pk படம் பார்த்துட்டீங்களா?
நம்ம ஊரு மூடநம்பிக்கைகளைப் பற்றிச் சொல்லும்போது இதையெல்லாம் வெளிநாட்டுக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்? என்று நாம் சொல்வதுண்டு. நம் நாட்டின் முட்டாள்தனங்கள் உலகெங்கும் பிரபலமாகிவிட்டதால் அவர்களுக்கெல்லாம் அது பழகிப் போய்விட்டது.
ஒரு வேளை வேற்றுக்கிரகத்திலிருந்து யாராவது ஒருவர் வந்தால், அவர் இந்த மூடத்தனங்களைப் பார்த்து என்ன ஆவார் என்பதுதான் கதை. கேட்கவே விறுவிறுப்பாக இருக்கிறதல்லவா? இந்தியில் ராஜ்குமார் இரானி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் வெளிவந்துள்ள படமான பி.கே தான் இந்தக் கதைக் களத்தைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு காட்சியிலும் சிந்தனையைத் தூண்டும் வசனங்கள், பேசாமலேயே புரிய வைக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் என்று ரசிக்கும்படி உள்ளது பி.கே. இந்தியில் படம் வெளிவந்திருந்தாலும், ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் (English Subtitles) படத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
மதவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னையின் திரையரங்கு ஒன்றில் ஒரு முழுக் காட்சியையும் தோழர்களுடன் சென்று பார்த்தார் நம் ஆசிரியர் தாத்தா. அப்பப்பா… சிரித்து மகிழ்ந்து அந்த அரங்கமே அதிர்ந்தது.
தமிழிலும் இந்தப் படம் வெளிவரக்கூடும். அதற்குமுன் இப்படத்தை குடும்பத்துடனோ, பள்ளியுடனோ இப்போதே கூடப் பார்த்துவிடலாம். அது சமூகத்திற்கும் நமக்கும் பயனுள்ள நேரமே!