நடுக்கடலில் ‘நச்’னு ஒரு வீடு!
யாருமில்லாத தீவொன்று வேண்டும்… நடுக்கடலில் வீடு கட்டிக் குடியிருக்க வேண்டும் என்றெல்லாம் திரைப்படப் பாடல்களைக் கேட்டிருப்போம். அப்படியொரு தனிமை வேண்டுமா வேண்டாமா என்பதெல்லாம் வேறு செய்தி.
ஆனால், அப்படி ஒரு வீட்டை இன்றைய நவீன வசதிகளோடு உருவாக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை கண்டிருக்கிறார் ஒருவர். அவர் மார்காட் கிரஸோஜவிக்.
கடலுக்கு நடுவில் மாபெரும் வீட்டினை எழுப்பும் திட்டத்தைச் சமர்ப்பித்து அதற்கு நீர்மின்சக்தி அலை வீடு என்ற பெயரினை வைத்துள்ளார் மார்காட் கிரஸோஜவிக் என்ற பெண் கட்டிடக் கலை நிபுணர்.
கடலின்மீது மிதந்தபடி வடிவமைக்கப்-பட்டுள்ள இந்த வீடு ராட்சத கடல் கிளிஞ்சல் (சிப்பி) போன்ற தோற்றத்தினை உடையது. கடல் அலையிடமிருந்து மின்சாரம் தயாரித்து வீட்டிற்குத் தேவையான மின்சாரம் கிடைக்கும். இரு அடுக்குகளைக் கொண்ட இந்த வீடு ஒன்று உட்புறத்திலும் மற்றொன்று வெளிப்புறத்திலும் இருக்கும்.
குடியிருக்கும் பகுதி கான்கிரீட் கொண்டு நிலையாக இருக்கும்படி கட்டப்படும் இந்தப் பகுதிக்குத் தேவைப்படும் மின்சாரம் சூரிய ஆற்றலின் மூலம் உற்பத்தி செய்யப்படும். உட்புற அடுக்கு சுழலும் தன்மையுடன் அலுமினியம் கொண்டு கட்டப்பட்டதாக இருக்கும். ஆழ்கடல் அலையின் அசைவுக்கேற்ப இப்பகுதியானது அசையும்.
இவற்றுடன் இரண்டு காற்றால் இயங்கும் இயந்திரங்கள் (Turbine) பொருத்தப்படும். அவற்றில் ஒன்று அலையில் உண்டாகும் காற்றினை அமிழ்த்தி அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும். காந்தம் மற்றும் தாமிரக் கம்பிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மற்றொரு இயந்திரமும் மின்சாரம் உற்பத்தி செய்யும். மின்சாரப் பவளப்பாறை நிலையம் மற்றும் ஒரு நீர்மின்சக்தி பொருத்தப்பட்ட சிறைச்சாலையை மார்காட் முன்பே வடிவமைத்திருக்கிறார்.