பிரபஞ்ச ரகசியம் 16
ஒளிர்முகில் கூட்டத்தின் தந்தை எட்வின் ஹப்பிள்
ஹப்பிள் விண்கலம்
– சரவணா ராஜேந்திரன்
ஓரியன் ஒளிர்முகில் (Orion Nebula)
இரவில் நாம் காணும் விண்மீன்களில் பெரும்பாலானாவை நெபுலாக்களே ஆகும். இவற்றில் லட்சக்கணக்கான குட்டி விண்மீன்கள் உள்ளன. இரவில் நாம் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் ஓரியன் விண்மீன் குழுமத்தில் ஒரு நெபுலா உள்ளது. எம் 42 என்று பெயரிட்ட இந்த ஒளிர் முகில் சாதாரணமான தொலைநோக்கி கொண்டு பார்க்கும் போது மிகவும் எளிதாகத் தெரியும்.
கலிலியோவின் தொலைநோக்கி, விண்மீன் மண்டலத்தில் உள்ள நெபுலாக்களைக் காட்டியது. ஆனால் கலிலியோவால் அவற்றை அடையாளம் காணமுடியவில்லை. அதே காலகட்டத்தில் வாழ்ந்த பியரிசேக் என்ற வானியல் அறிஞர் ஓரியன் விண்மீன் கூட்டத்தை ஆய்வு செய்தபோது முதன்முதலாக எம்42 என்ற நெபுலாவைக் கண்டறிந்தார். நீண்ட கால ஆய்விற்குப் பிறகு நெபுலா பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
இந்த நெபுலா பூமியிலிருந்து சுமார் 1500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த நெபுலா மண்டலத்தில் நூற்றுக்கணக்கான புதிதாகப் பிறந்த விண்மீன் திரள்கள் உள்ளன. இந்த விண்மீன் திரள்களால் இந்த நெபுலா மிகவும் ஒளிமிகுந்ததாக நமக்குத் தெரிகிறது.
நண்டு விண்மீன் மண்டலம் (Crab Nebula)
விண்மீன் மண்டலத்தின் மேற்பகுதியில் (காளையின் வலது புற கொம்பு போன்ற தோற்றம் கொண்ட பகுதி) நண்டு ஒளிர்முகில் கூட்ட நெபுலா உள்ளது.
ஓரியன் ஒளிர்முகில்
ஒளிர்முகில் கூட்டங்கள் குறித்து முழுமையான அறிவியல் விளக்கங்கள் பெறுவதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஒளிர்முகில் கூட்டங்களில் இதுவும் ஒன்று. 1700_களில் கண்டறியப்பட்ட தொலைநோக்கியில் இது மிகவும் மெல்லிய மெழுகுவர்த்தியில் சுடர் போன்றுதான் தெரிந்தது. முக்கியமாக அமாவாசை இரவில் அதிக ஒளியுடன் காணப்படும். இதன் காரணமாக இந்த ஒளிர்முகில் கூட்டத்தைப் பற்றிய ஆய்வு ஆர்வத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
1900-க்குப் பிறகு நவீன தொலைநோக்கிகள் கொண்டு பார்க்கும்போது இதன் உண்மைத் தன்மை வெளிப்பட்டது. நண்டு வடிவில் தெளிவாகத் தெரியும் இந்த ஒளிர்முகில் கூட்டம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த ஒரு மிகப்பெரிய விண்மீனின் மின்காந்தக் கதிரலைகள் அனைத்தையும் தனக்குள் ஈர்த்துக் கொண்டதால், இந்த ஒளிர்மேகக்கூட்டம் வண்ணமயமாகக் காட்சி தருகிறது.
வடஅமெரிக்க ஒளிர்முகில் கூட்டம் (North America nebula)
ராசி மண்டலங்களுக்குள் அடங்காத மற்றுமொரு விண்மீன் மண்டலம் அன்ன விண்மீன் மண்டலம்.
இதை வடதிசை சிலுவை மண்டலம் என்றும் கூறுவர். நமது பால்வெளி மண்டலத்திற்கு ஊடாக இந்த விண்மீன் மண்டலம் தெரிவதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விண்மீன் மண்டலமாகும். இதன் ஆல்பா விண்மீன்(தெனேப்) 1.25 பொலிவெண் கொண்டது. இந்த விண்மீன் அன்ன விண்மீன் மண்டலத்தின் தலைப்பகுதியில் உள்ளது. இதன் அருகில் கண்ணாடியில் படிந்த நீராவி போன்ற தோற்றத்தில் உள்ள ஒளிர்முகில் கூட்டம்தான் வட அமெரிக்க ஒளிர்முகில் கூட்டம்.
நவீன தொலைநோக்கி கொண்டு பார்க்கையில் வட அமெரிக்க வரைபடத்தை ஒட்டியே இருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது. இந்த ஒளிர்முகில் கூட்டத்தில் கணக்கில் அடங்காத விண்மீன் தொகுப்புகள் உள்ளன. இந்த ஒளிர்முகில் கூட்டம் பலநூறு ஒளியாண்டு தூரத்தில் பரவியுள்ளது. பல விண்மீன்கள் இந்த ஒளிர்முகில் கூட்டத்தைவிட்டு வெளியே வரும்முன்பே தன்னுடைய சக்தியை இழந்து உயிர்விட்டுவிடுகின்றன.
