பூக்கள் – தெரியுமா?
கிளிப் பூ (Parrot Flower) தாய்லாந்தில் காணப்படுகிறது. பறக்கும் கிளி வடிவத்தில் காணப்படும் இந்தப் பூவின் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு வண்ணங்களில் அமைந்து பஞ்சவர்ணக் கிளியை நினைவுப்படுத்துவது-போல உள்ளது (Impatiens psittacina).
உதடுகள் ஏதோ முணுமுணுப்பதைப் போல மிக அழகாக சிவப்பு வண்ணத்தில் காணப்படும் இந்த இதழ் சைகோடிரியா எலாட்டா என்னும் தாவரத்தினுடையது. மழை அதிகம் பெய்யும் கொலம்பியா, கோஸ்டாரிகா, பனாமா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் இதற்கு ஹூக்கர்ஸ் லிப்ஸ் Hooker’s lips என்ற பெயரும் உண்டு. இரு இதழ்களுக்கு நடுவிலிருந்து குட்டிக் குட்டிப் பூக்கள் பூக்கின்றன.
உலகின் மிகப் பெரிய மலராக ரஃப்லெசியா அர்னோல்டி (Rafflesia Arnoldi) கருதப்படுகிறது. இந்தோனேசியா, சுமத்ரா தீவுகளில் அரிதாகக் காணப்படும் இந்தப் பூ மூன்று அடி விட்டத்தையும் 10 கிலோ வரை எடையையும் கொண்டதாகும். அழகாகப் பூத்துக் கண்ணுக்கு விருந்தளிக்கும் இந்தப் பூ அழுகிய இறைச்சி போன்ற வாசனையைக் கொண்டுள்ளதால் கார்ப்ஸ் பூ (Corpse Flower) என்றும் அழைக்கப்படுகிறது. பூவின் நடுவில் உள்ள கிண்ணம் போன்ற குழியில் 10 லிட்டர் தண்ணீர்வரை பிடிக்குமாம். ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த இந்தத் தாவரத்திற்குத் தனியாக இலை, தண்டு கிடையாது.
வட அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் பிளீடிங் ஹார்ட் பூக்கள் காணப்படுகின்றன. சிவப்பு, வெள்ளை மற்றும் பிங்க் நிறங்களில் இவை கண்களைக் கவர்கின்றன.
வெளியில் அழகான பிங்க் மற்றும் இளஞ்சிவப்பு இதழ்கள் நெருக்கமாக அமைந்து உள்ளே மென்மையான வெள்ளை இதழ்களைக் கொண்டுள்ள துலிப் பல்ப்ஸ் மலரைப் பார்க்கும்போது அய்ஸ் கிரீம் சாப்பிடத் தோன்றுகிறதா?
டைட்டன் ஆரம் (Amorphophallus Titanum) என்று அழைக்கப்படும் இந்தப் பூ கிளையில்லாத தாவர வகையினைச் சேர்ந்தது. மூன்று அடி உயரம் வரை இருக்கும் இந்தப் பூவானது அழுகிய இறைச்சி வாசனையைக் கொண்டிருப்பதால் ரஃப்லெசியா போன்றே இதுவும் கார்ப்ஸ் பூ (Corpse Flower) என அழைக்கப்படுகிறது. இந்த மணம் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்ந்து இழுக்குமாம்.
களைச்செடி என நம் நாட்டில் வெட்டி எறியப்படும் இந்தப் பூ ஆங்கிலத்தில் (Galinsoga Parviflora) என அழைக்கப்படுகிறது. மூக்குத்தியைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதால் மூக்குத்திப் பூ எனவும் அழைக்கப்படுகிறது. தென் அமெரிக்காவில் இந்தப் பூ மசாலாவில் பயன்படுத்தப்படுகிறது.