பிரபஞ்ச ரகசியம் – 18
அழகிய ஏழு விண்மீன்கள்
– சரவணா இராஜேந்திரன்
மனித குலம் தனக்கு அறிவு வளர்ந்த காலத்தில் இருந்து திறந்த வானத்தையே மேற்கூரையாகக்கொண்டு வாழ்ந்து வந்தது. அப்போது வானத்தில் உள்ள விண்மீன்கள் அனைத்தும் அவனுக்குப் புதுமையாகப் பட்டது மட்டுமல்ல, பூமியில் நடக்கும் நிகழ்வுகளை அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.
அதாவது, பெருமழை பெய்யும் காலங்களில் உள்ள வானம், கடுங் குளிர்கால வானம், கோடைக்கால வானம், மற்றும் வசந்தகால வானம் என பிரித்துப் பார்த்தான். தான் பார்த்த விண்மீன்களை இணைத்து சில கற்பனை உருவங்களாக எண்ணினான். இந்தக் கற்பனை உருவங்களுக்கும் புவியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு என்று எண்ணிக் கொண்டான்.
இதில் குளிர்கால வானம் அக்கால மனிதனுக்கு மிகவும் பிடித்துப் போனது. காரணம், குளிர்காலத்தில் இரவு நீண்டு இருக்கும். அதுபோலவே வானம் மிகவும் தெளிவாக இருக்கும். இந்தக் காலத்தில் மிகவும் அதிகமாக மனிதன் தனது கற்பனைக் குதிரையைப் பறக்கவிட்டான். அவனது கற்பனைக்குத் தீனிபோடும் விதமாக வானத்தில் நட்சத்திரங்களும் பல்வேறு அழகிய வடிவங்களைக் காட்டிவரும்.
இந்திய மரபில் குளிர்கால வானம் என்றாலே சட்டென நினைவிற்கு வருவது கார்த்திகை விண்மீன்கள் கூட்டம் எனப்படும் பிளேய்டஸ் (Pleiades) என்ற விண்மீன் கூட்டம். இக்கார்த்திகை விண்மீன் கூட்டம் நாம் இதற்கு முந்தைய தொடரில் பார்த்த விண்மீன் குழுமம் அல்ல; கார்த்திகை விண்மீன் கூட்டம் என்பது மிகவும் அருகருகே உள்ள விண்மீன்களின் தொகுப்பாகும். நமது கண்களுக்குத் தெளிவாகத் தெரியும் ஒரு சில விண்மீன் கூட்டங்களில் இதுதான் அதிகமாக மனிதர்களை ஈர்த்த விண்மீன் கூட்ட-மாகும்.
இரவு நேரம் கிழக்கு வானில் பார்வையைச் செலுத்தினால் திருவிழா கூட்டத்தில் ஒளிரும் தோரணவிளக்குப் போன்று குறுகிய இடத்தில் சில விண்மீன் கூட்டம் மிளிர்வதைக் காணலாம். இதற்குத்தான் கார்த்திகை விண்மீன்கள் என்று பெயர். இதன் அருகில் முழுநிலவு வரும் போதுதான் கார்த்திகை மாதம் பிறக்கிறது.
பொதுவாக இது உலகம் முழுவதிலும் பல்வேறு மக்களின் உள்ளங்களை ஈர்த்துள்ளது. அதனால்தானோ என்னவோ புவியில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இதைப் பற்றி தங்களுக்குத் தோன்றிய கற்பனைக் கதைகள் பலவற்றைச் சொல்லியுள்ளனர். (ஆனால் இந்தியர்கள் மட்டும் மிகவும் மோசமான கதையைச் சொல்லி அதை கடவுள் பிறப்புடன் இணைத்துவிட்டார்கள்.)
அக்காலத்தில் செவ்விந்திய மருத்துவர்கள் கண்பார்வை சரியாகத் தெரிகிறதா என்பதைப் பரிசோதிக்க கார்த்திகை விண்மீன் கூட்டங்களைக் காட்டி ஏழு விண்மீன்கள் தெரிகிறதா? என்று கேட்டுள்ளார்கள். அதாவது, நன்கு தெளிவான பார்வைத்திறன் உள்ளவர்களுக்கு அருகருகே ஏழு பிரகாச விண்மீன்கள் தெரியும்.
சாதாரண தொலைநோக்கி கொண்டு நோக்கினால் 30 முதல் 100 விண்மீன்கள் வரை தெரியும், நவீன தொலைநோக்கி கொண்டு பார்த்தால் 400 விண்மீன்கள் பல்வேறு வண்ணங்களில் மிளிரும் அழகைக் காணலாம். இந்த ஏழு விண்மீன்களும் அக்காலத்தில் உலகம் முழுவதிலும் பல்வேறு கற்பனைக் கதைகள் பரவக் காரணமாகிவிட்டன.
இந்த விண்மீன்கள் பற்றிய கற்பனைக் கதையில் தென் அமெரிக்கப் பழங்குடியினர் வணங்கும் ஜூசே என்ற கடவுளுக்கு ஏழு பெண்களாம், அவர்கள் அனைவரும் மிகவும் செல்லமாக வளர்ந்தனராம். அவர்கள் ஒருநாள் காட்டிற்குள் ஆடல்பாடலுடன் இருக்கும் போது கடவுளின் எதிரியான ஓரியன் அங்கு வந்துவிடுகிறானாம்.
