உயிர்களை உண்ணும் தாவரங்கள்
உயிர்களை உண்ணும் தாவரங்கள்
தெரியுமா?
கெண்டி அல்லது நெப்பந்திஸ் (Nepenthes) அல்லது குடுவையுருத் தாவரத்தில் சுமார் 70 வகைச் செடி இனங்கள் உள்ளன. தொங்கும் குடுவைகள் (Hanging Pitcher Plant) எனவும் அழைக்கப்-படுகின்றன. பூச்சிகளை உண்ணும் கெண்டித் தாவரங்கள் இலங்கை, மடகாஸ்கர், சீனா, வங்காளம், இந்தியா போன்ற பல நாடுகளில் காணப்படுகின்றன.
மெக்சிகோ நாட்டில் வளரும் பிங்குய் குலா ஜிப்சிகோலா (Pinguicula Gypsicola) ஈக்கள் பிடிக்கும் செடி என அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் நீண்டு, மேல்நோக்கி நீட்டிக் கொண்டு இருக்கும்.
பிங்குய்குலா காடேட்டா எனும் செடி வால் கொண்ட பசைச்செடி (Tailed butter Wort) என அழைக்கப்படுகிறது. இந்தச் செடியில் மலரும் பூக்களில் வால் போன்ற பகுதி தொங்கிக் கொண்டிருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. மெக்சிகன் பசைச்செடி எனவும் அழைக்கப்படுகிறது. ஆர்க்கிட் தாவரங்கள் வளர்க்கப்படும் இடங்களில் இச்செடிகள் உள்ளன. ஆர்க்கிட் செடிகளில் முட்டையிட்டு இனவிருத்தி செய்யும் ஈக்களை ஒழிக்க இச்செடிகள் பயன்படுகின்றன.
இலைகள் மெல்லியதாகவும் நூல் போன்றும் காணப்படும் பிமிலியா லினிபோலியா (Pimelea Linifolia) மேற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் தாவரம் ஆகும். இலை முழுவதும் நெருக்கமாகக் காணப்படும் சுரப்பிகளில் தேன் போன்ற பொருள் சுரக்கும். இதனால் கவரப்பட்டு வரும் பூச்சிகளை உட்கொள்கின்றன.
திரோசிரா (Drosera) வகைச் செடி திரோசெரசியே (Droseraceae) என்ற இரட்டை இலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இதன் இலைகள் அடித் தண்டின் இலைகளாக பூவிதழ் அடுக்குபோல இருக்கும். இலைகளின் முடிகளில் இனிப்பான பசை சுரக்கும். வெயிலில் இந்தப் பசையானது பனித்துளி போல காணப்படும்.
எனவே, சூரியனின் பனி (Sundew) அல்லது பனிச்செடி (Dew Plant) எனவும் அழைக்கப்படுகிறது. இலையின் நிறத்தாலும் மினுமினுக்கும் தன்மையாலும் இத்துளிகளைத் தேன் என நினைத்து வந்து அமரும் பூச்சிகளின் கால்களில் பசை ஒட்டிக் கொள்ளும். இலையில் உள்ள மற்ற கொம்புகளும் வளைந்து வந்து மூடி, பூச்சி செரிமானமான பின் கொம்புகள் பழைய நிலையை அடையும்.
செபலோட்டஸ் (Cephalotus) என்பது செபலோட்டேசியி என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இதில், செபலோட்டஸ் போலிகுளோரிசு என்ற ஒரு இனம் மட்டுமே இப்போது காணப்படுகிறது. இலைகளை ஒட்டி வெளிப்புறத்தில் இலையிலிருந்து மாறுபட்டு ஜாடி போன்றோ கூஜா போன்றோ இலைகள் உள்ளன. குழல் போன்று இருக்கும் ஜாடியின் மேற்பகுதியில் மூடி இருக்கும்.
அதில் நரம்புகள் சிவப்பு நிறத்தில் கீழ்நோக்கி இயங்கும் வகையில் உள்ளன. குடுவையின் வாய் விளிம்புக்குக் கீழே இளம் பச்சையுடன் கூடிய சிவப்புப் புள்ளிகள் காணப்படும் இடத்தில் தேன் சுரப்பிகள் உள்ளன. உள்ளே வழுவழுப்பாக இருக்கும் பகுதியில் பூச்சியின் கால் பட்டதும் உள்ளே விழுந்துவிடும்.
ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா மழைக்காடுகளில் காணப்படும் ஜிம்பி (Gympie) என்ற தாவரம் நாய், குதிரை, மனிதனைக்கூட கொல்லும் ஆற்றல் படைத்தது. இதன் இலை உடலின்மீது பட்டதுமே காயத்தை ஏற்படுத்தி அதனுள் விஷத்தைச் செலுத்திவிடும். உடனே நாம் மருத்துவரை அணுகினாலும், பாதிப்பிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகும்.
நூறு ஆண்டுகளுக்கு முன் பறித்த காய்ந்த இலையினைத் தொட்டாலே வலியை உணர முடியுமாம். செடியின் வேர் தவிர அனைத்துப் பகுதிகளிலும் காயம் ஏற்படுத்தும் மென்மையான முட்கள் நீட்டிக் கொண்டிருக்குமாம்.