அறிவோம்
அறிவோம்
கங்காரு (KANGAROO)
வயிற்றில் பையுடன் காணப்படும் வினோத விலங்கான கங்காரு ஆஸ்திரேலியாவிலும் நியூகினியாவிலும் அதிக அளவில் காணப்படுகின்றது.
இவை பாலூட்டி (Mammalia) பிரிவில் மார்சுபியல் (Marsupial) என்ற வகையைச் சேர்ந்தன. மார்சுபியல் வகை விலங்குகளுக்கு வயிற்றில் நெகிழும் தன்மையுடைய பை போன்ற அமைப்பு இருக்கும். இந்த வகை விலங்குகளுக்கு முழு வளர்ச்சியடையாத நிலையில்தான் குட்டிகள் பிறக்கும்.
அந்தக் குட்டிகள் முழு வளர்ச்சியடையும்வரை தாய் தன் வயிற்றிலிருக்கும் பையில் வைத்து குட்டியை வளர்க்கும்.
கங்காருக்கள் மார்சுபியல் வகையில் மேக்ரோபாட் (Macropod) என்ற பிரிவினைச் சேர்ந்தவை. மேக்ரோபோட் என்பதற்கு மிகப் பெரிய பாதங்களைக் கொண்டவை என்பது பொருளாகும்.
சிவப்பு கங்காரு, ஈஸ்டர் க்ரே கங்காரு, வெஸ்டர்ன் க்ரே கங்காரு, ஆண்டிலோப் கங்காரு என 4 வகைகள் உள்ளன. சிவப்பு கங்காரு மிகவும் பெரியது அகும்.
முதன்முதலில் இந்த விலங்கினைப் பார்த்த அய்ரோப்பியர்கள் அங்கிருந்த பழங்குடியினரிடம் இது என்ன விலங்கு என கேட்டுள்ளார்கள். பழங்குடியினர் கங்காரு என்று கூறியுள்ளனர். அந்தப் பெயரே இந்த விலங்கின் பெயராகிவிட்டது. பழங்குடியினர் மொழியில் கங்காரு என்பதற்கு தெரியாது என்று பொருளாம். இப்படியொரு செவிவழிக் கதை வழங்கப்பட்டு வருகிறது.
வலிமையான பின்னங்கால்களையும் நீண்ட பாதங்களையும் உடைய கங்காருகள் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகம் ஓடுவன. கங்காருவின் வால் தசை மிகவும் வலுவானது.
வேகமாக ஓடித் திரும்பும்போது கீழே விழாமல் சமன்படுத்தும் வேலையினை வால் செய்யும். எதிரிகளைத் தாக்கும்போது முன்னங்கால் அல்லது பின்னங்கால்களால் பலமான உதை கொடுக்கும். ஆளுமையினை நிரூபிக்க ஆண் கங்காருகள் சண்டையில் ஈடுபடுவதுண்டு. நன்கு நீந்தும் இயல்புடையன. மனிதர்கள், டிங்கோ நாய்கள், நரிகள், காட்டு நாய் போன்றன இவற்றின் எதிரிகளாகும்.
கங்காரு குட்டிகள் ஜோய் (Joey) என்று அழைக்கப் படுகின்றன. பிறந்த கங்காரு குட்டி 2 கிராம் எடை மட்டுமே இருக்கும். சுமார் 6 மாதங்கள் அம்மாவின் வயிற்றுப் பையினுள் இருந்து முழு வளர்ச்சி பெறும்.
ஆஸ்திரேலியாவின் தேசிய முத்திரையில் இடம் பெற்றுள்ள பெருமை கங்காருக்கு உண்டு. பறவைகளில் ஈமு பறவைக்கு இந்தப் பெருமை உண்டு. இரண்டுக்குமே பின்னோக்கி நடத்தலோ நகர்தலோ முடியாத செயல் என்பதால் முன்னேற்றத்திற் கான அடையாளமாக இவை அரச முத்திரையில் இடம் பெற்றுள்ளன.
கங்காரு தனது உயரத்தைவிட மூன்று மடங்கு உயரம் தாவிக் குதிக்கும் வலிமை உடையது. புல்லை விரும்பிச் சாப்பிடும். அசைபோடும் இயல்புடையது. ஆறு ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடிய கங்காரு கூட்டமாக வசிக்கக்கூடியது. ஒரு கூட்டத்தில் 10 முதல் 100 வரை இருக்கும். ஆபத்தான சூழ்நிலையை உணர்ந்தால், தனது கால்களை பூமியில் வேகமாக அறைந்து எச்சரிக்கும் இயல்பினையுடையது.