குட்டி கிரகம் செரஸ்
குட்டி கிரகம் செரஸ் (Dwart planet)
நமது சூரியக் குடும்பத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே பல்லாயிரம் கோடி விண்கற்களைக் கொண்ட ஒரு பகுதி உள்ளது. இந்த விண்கற்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்தப் பகுதியில்தான் குட்டிக் கிரகமான செரஸ் உள்ளது.
குட்டிக் கிரகம் என்றாலும், விண்வெளிக் கற்களிலேயே செரஸ்தான் மிகவும் பெரியதாகும். இதன் சுற்றளவு 950 கிலோ மீட்டர்களாகும். 1801ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட செரஸ், ரோமானிய விவசாய தேவதையின் பெயரினைப் பெற்றுள்ளது.
விண்வெளிக் கற்களிலேயே முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்ற பெருமையையும் இந்தக் குட்டிக் கிரகம் கொண்டுள்ளது.
இத்தாலிய விண்வெளி ஆய்வாளர் ஜியூசெப்பே பியாசி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டாலும், இதன் சரியான இடத்தைக் கண்டுபிடித்த பெருமை கணிதவியல் அறிஞர் கார்ல் காஸ் என்பவரையே சாரும்.
கடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, விண்கற்கள் குறித்த ஆய்விற்காக டான் என்ற விண்கலத்தைச் செலுத்தியது. 1.7 மில்லியன் மைல் தூரம் பயணித்த டான், 2011ஆம் ஆண்டு வெஸ்டா என்ற சிறிய கோளினைச் சென்றடைந்தது.
இந்தச் சிறிய கோளில் ஓராண்டு ஆய்வுசெய்து புகைப்படங்களை அனுப்பிய டான் 2011ஆம் ஆண்டு செரஸ் கிரகத்தை நோக்கிப் பயணித்தது.
செரஸ் கிரகத்திற்கு சுமார் 90 ஆயிரம் மைல்கள் தூரத்திலிருந்து, டான் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. மார்ச் மாதம் செரஸ் கிரகத்தைச் சென்றடையும் டான், 16 மாதங்கள் அங்கிருந்து புகைப்படங்களை அனுப்பும் என நாசா தெரிவித்துள்ளது. செரஸ் கிரகத்தை இவ்வளவு அருகாமையிலிருந்து புகைப்படம் எடுப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.