தெரியுமா?
காகத்திற்குத் தனியாகக் காதுகள் கிடையாது. கண்களுக்குப் பின்புறம் உள்ள சிறு துவாரமே கேட்கப் பயன்படுகிறது.
உயரமாகவும் வேகமாகவும் பறந்து செல்வன ஆர்ட்டிக் டர்ன் பறவைகள். ஒரே நேரத்தில் 1 முதல் 3 முட்டைகள் வரை இடும். ஆண்டுதோறும் ஆர்ட்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகா பகுதிக்குப் பறந்து செல்லும். (19 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம்) ஒரே ஆண்டில் 2 கோடை காலத்தைப் பார்க்கின்ற பறவை இது. தன் வாழ்நாளில் பறக்கின்ற தூரத்தை நிலவுக்குச் சென்றுவரும் தூரத்துடன் ஒப்பிடலாம்.
புளோவர் என்ற பறவைக்கு முதலையின் பல் இடுக்குகளில் உள்ள பொருள்கள்தான் மிகவும் பிடிக்குமாம். முதலையின் வாய்க்குள் உட்கார்ந்து கொண்டு அங்குள்ள உணவுத் துணுக்குகளையும் சிறு புழுக்களையும் சாப்பிட்டு முதலையின் பற்களைச் சுத்தப்படுத்துமாம். இந்தப் பறவை சாப்பிடும்போது, முதலையானது சுகமாக வாயைத் திறந்து காட்டிக் கொண்டிருக்குமாம்.
வாழும் பறவை இனங்களில் மிகப் பெரியது நெருப்புக்கோழி. மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் ஓடக் கூடியது. இதன் முட்டையானது 1 கிலோ 350 கிராம் இருக்கும். நீர் அருந்தாமல் பல நாள்கள் வாழும். எதிரிகள் தாக்க வந்தால் தலையை மண்ணில் புதைத்துக் கொள்ளும்.
நியூசிலாந்து நாட்டில் உள்ள கக்காபோ கிளிகளுக்குப் பறக்கத் தெரியாது.
மனிதர்களைப் போல் சிரிக்கக் கூடிய பறவை கூக்குபரா.
தையல் சிட்டு என்ற பறவை பெரிய இலை அல்லது இரண்டு மூன்று சிறிய இலைகளை எடுத்துக் கொள்ளும். இலையைச் சுருட்டி இரண்டு பக்கங்களிலும் துளையிட்டு நாரால் கூட்டினைக் கட்டிவிடும். பின்னர் அதில் நார், பஞ்சு போன்றவற்றை நிரப்பி முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும்.
எகிப்திய கழுகுக்கு மிகவும் பிடித்தமான உணவு நெருப்புக் கோழியின் முட்டைகள் ஆகும். கடினமான ஓட்டையுடைய முட்டையை அலகால் கொத்தி உடைக்க முடியாது என்பதால் பெரிய பெரிய கற்களை முட்டைமீது தூக்கிப் போட்டு உடைத்துச் சாப்பிடும்.
புளோவரைத் தவிர பிற பறவைகளை இரையாகச் சாப்பிட நினைக்கும் முதலை, தன்மீது குச்சிகளைப் பரப்பியபடி, அமைதியாக நீரில் காத்திருக்கும். கூடுகட்ட குச்சிகளைக் தேடிவரும் பறவைகள் குச்சிகளை எடுக்க அருகில் வந்ததும் பிடித்துச் சாப்பிட்டு-விடும்.