பெரியாரைப் பின்பற்றுவோம்!
பெரியார் என்ற சொல்லுக்கு மனிதநேயம் என்றே பொருள்! இதை அகராதியில் அச்சிட்டாலும் அதில் பிழையேதும் இல்லை.
ஆம். பெரியார் என்ற ஒற்றைச் சொல்லின் உள்ளடக்கம் மிகப் பெரியது. ஈ.வெ.ராமசாமி என்பவருக்குப் பெண்கள் அளித்த சிறப்புப் பெயர் பெரியார் என்றாலும், அப்பெயர் அவரால் தனித் தன்மையும், தனிப் பெருமையும், உயர்தகுதியும் பெற்றுவிட்டது என்பதே உண்மை!
பெரியார் என்ற தனி மனிதர் வழக்கமாக உலகில் பிறந்து, வாழ்ந்து, மறையும் சராசரி மனிதர் அல்லர். அல்லது மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் ஒரு சிலரைப் போன்றவரும் அல்லர்.
அவர் ஒரு சகாப்தம்! காலகட்டம்! சரித்திரம்! திருப்புமுனை! தீர்க்கதரிசி! உலக நாயகர்! சிந்தனைச் சுரங்கம்! ஆதிக்கம் அழித்த சமதர்மச் சிற்பி! இப்படி எத்தனையோ இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர்! அதனால்தான், உலக அமைப்பான அய்.நா.மன்றம் இவரை இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி என்று, இவ்வுலகில் எவருக்கும் அளிக்காத பெருமையை அளித்தது.
அவர் ஒரு தொலைநோக்காளர் என்பதற்கு அவரது இனிவரும் உலகம் என்ற நூலே சான்று. அவர் ஒரு தத்துவ மேதை என்பதற்கு அவரது தத்துவ விளக்கம் என்ற நூலே சான்று. அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதற்கு குடியரசு, விடுதலை, உண்மை போன்ற இதழ்கள் சான்று!
அவர் ஒரு புரட்சியாளர் என்பதற்கு அவரது போராட்டங்கள் சான்று.
அவர் ஒரு சாதனையாளர் என்பதற்கு அவரது பிரச்சாரப் பயணங்களும், மேடை முழக்கங்களும் சான்று.
அவர் ஒரு கொள்கையாளர் என்பதற்கு அவரது வாழ்வே சான்று!
புரட்சி, போராட்டங்கள் நடத்தி தன் வாழ்விலே விடிவும் கண்டு, விளைவுகளையும் கண்டவர் பெரியார் மட்டுமே!
தன்னைப் போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உணர்வுள்ளவன், உரிமையுள்ளவன், மானமுள்ளவன், மதிக்கப்பட வேண்டியவன், சமமானவன், உறவு கொண்டு வாழ வேண்டியவன். ஆண்டான் அடிமை இல்லை; தீண்டத்தகாதவன், வணங்கத்தக்கவன் இல்லை! பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்பதே இவரது கொள்கை. இவற்றிற்காகவே வாழ்ந்தார்; இவற்றிற்காகவே போராடினார்.
எனவேதான் பெரியார் என்றால், மனிதநேயம் என்று சொன்னேன்!
ஆனால் ஆதிக்கவாதிகள், குறிப்பாக ஆரியப் பார்ப்பனர்கள், பெரியாரின் பரந்துபட்ட இந்த உணர்வைச் சுருக்கி, குறுக்கிக்கூட அல்ல, மறைத்து, குறைத்து, மாற்றி, திரித்துக் கூறினர். பெரியாரின் பெருமையை, புகழை, சிறப்பை, புரட்சியை பிறர் அறியாமலிருக்கும்படிச் செய்தனர்; செய்தும் வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக, செப்டம்பர் மாதம் பிறந்த தலைவர்களைப் படம் போட்டுக் காட்டிய தினமணி சிறுவர் மணி, பெரியார் படத்தைப் போடவில்லை. முதலில் போடவேண்டிய பெரியாரின் படத்தை முற்றாக நீக்கினர். சிறுவர்கள் பெரியாரை அறியக்கூடாது என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்; கவனமாக இருக்கின்றனர்.
பெரியார் என்றால் கடவுள் இல்லை யென்பார்; பார்ப்பானைத் திட்டுவார் என்ற அளவில் பெரியாரை பிறர் அறியும்படிச் செய்கின்றனர்.
ஆனால், இவ்வளவுதான் பெரியாரா? பிஞ்சுகள் சிந்திக்க வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும்.
பெரியார் செய்தது இவை மட்டுமென்றால், அய்.நா.மன்றம் எப்படி உலகில் யாருக்கும் அளிக்காத பெருமையை _ பட்டத்தை பெரியாருக்கு அளித்துச் சிறப்பித்திருக்கும்? என்ற வினாவோடு பெரியாரைத் தேடவேண்டும்; பெரியாரின் சிந்தனைகளைக் கிளற வேண்டும்; தோளிட வேண்டும்.
அப்படிச் செய்தால் பெரியாரின் பல்துறைச் சிந்தனைகள், பணிகள், போராட்டங்கள், புரட்சிகள் வெளிப்படும்.
வெளிப்பட்டவற்றை விடாது பிடித்துச் சிந்தித்தால், தெளிவு, துணிவு, ஒழுக்கம், நாணயம், நேர்மை, தொண்டு, சமத்துவம் போன்ற பல உயரிய கொள்கைகள் நம்முள் குடிகொள்ளும்; நம்மை வழிநடத்தும்.
பெரியாரின் சிந்தனைவழிச் சென்றால், தன்மான உணர்வு தானே வரும். தன்மான உணர்வு தலைதூக்கினால், நம் இழிவு, தாழ்வு, அறியாமை எல்லாம் அகலும். நாமும் மனிதன், நாம் யாருக்கும் அடிமையல்ல என்ற உண்மை உள்ளத்துள் பதியும். விழிப்பு, துணிவு, தெளிவு, காரணம் கேட்கும் சிந்தனை வரும்போது நம் வாழ்வு சிறக்கும் _ உயரும். நம் தலைமுறை தலைநிமிரும்.
பெரியார் வழி நடக்கும் பிஞ்சுகள், வாழ்வில் என்றும் வீழ்வதில்லை. எனவே, பெரியாரைப் பின்பற்றுவோம், வாழ்வில் சிறப்போம்; பிறர் வாழ்வு சிறக்கவும் உழைப்போம்! இதுவே இக்காலத்தில் நம் உள்ளத்தில் கொள்ள வேண்டிய உறுதி!