பறங்க….. பறங்க…. பறங்க….
குறுக்குப் பாதையில் செவ்வாய் பயணம்
நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது Shortcut Route ஏதேனும் உள்ளதா என யோசிப்போமே அதேபோல் செவ்வாய் கிரகத்திற்கு எளிமையான முறையில் குறுகிய வழிப் பாதையில் செல்ல முடியுமா என அறிஞர்கள் சிந்தித்தனர்.
சிந்தித்ததன் பயனாக பாலிஸ்டிக் கேப்சர் என்ற முறையினை உருவாக்கி வருகின்றனர். விண்வெளிக் கலங்களை அனுப்பும்போது பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாவதுடன், செவ்வாய் கிரகத்தைச் சென்றடைய பல மாதங்களும் ஆகின்றன. மேலும் செல்லும் வழியில் விண்வெளிக் கலங்கள் வெடித்துச் சிதறுவதற்கும் வாய்ப்புள்ளது.
இதனைத் தவிர்க்கும்வகையில் உருவாக்கப்பட்டு வருவதே பாலிஸ்டிக் கேப்சர் முறையாகும். இதன்மூலம் ஆளில்லாத விண்வெளிக் கலங்களையும் மனிதர்களையும் எளிமை-யாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உளவு பார்க்கும் ரோபோட் பூச்சிகள்
ஆளில்லா விமானங்களை உளவு பார்க்க அனுப்பிய காலம் போய், தற்போது சிர்கோனியம் டைடனேன்ட் என்ற உலோகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ரோபோட் இறக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மூன்று முதல் அய்ந்து செ.மீ. நீளம் கொண்ட இந்த இறக்கைகளில் அதிகபட்ச மின் அலைகளைச் செலுத்துவதன் மூலம் வளைக்கவும், முன்னும் பின்னும் அடித்துக் கொள்ளச் செய்யவும் முடியும். இதற்குக் கால்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இறக்கைகளையும், கால்களையும் முழு அளவில் இயங்கச் செய்துள்ள அமெரிக்க இராணுவ ஆராய்ச்சியாளர்கள் பிற பாகங்களையும் இணைத்து ஒரு சிறிய பூச்சி வடிவில் உருவாக்க உள்ளனர். ரோபோட் பூச்சிகள் உளவு பார்க்க இன்னும் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் ஆகும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்கொரு ஹெலிகாப்டர்
இரு சக்கர வாகனமாக நாம் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளில் ஹெலிகாப்டரின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் முதல் பறக்கும் மோட்டார்சைக்கிளான ஹோவர்பைக் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டருடன் ஒப்பிடும்போது மிகவும் விலை குறைந்த, மலிவான, வலிமையான, ஒப்பிட முடியாத பயன்படுத்துவதற்கு எளிதான வாகனம் ஆகும். பறப்பதற்கு முற்றிலும் புதிய வழிமுறையினைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நடுவில் உள்ள வெற்றிடத்தில் மனிதன் அமர்ந்தோ அல்லது மனிதன் இல்லாமலோ பறந்து செல்லும் ஹோவர்பைக் முற்றிலும் பாதுகாப்பானது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இதில் பொருள்களை வைத்து அனுப்பலாம். சிறிய அளவில் வான்வழியே பயணிக்க மிகுந்த பயன்மிக்கது. சென்சார் மூலமாக இயங்கக் கூடியது.