ஆரோக்கிய உணவைத் தேடி அலைந்த சாதனையாளர்
ஆரோக்கிய ராஜீவ்…
400 மீட்டர் தொலைவை 45.85 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றிருக்கும் திருச்சி லால்குடியைச் சேர்ந்த இளைஞர். அவர் இந்த வெற்றியைப் பெற்றிருப்பது தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய கிராண்ட் ஃப்ரீ தடகளப் போட்டியில்!
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆரோக்கிய ராஜீவ் விளையாட்டாக, ஓட்டப்பந்தயத்தில் பங்கெடுக்கத் தொடங்கினார். அதன் பிறகு பள்ளியில் பரிசு பெற்று உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரனின் கவனத்தைக் கவர்ந்தார். அதன்பிறகுதான் ஓட்டப்பந்தயத்தில் ஷூ அணிந்து ஓடலாம் என்பதே ராஜீவுக்குத் தெரியுமாம். தொடர்ந்து பயிற்சி எடுக்க வேண்டுமானால், சத்தான உணவு வேண்டும்.
அரசு ஆண்கள் பள்ளியில் அரசு வழங்கிய சத்துணவையும், நண்பர்கள் தனக்கென கொண்டு வரும் கூடுதல் உணவையும் உணடுவிட்டு பயிற்சியைத் தொடர்வாராம். மாலை நேரங்களில் வாழைத்தோப்பு, கரும்புத் தோட்டம் என கிடைத்ததை சாப்பிட்டு உடம்புக்கு வலு சேர்த்துக் கொள்வாராம். பின்னர் உடற்கல்வி பயிற்றுநர் ராமச்சந்திரன் குறைந்த செலவில் சத்தான சிறுதானிய உணவுகள் சாப்பிடும் முறையை சொல்லிக்-கொடுத்திருக்கிறார்.
ஏழ்மை நிலை ஒரு புறம் இருக்க, தொடர்ந்து கல்லூரியிலும் படித்து, பின்னர் விளையாட்டுத் துறையில் தன்னை வளர்த்துக் கொள்-வதற்காகவே இராணுவத்தில் சேர்ந்து ஹவில்தாராகி, தன்னுடைய ஓட்டப் பயிற்சியைத் தொடர்ந்துள்ளார். திட்டமிட்ட, இலக்கு நோக்கிய இந்த வாழ்க்கை ஓட்டம் தான் ஆரோக்கிய ராஜீவுக்கு இந்த வெற்றியைத் தந்திருக்கிறது. இராணுவத்தில் இருக்கும்போது தான் தடகள் வீரருக்குத் தேவையான முறையான உணவு என்பது என்ன என்பதே தனக்குத் தெரிந்தது என்கிறார் ஆரோக்கிய ராஜீவ்.
உணவு, அதிலும் சத்தான உணவு கிடைக்க எவ்வளவு பேர் பாடுபடுகிறார்கள்? அதுவும் சாதனை செய்ய அதற்காக எப்படி முயல்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டால், நாம் தேவையில்லாத உணவுப் பொருள்களை உண்ணவும் மாட்டோம்… தேவைக்கு மேல் உணவுப் பொருள்களை வாங்கி, அதையும் பயன்படுத்தாமல் வீணடிக்கவும் மாட்டோம்.