்க விளையாட்டில் இவரது திறமையைக் கண்ட பெற்றோர் முறையாகப் பயிற்சியளிக்கத் தொடங்கினர். சிந்திக்கின்ற ஆற்றல் தாய்மொழிக் கல்வியில்தான் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் கியூபா அமிர்தாத்ரோபி என்ற அமைப்பின் சார்பில் அக்டோபர் 2013ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 7 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் கலந்துகொண்டு மாநிலத்திலேயே முதலாவதாக வெற்றி பெற்றுள்ளார்.
2013ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2014 பிப்ரவரி வரை 10க்கும் மேற்பட்ட சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பான குடை
ஜப்பானில் மினுமினுக்கும் புதிய குடை விற்பனைக்கு வந்துள்ளது. இரவு நேரங்களில் மழை பெய்யும்போது இந்தக் குடையினைப் பிடித்துச் சென்றால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். எப்படி என்கிறீர்களா?
ஒளியைப் பிரதிபலிக்கும் ஒரு பொருள் குடையின் விளிம்பில் வைத்துத் தைக்கப்பட்டுள்ளது. இந்த ஒளியானது 200 அடி தூரம் வரை ஒளிரும் தன்மையுடையது. இது போக்குவரத்து விபத்துகளிலிருந்து பயன்படுத்துவோரைப் பாதுகாக்கும்தானே.
இந்த ஒளிரும் மின்மினிக் குடையானது டபேடா என்னும் சில்க் துணியினால் தயாரிக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சாதாரண குடையைப் போலத்தான் காட்சியளிக்கும்.
ஜப்பான் நாட்டின் போக்குவரத்துப் பாதுகாப்புச் சங்கம் இந்தக் குடை தயாரித்த நிறுவனத்தைப் பாராட்டியுள்ளதாம்.