இதன் காரணமாக இந்த ஒளிர்முகில் கூட்டத்தில் எப்போதும், விண்மீன் வெடிப்புகள்(சூப்பர்நோவா) நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த ஒளிர்முகில் கூட்டத்தில் இருந்து வெளிவரும் கதிரியக்கம் காரணமாக ஒளிச்சிதைவு ஏற்படுகிறது. இந்த ஒளிச்சிதைவின் காரணமாக நமது கண்களுக்கு மிகவும் குறைந்த காலமே காட்சி தருகிறது. இயேசு பிறந்தபோது வானில் மிகப்பெரிய வெளிச்சம் தோன்றியதாக குறிப்பிடப்படுவதைக் கவனித்திருப்பீர்கள்.
அந்த வெளிச்சம் ஏன் ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்த விண்வெளி ஆய்வாளர்கள் வட அமெரிக்க ஒளிர்முகில் கூட்டத்தில் ஏற்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட ஹைபர் நோவா வெடிப்புகள் காரணமாக ஏற்பட்ட பேரொளி இயேசு பிறந்ததாகச் சொல்லப்படும் காலகட்டத்தை ஒட்டி புவிக்கு வந்திருக்கக் கூடும். இந்த ஒளிக்கும் இயேசுவின் பிறப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இயேசு பிறந்த காலகட்டத்தில் இந்த ஒளி தோன்றிய பதிவு இருந்ததால் பிற்காலத்தில் இந்த ஒளியை இயேசுவின் பிறப்புடன் இணைத்து மத நூல்களில் எழுதிவிட்டார்கள். இப்படிப்பட்ட வெடிப்புகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.
இந்த ஒளிர்முகில் கூட்டம் மிகவும் அதிகமான அளவில் கதிரியக்கம் கொண்டவைகளாக இருக்கின்றன. இங்கு கோள்கள் இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் அவை மிகப்பெரிய ஒளிவிடும் வைரக் கோள்களாகத்தான் இருக்கமுடியும்.
நாம் இதுவரை கண்ட ஒளிர்முகில் கூட்டத்திற்கு தந்தை எனப் புகழப்படுபவர் எட்வின் ஹப்பிள் என்ற அமெரிக்க விண்வெளி ஆய்வாளர் ஆவார். இவரது அரிய முயற்சியால் நாம் பல்வேறு ஒளிர்முகில் கூட்டங்களைக் கண்டறிந்தோம்.
எட்வின் ஹப்பிளின் வாழ்க்கை வரலாறு
1889 நவம்பர் 20-ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்த எட்வின் ஹப்பிள் ஆரம்பக் காலத்தில் படிப்பில் கவனமில்லாதவராக இருந்தார். பள்ளிப் பாடத்தில் கவனமில்லாதவராக இருந்தாலும் புதியவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அறிவியல் ஆர்வம் காரணமாக பல்வேறு அறிவியல் நூல்களைப் படித்துத் தேர்ந்தார்.
இவர் தன்னுடைய 12 ஆவது வயதில் செவ்வாய்க் கோள் பற்றிய ஒரு கட்டுரையை எழுதி ஸ்பிரிங்பீல்டு என்ற பத்திரிகையில் வெளியிட்டார். இது பலரது வரவேற்பைப் பெற்றது.
எட்வின் ஹப்பிள்
அவரது அறிவியல் ஆர்வத்தைக் கண்டு சிகாகோ பல்கலைக்கழகம் அவரைத் தனது மாணவனாகச் சேர்த்துக்கொண்டது. அங்கு விண்ணியல் ஆய்வு பற்றிய படிப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார்.
அதன் பிறகு இங்கிலாந்து சென்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் வென்றார். மீண்டும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வென்று அமெரிக்காவிலேயே தொலைநோக்கி உதவியுடன் வான்வெளியை ஆராய்ந்தார்.
இவரது நீண்ட கால ஆய்வின் பயனாக விண்வெளியில் அதுநாள் வரை மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாத விண்மீன் மண்டலம், ஒளிர்முகில் கூட்டம் மற்றும் பால்வெளி மண்டலம் நமது பால்வெளி மண்டலத்திற்கு அடுத்து உள்ள வேறு பல பால்வெளி மண்டலங்கள் பற்றி நமக்குத் தெரிய வந்தது. நாம் படித்துக்கொண்டு இருக்கும் ஒளிர்முகில் கூட்டங்கள்கூட இவரது அரிய கண்டுபிடிப்பில் அறியப்பட்டவைதான்.
பிரபல அறிவியல் மேதை அய்ன்ஸ்டீன் இதுவரை தனது சமன்பாடுகள் மூலம் கண்ட இந்தப் பெருவெளியை 1928-ஆம் ஆண்டு ஹப்பிளுடன் இணைந்து தொலைநோக்கி வழியாக நேரடியாகக் கண்டு வியந்தார்.
இதன் மூலம் தன்னுடைய பல்வேறு கண்டுபிடிப்புகளில் சில திருத்தங்களை மேற்கொண்டார். மேலும், தன்னுடைய கண்டுபிடிப்புகள் நிரந்தரமானவை அல்ல; அறிவியல் தொழில்நுட்பம் வளர வளர மாற்றமடையக்கூடும் என்று ஆணித்தரமாகக் கூறினார்.
நமது பூமி மற்றும் கோள்கள், சூரியனை மய்யமாக வைத்துச் சுற்றுகின்றன. சூரியனும் மற்ற அனைத்து விண்மீன்களும் ஒன்றை மய்யமாக வைத்துச் சுழல்கின்றன. அது என்ன? அடுத்த மாதம் பார்க்கலாம்.