உலகின் முதல் சூரிய ஆற்றல் விமானம்
உலகின் முதல் சூரிய ஆற்றல் விமானம்
உலகின் முதல் சூரிய மின்ஆற்றல் (சோலார்) திட்டம் சோலார் இம்பல்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்ட்ரன்ட் பிக்கார்டு என்ற விமானவியல் நிபுணர் இதன் வடிவமைப்புக்குத் தலைமை வகித்துள்ளார். முதன்முறையாக பலூன் மூலம் உலகை வலம் வந்தவர்களில் பெர்ட்ரன்ட் பிக்கார்டும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் முதல் சூரிய ஆற்றல் விமானம் HB-S1A என்ற குறியீட்டுப் பெயரில் பதிவு செய்யப்பட்டது. நடைமுறையில் இந்த விமானமானது சோலார் இம்பல்ஸ்-_1 என அழைக்கப்படுகிறது.
தொடர்ந்து 36 மணி நேரம் பயணம் செய்யும் ஆற்றல் பெற்ற இதில் இருவர் மட்டுமே அமர முடியும். 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தொடர்ந்து 26 மணிநேரம் பறந்து சாதனை படைத்தது.
சூரிய வெளிச்சம் இல்லாத நிலையில், சேமிக்கப்பட்ட மின் ஆற்றலில் இரவில் தொடர்ந்து 9 மணி நேரம் பறந்து பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இம்பல்ஸ்_1 விமானத்தை வடிவமைத்த அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இம்பல்ஸ்_2 விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு இம்பல்ஸ்_2 விமானத்தை வடிவமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 2014ஆம் ஆண்டு சோதனை முறையில் வெற்றிகரமாக இயக்கிப் பார்க்கப்பட்டது. தற்போது இம்பல்ஸ்_2 விமானம் தனது உலகச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
மார்ச் 9 அன்று அபுதாபியின் அல் புத்தீன் நிர்வாக விமான நிலையத்தில் புறப்பட்டு 12 மணி நேரம் பயணம் செய்து ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் தரையிறங்கியது. பின்னர் மார்ச் 10 அன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு வந்தது. பின்னர் வாரணாசி சென்றது. 16ஆம் தேதி மியான்மர் சென்ற விமானம், ஜூலை மாதத்திற்குள் அபுதாபி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுவதும் கார்பன் ஃபைபர் தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ள இம்பல்ஸ்_2 விமானம் 2.3 டன் எடையினைக் கொண்டது. இதன் இறக்கை 236 அடி நீளம் உடையது. இறக்கைகள்மீது 17,000 சூரிய மின் ஆற்றல் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து பெறப்படும் மின்சாரம் லித்தியம் அயர்ன் மின்கலத்தில் (பேட்டரி) சேமிக்கப்படுகிறது.
ஆட்டோ பைலட் சிஸ்டம் இருப்பதால் நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றது. நவீன விமானவியல் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. 39,000 அடி உயரம் வரை இதில் பறக்க முடியும். தொடர்ந்து 120 மணி நேரம் வரை செல்லக்கூடியது. ஓடுதளத்தில் (ரன்வே) ஓடும்போது மணிக்கு 35 கி.மீட்டர் வேகத்திலும், பறக்கும்போது சராசரியாக 90 கி.மீட்டர் வேகத்திலும் பறக்கக்கூடியது.
இரவு நேரத்தில் மின் திறனைச் சேமிப்பதற்காக 60 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது. இதன் அதிகபட்ச வேகத்திறன் மணிக்கு 140 கிலோமீட்டர் ஆகும். இருவர் மட்டுமே அமர வசதி செய்யப்பட்டுள்ள இந்த விமானத்தை உலகச் சுற்றுப் பயணத்தின்போது ஆந்த்ரே போர்ச்பெர்க் மற்றும் பெர்ட்ரண்ட் பிக்கார்டு ஆகியோர் இயக்குகின்றனர்.
அய்ந்து மாதங்களில் 617 மணி நேர பயணத்தில் சுமார் 35,000 கி.மீ. தூரத்தைக் கடக்க இருக்கும் இந்த விமானமானது ஜூலை மாதத்தில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு அபுதாபி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.