கருணையல்ல நாங்கள் கேட்பது சமவாய்ப்பே! பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை
மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற பெரியார் 1000 வினாவிடைத் தேர்வு 23-08-2014 அன்று தொடங்கி பல்வேறு கட்டங்களில், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் சேர்த்து நூறாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியிருக்கின்றனர். அவ்வளவுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று எல்லா தரப்பினரிடை யேயும் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன் காரணமாக இந்த ஆண்டு இன்னும் ஒரு படி மேலே போய் இந்தத் தேர்வு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுடன் பிரெஞ்சு மொழியிலும் நடத்தப்பட்டுள்ளது. இதையும் தாண்டி உலகெங்கிலும் இருந்து இணையம் மூலமாக இத்தேர்வை (www.periyarquizter.com) எழுது வதற்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு கூடுதலாக பார்வை மாற்றுத் திறனாளிகளும் பெரியார் 1000 வினா விடைத் தேர்வை எழுத வேண்டும் என்ற கோரிக்கை வந்தவுடன் உடனடியாக அதற்குச் செயல் வடிவம் கொடுத்தார் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மானமிகு வீ. அன்புராஜ் அவர்கள். விடுதலை நிர்வாக ஆசிரியர் கவிஞர். கலிபூங்குன்றன், சேலம் செல்வராஜ் ஆகியோர் இதற்கு உறுதுணையாக இருந்தனர்.
ஏற்கெனவே, ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புவரை உள்ள மாணாக்கர்களுக்கு பெரியார் 1000 புத்தகமும், பத்தாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலுள்ளவர்களுக்கு சிந்தனைச் சோலை பெரியார் என்ற புத்தகமும் தயாரிக்கப்பட்டு உரியவர்களுக்குக் கொடுக்கப்பட்டு படித்துக் கொண்டிருந்தனர். தேர்வுகள் ஏறக்குறைய நெருங்கிவிட்டன. இந்தச் சூழ்நிலையில்தான் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக பிரெய்லி முறையில் புத்தகங்கள் போர்க்கால அடிப்படையில் தயாரிக்கப்பட்டன.
முதல் கட்டமாக தமிழ்நாட்டில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகளில் அரசு, தனியார் இரண்டையும் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு பள்ளிகள் மட்டும் தெரிவு செய்யப்பட்டன. அதில் மொத்தம் 1520 மாணாக்கர்கள் படித்துக் கொண்டிருந்தனர். தமிழகம் மற்றும் புதுவையிலிருக்கும் பள்ளிகளில் முறையான அனுமதி பெறப்பட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அவர்களது தலைமையில் அதே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அடங்கிய ஒரு குழுவின் மூலம் இந்தப் பணிகள் நடத்தப்பெற்றன.
எதிர்பார்த்ததைக் காட்டிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான எல்லா பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்தனர். விரைவாக மாணவர்கள் படிப்பதற்காக பெரியார் 1000 புத்தகத்தைப் படிக்கச் சொல்லி அதை அய்பாட் (ipod) மூலம் குரலைப் பதிவுசெய்து, அந்தப் பதிவை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பதிவு செய்து கொடுத்து படிக்க வைத்திருக்கிறார்கள். இயல்பாகவே பார்வை மாற்றுத்திறனாளிகள் திறமைசாலிகள்.
மற்றவர்களைக் காட்டிலும் நினைவுத்திறன் இவர்களுக்குக் கூடுதல். அதுமட்டுமல்ல, பாடல் எழுதி மெட்டமைத்துப் பாடுவது, பலகுரலில் பேசுவது, நடிப்பது, எழுதுவது என்று ஏராளமான திறமைகள் இவர்களிடம் கொட்டிக் கிடக்கிறது. ஆகவே, இவர்கள் கருணையை விரும்புவதில்லை. சமவாய்ப்பையே விரும்புகின்றனர்.
அப்படிப்பட்ட வாய்ப்புக் கிடைத்தால் தாங்களாலும் மற்றவர்களைப் போல சாதிக்க முடியும் என்று கூறுகின்றனர். அப்படிச் சாதித்து அய்.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்று ஆட்சியாளராக வெனோ ஜெசி தேர்வு பெற்றிருக்கிறார். பலர் வங்கித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு வங்கிப் பணிகளிலும், இன்னும் ஆசிரியர்களாகவும், பேராசிரியர் களாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை தேனாம்பேட்டையிலுள்ள லிட்டில் ஃபிளவர் மேல்நிலைப் பள்ளி, அடையாறிலுள்ள புனித லூயிஸ் மேல்நிலைப் பள்ளி, பூவிருந்தவல்லியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, திருச்சி புத்தூரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூரிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, திருநெல்வேலியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, சேலம் செவ்வாய் பேட்டையிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளி, மதுரை பரவையிலுள்ள செயின்ட் ஜோசப் பள்ளி,
சுந்தரராஜன்பட்டியிலுள்ள இந்திய பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி பிள்ளைச்சாவடியிலுள்ள ஆனந்தரங்கம்பிள்ளை சிறப்புப் பள்ளி, கன்னியாகுமரி அய்ரேனிபுரத்திலுள்ள சி.எஸ்.அய். பார்வையற்றோர் பாடசாலை, கிருட்டிணகிரி பர்கூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி என்று மொத்தம் பன்னிரெண்டு பள்ளிகளில் 415 பார்வை மாற்றுத்திறனாளிகள் பெரியார் 1000 தேர்வை எழுதியிருக்கின்றனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவரவர்களுக்கு உரிய பரிசுகளும், கூடுதலாக ரூபாய் 500 மதிப்புள்ள புத்தகங்கள் எடுத்துச் செல்கின்ற பையும் (Shoulder Bag) வழங்கப் பட்டது. எல்லா பள்ளிகளிலும் தேர்வு எழுதாத மற்ற மாணவர்களுக்கும் சேர்த்தே இனிப்பும் காரமும் வழங்கப்பட்டது.
தேர்வு நடைபெற்ற பன்னிரெண்டு பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 415 மாணவர்கள் கலந்து கொண்டனர். வினாக் களையும், விடைகளையும் படித்துக் காட்டி, மாணவர்கள் சொல்கின்ற சரியான விடையை குறித்துக் கொள்கின்ற முறையில் (Scribes) பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் 415 ஒருங்கிணைப் பாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையெல்லாம் தாண்டி இந்த பெரியார் 1000 வினாவிடைத் தேர்வு மாற்றுத்திறனாளர் களைப் பற்றிய ஒரு சரியான புரிதலை நம் அனைவருக்குமே கற்றுத் தந்தது. இதை யெல்லாம் பார்த்தபோது மனமும், எண்ணமும் மட்டும் திடமாக இருந்தால் போதும், எதையும் சாதிக்கலாம் என்று தோன்றுகிறது. இந்தப் படிப்பினையை நாம் கற்றுக்கொள்ளக் காரணமாக இருந்த பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு எவ்வளவு நன்றி வேண்டுமானாலும் சொல்லலாம்.