நம்ம பூட்டன் – பூட்டி எலி
மிருகக்காட்சி சாலையில், வெள்ளை எலி-யைப் பார்த்திருப்பீங்க. அது சும்மா பொசு பொசுன்னு முசக்குட்டி –_ அதான் _ முயல் மாதிரியே இருக்கும். வெள்ளை எலி_சரி, குட்டி எலி? ஓ… வீட்ல நிறைய பார்த்திருக்கோமேன்னு நீங்க போடற கலகக்குரல் கேட்குது; கேட்குது. அதுசரி, பெருச்சாளி? என்ன குரலையே காணோம். ஒன்னுமில்ல, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்துக்குப் போனீங்கன்னா நிறைய்…யா பார்க்கலாம்.
எலியிலேயே கொஞ்சம் பெரிய எலிதான், பெருச்சாளி. சில பெருச்சாளி பன்றிக்குட்டி அளவுலகூட இருக்கும். என்ன திகைச்சுப் போயிட்டீங்களா? பன்றிக்குட்டி அளவுன்னு சொன்னதுக்கேவா? பன்றிக் குட்டியே எலியிலிருந்து வந்ததுன்னு சொன்னா? இருங்க, இருங்க நானே சொல்லிடறேன்.
எவால்வேசன் தியரி; பரிணாம வளர்ச்சி; உருமலர்ச்சிக் கொள்கை, அப்படின்னு இந்த மூனுல ஏதாவது ஒன்றை நீங்க கேட்டிருப்பீங்க. சார்லஸ் டார்வின் பற்றியும் படிச்சிருப்பீங்க. இந்தக் கொள்கைப்படி எலி-_யிலிருந்துதான் பன்றி, கரடி, யானை, சிங்கம், புலி, குதிரை, மான், குரங்கு ஆகிய விலங்குகள் தோன்றியதாம்.
அதுக்கப்புறம்தான் மனித இனமான்னு ஒரு குரல் கேட்குதே. ஆமாம். அதுக்கப்புறம்தான் மனித இனம். இந்த எலிதான் உருமலர்ச்சிக் கொள்கை வரலாற்றின் மய்யப் பகுதி. அதாவது, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிற நிலை மாறி தரையில் குட்டி போடும் பாலூட்டிகளில் எலிகள்தான் முதலாம்.
இனிமேல் எலியைப் பார்த்தீங்கன்னா அதை விரட்டி அடிக்கும்போது, இந்த வரலாற்றையும் கொஞ்சம் நினைச்சுப் பாத்துக்குங்க. இதெல்லாம் பூனையோட வேலை. நமக்கெதுக்கு இந்த வம்புங்கிறீங்களா? அதுவும் சரிதான்.