’சும்மா மொக்க போடாதீங்க’
’காற்றும் காலடித் தடமும்’
இந்தப் பூமியில, இயற்கையாகவே ஒவ்வொரு விசயத்திற்கும் பல்வேறு பயன்பாடுகள் இருக்கு. நாம, நமக்குன்னு எதைப் பயன்படுத்தறமோ, அதற்கான செயல்பாட்டை மட்டும்தான் கவனத்தில வச்சுக்குவோம். இப்ப, எடுத்துக்காட்டா, காற்றுன்னு சொன்னாலே, நாம அனுதினமும் மூக்கு வழியா உள்வாங்கி, கார்பன் டை ஆக்சைடா வெளிய விடற மூச்சுக்காற்று பற்றிதான் நினைப்போம்.
அதுவும்கூட நிழலின் அருமை வெயிலில் தெரியும்னு சொல்ற மாதிரி, மூச்சு முட்டும்போதுதான் அதோட அருமையை உணர்வோம். இதப் பத்திப் பாக்கறதுல கேட்கறதுல, பிடிக்கறதுல அறிவியல் விளக்கங்களைத் தவிர்த்துப் பேச, எழுத எவ்வளவோ இருக்கு.
நான் பலமுறை சென்னைக் கடற்கரைக்குப் போயிருக்கேன். அப்ப, ஈரமணலில் உட்கார்ந்து தண்ணீரையும், அலைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, மணலுக்-குள்ளிருந்து சிறுசிறு நண்டுகள் துடுக் துடுக்னு வெளிய வந்து, துறுதுறுன்னு பக்கவாட்டில் பரபரப்பாக ஓடுவதைக் கண்கள் விரிய பார்த்திருக்கிறேன்.
அது ஓடுகிற அழகைவிட, அதன் காலடித்தடங்கள் நம்மை அதிகமாக ஈர்க்கும். பார்த்துக் கொண்டு இருக்க, இருக்க, பின்னாலேயே வருகிற அலை அந்தக் காலடித் தடங்களை மூடிச் சமப்படுத்திவிடும். மணல் வீடு கட்டி, அலை அழித்தபிறகு அழும் குழந்தைபோல, நண்டு அழுதால் எப்படியிருக்கும் என்று நான் குழந்தைபோல கற்பனை செய்திருக்கிறேன். நீங்க? வேற வேலை இல்லீங்கறீங்களா? இதே மாதிரிதான், பாலைவனப் பகுதியில மனிதன் நடந்தாலும் மணல் மூடிவிடும்.
பெரியார் மாதிரி நம்மால பெரிய சாதனை செய்ய முடியலன்னாலும், நம்ம காலடிச் சுவடையாவது பூமியில விட்டுச் செல்லலாம்னு நினைச்சா, அதை நடக்க விடாமத் தடுக்கறதும் இந்தக் காற்றுதான்.
ஆக, காத்து இல்லாம இருந்தாத்தான் இது நடக்கும். அப்படித்தானே? அப்படி ஒரு இடம் பூமியில இருக்கா? வாய்ப்பே இல்லை.
ஏன்? நாம பூமியையே புடிச்சித் தொங்கிக்கிட்டு இருக்கணும்? பூமிக்குப் பக்கத்தில, அதாங்க, 3,84,400 கிலோ மீட்டர் தூரத்தில இருக்கிற நிலவுல பார்த்தா என்ன? அட! சரியாச் சொல்லிட்டீங்க. கடந்த 1969இல் அமெரிக்கா அனுப்பிய அப்பல்லோ மிமி என்கிற விண்வெளிக் கப்பலில் சென்று வந்த நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் இருவரும் நிலவில் இறங்கி நடந்த காலடித் தடம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்கூட இருக்குமாம்.
ம்… பாருங்க. காற்று பற்றிச் சொல்லத் தொடங்கி எங்கெங்கேயோ போயிட்டோம். என்னமோ போங்க. நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரினுக்குக் கிடைச்ச வாய்ப்பு, நமக்கும், நம்மூரு நண்டுக்கும் கிடைக்கலன்னு நினைக்கும்போது, கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு.