கோபுரத்துப் புறாக்கள்
கதையும் படமும்
-மு.கலைவாணன்
அது ஓர் அழகான சிவன்கோயில். உயர்ந்த கோபுரங்களுடன் கூடிய அதன் கம்பீரமான தோற்றம், பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.
அண்மையில் அந்தக் கோயிலுக்குக் குடமுழுக்கு _ நன்னீராட்டு விழா. அதற்காக, கோபுரத்தில் உள்ள சிலைகளுக்கு வண்ணம் பூச வேண்டிச் சாரம் கட்டும் பணி தொடங்கியது.
குக்… குக்… குக்…
நீண்ட நாள்களாய் அந்தக் கோபுரத்தில் குடியிருந்த அழகிய புறாக்களுக்கு, இப்போது பிரச்சினை.
வண்ணம் பூச வந்தவர்கள் சிலைகளுக்கு நடுவே சவுக்குக் கம்புகளை வைத்துச் சாரம் கட்டினர். அங்கிருந்த புறாக்கள் வெளியேறத் தொடங்கின.
எங்கே போவது? எப்படி வாழ்வது? இப்படியெல்லாம் ஏங்கிக் கவலைப்படாமல், மொத்தப் புறாக்களும் வானில் வட்டமிட்டு, பட… பட…வெனச் சிறகுகளை அடித்தவாறு பறக்கத் தொடங்கின.
நான்கு தெருக்கள் தள்ளி, ஓர் அழகான மாதா கோவில். கிறித்துவர்கள் வழிபடும் தேவாலயம். அதுவும் உயர்ந்த கோபுரத்துடன் மின்னியது. புறாக்கள் அங்கே போய் இறங்கின.
ஏற்கனவே அந்தக் கோபுரத்தில் சில புறாக்கள் குடியிருந்தன. புதிதாக வந்த சிவன்கோவில் புறாக்கள் பற்றி அவை கவலைப் படவில்லை. இரை தேடல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என வழக்கம்போல் இருந்தன. ஒற்றுமையாய்க் கூடிக் குலாவின.
நாட்கள் நகர்ந்தன…. கிறிஸ்துமஸ் திருநாள் நெருங்கியது.
தேவாலயத்தின் கோபுரத்திற்கு வெள்ளையடித்து அழகுபடுத்த வேண்டி _ அங்கும் சாரம் கட்டும் பணி ஆரம்பமாயிற்று. மீண்டும் எல்லாப் புறாக்களுக்கும் சிக்கல்.
ஆனாலும், புறாக்கள் கவலைப்பட்டதாய்த் தெரியவில்லை. சிவன் கோவில் புறாக்கள், தேவாலயப் புறாக்கள் என மொத்தப் புறாக்களும் அங்கிருந்து பறக்கத் தொடங்கின.
கொஞ்ச தூரத்தில், ஒரு மசூதி தென்பட்டது. அதன் கோபுரத் தூய்மையும், அழகும் கண்ணைக் கவர்ந்தன. மொத்தப் புறாக்களும் அந்த மசூதியில் இறங்கின.
அங்கும் ஏற்கனவே காலங்காலமாய்ச் சில புறாக்கள் வசித்து வந்தன. புதிதாக வந்த சிவன் கோவில், மாதா கோவில் புறாக்களைப் பற்றி அவை கவலைப்படவில்லை. எல்லாப் புறாக்களும், குக்… குக்… குக்… என்று ஒற்றுமையாய்க் கூடிக் கும்மாளமிட்டன.
நாட்கள் நகர்ந்தன. ரமலான் நோன்பு மாதம் நெருங்கியது. மசூதியின் கோபுரத்தைத் துப்புரவு செய்து வெள்ளையடிக்கும் பணி தொடங்கியது. மீண்டும் மொத்தப் புறாக்களுக்கும் சிக்கல்.
ஆனால், அவை அதிகம் அலட்டிக் கொள்ளவே இல்லை. எல்லாப் புறாக்களும் சட… சட…வெனச் சிறகுகள் உயர்த்திப் பறக்கத் தொடங்கின.
இதற்குள் சிவன்கோவில் குடமுழக்கு விழா சீரும் சிறப்புமாக முடிந்திருந்தது. கோவில் கோபுரம் வண்ணக் களஞ்சியமாய்ப் பள… பள…வென மின்னியது. அவ்வளவு புறாக்களும் சிவன் கோவில் கோபுரத்தில் குடியேறின.
இந்தக் காலக்கட்டத்தில், ஊருக்குள் மிகப் பெரிய கலவரம்.
திருவிழாவின்போது ஏற்பட்ட ஒரு சிறு கருத்து வேறுபாடு காரணமாக இந்துக்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் நடுவே கலவரம் மூண்டது. வெட்டரிவாள், வேல்கம்பு, வெடிகுண்டு எனக் கிடைத்த ஆயுதங்களுடன் சண்டை போடலாயினர். எங்கு பார்த்தாலும் கூச்சல், குழப்பம், இரத்தக் களறி, மரண ஓலம்.
கோபுரத்தின் மீதிருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு சின்னப் புறா, தன் தாய்ப் புறாவிடம் கேட்டது: அம்மா, என்ன ஆயிற்று இந்த மனிதர்களுக்கு? ஏன் இந்த ரகளை?
தாய்ப் புறா கவலையுடன் சொன்னது: பாவம், இவர்களுக்கு மதம் பிடித்துவிட்டது. அதனால்தான் இந்தக் கூச்சல்… குழப்பம்… அடிதடி எல்லாம்.
புரியும்படி சொல்லு அம்மா…
புறாக்களாகிய நம்மைப் பொறுத்தவரை _ மழை வெயிலுக்கு ஒதுங்கவும், மகிழ்வாய் இருக்கவும் ஓர் இடம் இருந்தால் போதும். அது மசூதியாய் இருந்தாலும் சரி; தேவாலயமாய் இருந்தாலும் சரி சிவன் _ பெருமாள் கோவில்களாய் இருந்தாலும் சரி _ இடம் எதுவானாலும், நாம் அன்புடன் ஒற்றுமையாய் வாழ்வோம்.
நாம் எங்கே இருந்தாலும் புறாக்கள்தான். ஆனால், மனிதர்களைப் பொறுத்தவரை அப்படி இல்லை. அவன் இங்கே இருந்தால் இந்து; அங்கே போனால் இஸ்லாமியன், இன்னொரு இடத்திற்குப் போனால் கிறித்தவன்!
கருப்பு, வெள்ளை, சாம்பல் என வண்ணத்தில் பிரிந்திருந்தாலும் _ புறாக்கள் என்னும் எண்ணத்தில் நாம் ஒன்றாய் இருக்கிறோம். ஆனால், தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருந்தாலும் மனிதர்கள் மதம் என்னும் போதையால் எண்ணத்தில் பிரிந்தே கிடக்கிறார்கள்!
கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டி அழகு செய்யத் தெரிந்த மனிதர்களுக்கு, தங்கள் மனத்தை அழகுபடுத்தத் தெரியாததுதான் கொடுமை! அதனால்தான் இந்தக் கலவரம்!
அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த சின்னப் புறா, ஆறறிவு படைத்த மனிதர்களைவிட, நாம் எவ்வளவோ மேல்! இல்லையா அம்மா? என வினவியது.
இன்றைய நிலையில் அப்படித்தான் தோன்றுகிறது. நம்மைப் பொறுத்தவரை, எந்த நிலையிலும் ஒருமித்த மனமுடன் இருக்கிறோம். அவர்களால் அப்படி இருக்க முடியவில்லை! என்றது தாய்ப் புறா.
அதனால்தான் நாம் கோபுரத்தின் உயரத்தில் இருக்கிறோம். அவர்கள் குப்பை மேட்டில் இருக்கிறார்கள்! அப்படித்தானே அம்மா? என்று கேட்டது பிள்ளைப் புறா.