சும்மா மொக்க போடாதீங்க!
நம்ம நாட்டுல எதுக்குப் பஞ்சமிருக்கோ இல்லையோ பழமொழிகளுக்கு மட்டும் பஞ்சமே இருக்காது. நம்மளப்போல அதாவது என்னையும் சேர்த்து சின்னப் பசங்க வீட்டுல இருக்கும்போது, ஏதாவது ஒரு பழமொழியைப் பயன்படுத்தி பெரியவங்க பேசறதைப் பார்த்திருக்கோம் _ கேட்டிருக்கோம். தலையில இரண்டு கையையும் வச்சுக்கிட்டு, யப்பா… சும்மா மொக்க போடுறாங்கப்பா என்று அலுத்திருப்போம்.
ஒவ்வொரு மாவட்டத்திலயும் பழமொழிகள் ஒவ்வொரு விதமா இருந்தாலும், சிலது மட்டும் பரவலாக பயன்படுத்துவாங்க. அதுல ஒன்னுதான் பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகமே இருட்டிடிடுச்சுன்னு நினைச்சுக்குமாம் _ என்ற பழமொழி.
இந்தப் பழமொழி சரியா?
சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றம் இருக்கிறதுன்னு _ யாருமே சொல்லாததனால நானே சொல்லிட்டேன்.
அப்படியென்ன பொருள் குற்றம்?
உலகம்னு பழமொழியில சொல்லப்படறது நாம் வாழுகிற இந்த பூமியைத்தான். பூனையை விட்டுவிடுவோம். பூமியே (உலகமே) இருட்டாகுமா? ஆ… ங்…. சொல்லாமலேயே நிறையப் பேருக்குத் தெரிய வந்துருச்சு. பாதி பூமிதான் இருட்டாகும். பாதி பூமி வெளிச்சமா பகலாத்தான் இருக்கும். சரிதானே?
ஏன் பாதி பூமி பகல், பாதி பூமி இரவு? _ அப்படின்னு கேட்டா, இன்னமும் பாதிப் பேருக்கு மேல, ஆங்… சூரியன் உதிக்குது _ பகல் வருது. சூரியன் மறையுது _ இரவு வருதுன்னு சொல்வாங்க. கொஞ்சம் பேருதான் இல்லவே இல்ல, பூமி சுத்துது.
அதனால சூரியன் உதிக்கிற மா…திரித் தெரியுது _ பகல் வருது. பூமி சுத்துது. அதனால சூரியன் மறையற மா..திரித் தெரியுது _ இரவு வருதுன்னு சொல்லுவாங்க. நம்ம ஓட்டு இனிமே எப்பவுமே இரண்டாவதா சொன்னவங்களுக்குத்தான்.
போற போக்குல, பூமி ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகத்துல சூரியனைச் சுற்றி வருது. இன்னும் துல்லியமா சொல்லணுமுன்னா 29.36 கி.மீ. வேகத்துல சூரியனைச் சுற்றி வருது அப்படிங்கறதையும் சொல்லிப்புட்டேன் ஆமா…
அதனாலதான் இரவு, பகல் குறிப்பிட்ட கால, நேர அளவுகளில் வந்துவந்து போய்க்கிட்டே இருக்குது.
இரவு, பகல் மட்டும்தானா? வேற ஏதாவது இருக்கா? ஸ்… ஸ்… யப்பா… கேள்வி கேட்கறது ரொம்பச் சுலபம். சரி… சரி… சொல்லிடறேன். மாறும். இப்ப இரவு சொல்லிட்டோம். பகல் சொல்லிட்டோம். இரவுபகல் பகலிரவு தெரியுமா?
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எதுங்கிற கேள்விக்கு நார்வே_ன்னு பதில் எழுதியிருப்பீங்க. அதெப்படி நள்ளிரவில் சூரியன் உதிக்குமா? அது வேற ஒன்னும் இல்ல. பூமி 23_1/20 சாய்ந்து இருக்கிறதுனால வட துருவத்தையொட்டி இருக்கிற நார்வே நாட்டில் கோடை காலங்களில் பல நாட்கள் தொடர்ந்து சூரியன் தெரியும்.
அதனால அங்கே இரவே வராது. பூமி உருண்டையை நான் சொல்ற கோணத்துல வச்சுப் பாருங்க. இன்னும் நல்லாப் புரியும். 24 மணி நேரமும் பகல்தான். நடு இரவில்கூட வெளிச்சம் இருக்கும். இதை நார்வே மக்கள் சூரிய இரவுகள் என்று சொல்வார்கள். இதனாலதான் நள்ளிரவில் உதிக்கும் நாடு என்று சொல்கிறார்கள்.
கொசுரு: நார்வேயில், குளிர்காலத்தில் அதிகபட்சம் 4 அல்லது 5 மணி நேரம்தான் சூரிய வெளிச்சம் இருக்கும். அப்போதெல்லாம் இரவைப் பகலாக்குகின்ற பெரிய விளக்குகளைப் போட்டுக்கொண்டு இரவைப் பகலாக்கிக் கொள்வார்கள். இதற்கு கறுப்புப் பகல் _ என்றே பெயர்.
சரி, இதையெல்லாம் சொல்வதற்கு பூனையை ஏன் இழுத்தீர்கள் என்றா கேட்கிறீர்கள். மியாவ்….
-ஹுவாமை