இரட்டைக் கோபுரங்கள்
இரட்டைக் கோபுரங்கள்
கண்ணாடி மாளிகை போல் பிரகாசிக்கும் இந்தக் கட்டிடங்கள் மனிதர்கள் வசிப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல. ஜெர்மனி நாட்டின் வோல்ப்ஸ்பர்க் நகரின் ஆட்டோஸ்டட் என்ற இடத்தில் அமைந்துள்ள இவை கார் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டவை.
600 மீட்டர் உயரம் கொண்ட இவற்றில் ஒன்றில் மட்டும் 400 கார்களை நிறுத்த முடியும். ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் என்ற கார் தயாரிக்கும் நிறுவனம்தான் இந்த கண்கவர் கட்டிடத்தை எழுப்பியுள்ளது.
கட்டிடங்கள் இரண்டும் சுரங்கப்பாதையின் மூலமாக ஃபோக்ஸ்வேகன் தொழிற்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் கார்கள் கன்வேயர் பெல்ட் வழியாக தானியங்கி முறையில் உள்ளே கொண்டு வந்து மின்தூக்கி வழியாக நிறுத்தப்படுகின்றன.
முழுவதும் தானியங்கித் தொழில்நுட்பம் கொண்ட கார் நிறுத்தும் கட்டிடங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கட்டிடங்களின் கீழ்த்தளத்தில் அருங்காட்சியகமும் அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பேருந்துப் படகு
நகரங்களில் வசிப்போர் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல வேண்டுமானால் போக்குவரத்தின்போது பலவித இடையூறுகளைச் சந்திப்பர். இதனைத் தவிர்க்க ஜப்பான் நாட்டில் வாட்டர் பஸ் எனப்படும் படகுகள் பயன்படுகின்றன.
ஜப்பான் நாட்டின் டோக்கியோ வளைகுடாவிலுள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஓடய்பாவின் அசகுசா மற்றும் யோகோகு ஆகிய நகரங்களுக்கிடையே ஆற்று வழியில் இந்தப் பேருந்துப் படகு இயக்கப்படுகிறது.
50 நிமிடங்களில் இந்த இடங்களுக்கு மக்களைக் கொண்டு செல்வதற்கான கட்டணமாக 378 ரூபாய் (720 யென்) பெறப்படுகிறது. 33 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பேருந்துப் படகில் ஆடம்பரமான உள்கட்டமைப்பு மற்றும் இருக்கைகளுடன் அகன்ற கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கண்ணாடி மாளிகை ஒன்று ஆற்றில் மிதந்து வருவதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் இந்தப் பேருந்துப் படகு சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளதாம்.