இதனைக் கண்டதும் பயந்துபோய் அந்த ஏழு சகோதரிகளும் ஓட ஆரம்பித்து விடுகிறார்கள். இதனைக் கண்ட அவர்களது தந்தை ஜூசே அவர்கள் அனைவரையும் வானத்தில் விண்மீனாக்கி விடுகிறாராம். அன்றிலிருந்து இன்றுவரை அந்தச் சகோதரிகள் வானத்தில் ஆடிப்பாடிக் கொண்டு இருக்கின்றனராம்.
இதே போல் ஆப்பிரிக்காவில் கடல்பூதம் ஒன்று ஏழு தேவதைகளைச் சாப்பிட வந்ததாம், உடனே அவர்கள் வானத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டார்களாம். அவர்கள் அப்படிப் பறந்து செல்லும் போது வானவலையில் சிக்கிக் கொண்டு அப்படியே நின்றுவிட்டார்களாம்.
சீனத்தில் மிகவும் வித்தியாசமான கதை உண்டு. சீனாவில் இந்த விண்மீன் கூட்டம் தோன்றும் போது மழைக்காலம் தொடங்கும்.
மழைக்காலத்தில் பொதுவாக இருக்கும் இடி, மின்னல் வானவில்லுடன் இணைத்து அழகான கதை ஒன்றைக் கூறியுள்ளார்கள். இயற்கையின் கடவுளான யூ-ஹுயூ-பூசா தனது ஏழு குழந்தைகளுடன் வனத்தில் வாழ்ந்து வந்தாளாம். ஒரு நாள் தனது குழந்தைகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு இருந்தபோது குழந்தைகள் ஒளிந்து கொள்ள வானவில்லில் ஏறி வானத்திற்குள் சென்று-விட்டார்களாம்.
ஆம், முன்பெல்லாம் வானவில் நீளமாக இருக்குமாம். அவர்களை யூ தேடிக்கொண்டு இருந்தபோது திடீரென வானில் இருந்து மின்னல் மின்னி இடி இடித்ததால் வானத்தின் பாதை வளைந்து-விட்டதாம். இதனால் அந்தக் குழந்தைகளால் இன்றுவரை தரைக்கு வரமுடியவில்லையாம். இதனால் யூ கடலாக மாறி தனது குழந்தைகளைப் பிம்பமாக தனக்குள் வைத்துக்கொண்டாளாம்.
ரஷ்யர்கள் பனிக்கரடிக்குப் பயந்து வான்வெளிக்குச் சென்று விட்ட ஏழு சகோதரிகளாகப் பார்க்கின்றனர்.
அமெரிக்காவில் அக்டோபர் 31 ஆம் தேதி ஹலோவின் (HALOOWEN) என்ற விழா கொண்டாடுவதைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதாவது, அனைவரும் சூனியக்காரி போன்று வேடம் போட்டு மற்றவர்களைப் பயமுறுத்துவார்கள். இந்த விழா கொண்டாடுவதற்கும் இந்த விண்மீன் கூட்டம்தான் காரணம், ஆம், வட அமெரிக்கர்கள் இந்த விண்மீன் கூட்டத்தை சூனியக்காரியின் கைத்தடியில் ஒளிரும் விண்மீன்களாகப் பார்த்தனர்.
மேலும், இந்த விண்மீன்களை இறந்தவர்களுடன் இணைத்துப் பார்த்தனர். இப்படி கற்பனைக்கு எல்லையில்லாமல் உலகின் பல பகுதிகளில் கதைகள் நிலவியிருந்தாலும் அவை அனைத்தும் அறிவியலுக்கு ஒவ்வாதது-தானே!
புவியிலிருந்து 400 ஒளியாண்டுத் தூரத்தில் உள்ள இந்த விண்மீன் கூட்டம் விண்மீன் கொத்து வரிசையில் எம்24 என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த பிளாடாய்ஸ் விண்மீன் கூட்டத்தில் உள்ள விண்மீன்கள் ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கான ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள விண்மீன்கள் ஆகும். இவை அனைத்தும் செம்பூதங்கள் எனப்படும் ரெட்ஜெய்ண்ட் விண்மீன்கள். இவை நமது சூரியனைவிட 40,000 அல்லது அதைவிடப் பெரிய விண்மீன்கள்.
இன்று நாம் பார்க்கும் விண்மீன்கள் இக்கூட்டதில் உள்ள விண்மீன்களில் பலவற்றின் ஒளி நமது சூரியன் பிறப்பதற்கு முன்பே தன்னுடைய ஆற்றலை இழந்து இறந்த விண்மீன்களாக மாறியிருக்கும்.
சில பல்சர் விண்மீன்களாக, அதாவது தனது ஆற்றலை மிக அதிக வேகமாக வெளியேற்றிக் கொண்டு இருக்கும் விண்மீன்களாக மாறியிருக்கும். ஆம், நாம் பார்க்கும் இந்த விண்மீன் கூட்டம் குறைந்தபட்சம் 600 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புறப்பட்ட வெளிச்சத்தைத்தான் பார்க்கிறோம்.
இப்போது நாம் இந்த விண்மீன்களை நோக்கிச் சென்றால் உண்மையில் அங்கு சில விண்மீன்கள் அல்லது விண்மீன்களே இல்லாத வெற்றுவெளிதான் கிடைக்கும்.
அடுத்த தொடரில் குளிர்கால வானத்தின் அரசனான ஓரியன் பற்றித் தெரிந்து கொள்வோம்.