கண்டுபிடிப்புகள்
மரத்துகளிலிருந்து பெட்ரோல்
பெட்ரோல், மின்சாரம், தண்ணீர் என எத்தனையோ மாற்றுத் தேவைகளை வளர்ந்து வரும் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு ஈடு செய்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.
புதுவிதமான எரிபொருளை உருவாக்குவதிலும் பல வழிகளில் எரிபொருளைப் பெறுவதிலும் பலவிதமன ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
பெட்ரோலியம் போன்ற எரிபொருள்கள் பூமிக்கு அடியில் புதைந்து மக்கி அழுகிய மரங்களில் இருந்துதானே கிடைக்கின்றன, எனவே மண்ணில் நேரடியாகக் கிடைக்கும் மரக் கழிவுகளைப் பெட்ரோலியப் பொருளாக மாற்ற முடியுமா என்ற அறிவியலாளர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
மரத் துகள்களைப் பல்வேறு ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தி கச்சா எண்ணெய்ப் பொருளாக மாற்றும் வழியினை பெல்ஜியத்தைச் சேர்ந்த கே. யு. லியுவென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை ஓர் உயர் சுத்திகரிப்பு முறை என்று கூறலாம். மர ஆலைகளில் கிடைக்கும் மரத் துகள்களைச் சேகரித்து நாங்கள் உருவாக்கியுள்ள வேதிவினைக் காரணியுடன் சேர்க்கும்போது அவை மரத் தாதுவுடன் ஹைட்ரோகார்பன் சங்கிலி இணைப்பை (அல்கேன்கள்) உருவாக்கும். அல்கேன்கள் எனப்படும் வேதிவினைக் கலவையானது கச்சா எண்ணெய் போலவே இருக்கும்.
இதிலிருந்து பெட்ரோலியத்தைப் பிரித்தெடுப்பதுடன் எத்திலீன், புரப்பலீன் போன்ற ரசாயனப் பொருள்களையும் பெற முடியும். இவற்றைக் கொண்டு ரப்பர், நைலான், காப்பு நுரைகள், பிளாஸ்டிக் போன்றன தயாரிக்கலாம் என டாக்டர் பெர்ட் லாக்ரென் கூறியுள்ளார்.
மேலும் அவர் தாவரக் கழிவுகள், அறுவடையில் மிஞ்சிய பயிர்கள் என பிற இடங்களில் கிடைக்கும் மரத் துகள்களில் இருந்தும் பெட்ரோல் தயாரிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
அவசர காலக் கதவை உடைக்கும் கருவி
பேருந்து, ரயில், மகிழுந்து, கப்பல், விமானம்… என எதில் பயணம் செய்தாலும், விபத்து என்பது எதிர்பாராமல் நடந்துவிடுகிறது. இவற்றுள், பேருந்தில் பயணம் செய்யும்போது ஏற்படும் ஆபத்துகளிலிருந்து அவசர கால வழி மூலம் தப்பிக்க உதவும் கருவியினை திருப்போரூர் எஸ்.எஸ்.என். கல்லூரி மாணவி ஸ்வேதா உருவாக்கியுள்ளார்.
பேருந்து விபத்துக்குள்ளானால் அதில் பொருத்தப்பட்டுள்ள ஆக்சிலரோ மீட்டர் என்ற சென்சார் அவசரகாலக் கதவை உடைக்க வழிவகுக்கும். பேருந்தில் நெருப்போ நச்சு வாயுவோ கசிந்தால், பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மோக் சென்சார் அதனை உணர்ந்து கதவை உடைக்கும். மூன்றாவதாக, பேருந்து தண்ணீரில் விழுந்தால் லிக்விட் சென்சார் கதவை உடைக்கச் செய்யும்.
ஸ்வேதா கண்டுபிடித்துள்ள இந்தக் கருவியானது கண்ணாடிக் கதவை உடைக்கும்போது எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாதபடி வெளிப்புறம் நோக்கியே உடைக்கும். 1,200 ரூபாய் செலவில் பல உயிர்களைக் காப்பாற்றும் கருவியை இவர் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.