விடுமுறை விட்டாச்சு… செய்ய வேண்டியது – செய்யக்கூடாதது
விடுமுறை விட்டாச்சு…
செய்ய வேண்டியது – செய்யக்கூடாதது
-சிகரம்
எந்தவொரு மனிதரின் வாழ்வும் மற்றவற்றோடு அல்லது மற்றவர்களோடு தொடர்பற்று அமைவதில்லை. உலகில் உள்ள சுற்றுச் சூழல்கள், பிற மனிதர்கள், பிற உயிரினங்கள், அறிவியல் சாதனங்கள், இயற்கை வளங்கள் என்று பல காரணிகள் ஒருவரின் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. இவற்றுள் நல்லவையும் உண்டு: தீயவையும் உண்டு.
மின்னணுக் கருவிகள் மிகையாக வந்துவிட்ட சூழலில், மனித இனமே அதற்கு அடிமையாகிவிடுமோ என்ற அச்சம் எழும் வகையில் அவற்றின் ஆதிக்கம், தாக்கம், பயன்பாடு, பற்று, வெறி அதிகரித்து வருகின்றன.
பெரியவர்களையே இவை பெரிதும் பாதிக்கின்றன என்ற நிலையில், சிறுவர்களை அடிமைகொண்டு, ஆதிக்கம் செலுத்துவதோடு, திசைமாற்றி சீரழிக்கவும் செய்கின்றன.
குறிப்பாக விடுமுறை விடப்படும் சூழல் நெருங்குவதால் பிஞ்சுகளின் நெஞ்சு, நினைவு, செயல்பாடு எல்லாம் நெறிப்படுத்தப்பட்டுச் செல்ல வேண்டியது கட்டாயம். இல்லையென்றால் அவர்களுக்குப் பெருங்கேடு நேர வாய்ப்புகள் அதிகம் என்பதால் பிஞ்சுகளும் பெற்றோரும் கீழ்க்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
குளிர்பானம்: வெயில் நெருங்குவதால், நெருக்குவதால், குளிர்ந்த பானங்களை நாடுவர். நாகரிகப் போர்வையில் பாட்டிலில், டப்பாக்களில் அடைத்த பானங்கள் அவர்களால் பெரிதும் விரும்பிப் பருகப்படுகின்றன. ஆனால், இவை அவர்களின் நலத்திற்கு முற்றிலும் கேடானவை.
எனவே, செயற்கைப் பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். மாறாக நீர்மோர். அதில் எலுமிச்சை, இஞ்சி, கறிவேப்பிலை, பொதினா சேர்த்துப் பருகுவது தாகம், வறட்சி தணிப்பதோடு, உடல் நலம் காக்கும்; நோய்களை எதிர்க்கும் சோற்றுக் கற்றாழை சோற்றை 7 முறை அலசி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் குடல்புண் (அல்சர்) வராது; உடல் குளுமையடையும். பெண்களுக்குப் பெரிதும் நலம் பயக்கும்.
சோற்றுக் கற்றாழை மடலில் ஒட்டியுள்ள வழுவழுப்பான சோற்றை முகம் மற்றும் உடல் முழுக்கப் பூசி 1 மணி நேரம் கழித்துக் குளித்தால் உடல் பளபளவென்று நலமாய் மிளிரும்.
வெள்ளரிப் பிஞ்சு, தர்பூசணி, நுங்கு, இளநீர் ஆகியவற்றை நாள்தோறும் உண்டால் வெயில் நோய்கள் அறவே அணுகாது.
நாட்டு வெல்லத்தைத் தண்ணீரில் கலந்து இஞ்சி, எலுமிச்சை கலந்து பருகினால் உடல் நலம் பெறும்.
மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை உண்பது ஏற்றது.
நொறுக்குத் தீனி: பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனியை அறவே தவிர்க்க வேண்டும். நமக்கு அதுதான் பிடிக்கும்
என்றாலும் மன உறுதியோடு அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மாறாக, கொழுக்கட்டை, புட்டு, பழங்களின் கலவை, கீரை அடை இவற்றை உண்ண வேண்டும். ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.
பருத்தி ஆடை: செயற்கையிழை ஆடைகளை அறவே விலக்கி, பருத்தியாலான ஆடைகளை அணிய வேண்டும். கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு கொளுத்தும் வெயிலில் விளையாடக் கூடாது. காலை 9 மணிக்கு முன்பும், மாலை 5 மணிக்குப் பின்பும் விளையாட வேண்டும்.
வெயிலில் கட்டாயம் செல்ல நேர்ந்தால், தலைக்கு குல்லாய் அல்லது குடையுடன் செல்ல வேண்டும்.
காற்றோட்டமான மர நிழலில் விளையாடுதல் அல்லது குளம், கால்வாய்களில் பாதுகாப்போடு குளித்தல் வெயில் தணிக்க உதவும்.
கார்ட்டூன்: தொலைக்காட்சியில் கார்ட்டூன் காட்சிகளில் மணிக்கணக்கில் அமர்ந்து பார்த்தல் கண்களைக் கெடுக்கும், உடல் பருக்கும், நலம் கெடுக்கும்.
வீடியோ கேம்ஸ்: காலமாற்றக் கட்டாயம் என்றாலும், கட்டுப்பாட்டோடு இவற்றை அளவோடு விளையாட வேண்டும். மாறாக அதிலே மூழ்கி நலம் இழக்கக் கூடாது.
ஊடகங்கள்: வாரப் பத்திரிகை, செய்தித்தாள், திரைப்படம், இணையதளம் இவற்றுள் பலவும் கேடு பயக்கும், திசை மாற்றும், சீரழிக்கும் அங்கங்கள் அதிகம் என்பதால், அவற்றை ஆக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் ஏற்பப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் இவை சிறார்களைச் சீரழிக்கும்.
புகை, மது: சிறுவர்கள் மத்தியில்கூட இப்பழக்கம் இன்று எளிதில் வந்துவிட்ட காரணத்தால், பெற்றோரும், பிள்ளைகளும் எச்சரிக்கையாய் இருந்து காத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சிறார்களின் எதிர்காலமே சீரழியும். விளையாட்டாக, உல்லாசத்திற்காகத் தொடங்கப்படும் இப்பழக்கங்கள் விடாமல் பிடித்துக்கொள்ளும். விளைவு, வாழ்வே சீரழியும்.
புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இல்லாத இளைஞர்களைக் காண்பதரிது என்ற நிலை தற்போது உள்ளது. எனவே, சிறுவர்கள், பெற்றோர், அரசு முத்தரப்பும் இதில் முனைப்புக் காட்டி ஒழிக்க வேண்டும். சமதாயத் தொண்டர்கள் விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
உணவு: உணவு என்பது உடல் நலத்திற்கு என்ற நிலை மறந்து அல்லது மறுத்து சுவைக்கும், சுகத்திற்கும் என்று உண்டால், விளைவு உடல் நலக்கேடும், நோய்கள் பாதிப்பும் ஏற்படும்.
விடுப்பிலும் படிப்பு: கோடை விடுமுறை விடுவதன் நோக்கமே மாணவர்கள் புத்துணர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகத்தான். படிப்பு, படிப்பு என்று வெந்து நொந்த உள்ளத்திற்கும் உடலுக்கும் ஒரு விடுதலை கொடுக்கும் காலமே விடுமுறை. இதை உணராது அப்போதும் தனிப்பயிற்சி, அடுத்த ஆண்டுக்கான பாடங்களை நடத்துதல், தேர்வுகள் நடத்துதல் என்று பிழிந்தெடுப்பது மாணவர்களை மனநோயாளியாக்கும்.
கொடுமையான வெயில் காலத்தில், உடலுக்கும் உள்ளத்திற்கும் குளுமை தேடுவதாய் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
கண்டபடி திரிதல், கடினப்பட்டுப் படித்தல் இரண்டுமே தப்பு. மாறாக குளிர்ந்த இடங்களுக்குச் சுற்றுலா செல்லல், வசதி இல்லையென்றால் அருகிலுள்ள குளிர்ந்த இடங்களுக்குச் செல்லல்; பெற்றோர்களுடன் நண்பர்களுடன் மனம்விட்டுச் சிரித்துப் பழகுதல்; நல்ல சிந்தனைகளை வளர்க்கும் நூல்களைப் படித்தல்;
ஓவியம், இசை, நடனம், பாட்டு என்று பிடித்ததைப் பயிலுதல்; மாலை நேரங்களில் தோப்பு, வயல்வெளி, ஆற்றங்கரை, ஏரிக்கரை போன்ற இடங்களுக்குச் சென்று நடத்தல், இரவில் நன்றாக உறங்குதல், பிற்பகல் ஒரு மணிமுதல் இரண்டு மணி நேரம் வரை உறங்குதல் என்று செய்தால் உடல், உள்ளம் இரண்டும் புத்துணர்ச்சி பெறும், சிறுமைகள் நீங்கும், சீரழிவு நேராது, அடுத்த ஆண்டுக்கு ஆர்வத்துடன் செல்ல உள்ளமும் உடலும் தயாராகும்; புத்துணர்வு பெறும்.