வலம்புரிச் சங்குல மட்டும் தான் அந்த சத்தம் வருதா?
உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… “உங்க நாயனத்தில மட்டும் தான் இந்த சத்தம் வருதா? இல்ல, எல்லா நாயனத்திலையும் வருமா?” என்ற தில்லானா மோகனாம்பாள் வசனம் அந்தக் காலத்தில் பிரபலம்.
அது மாதிரி, தெரியுமோ தெரியாதோ, தெரிந்த மாதிரி எப்போதும் ஒன்று சொல்வார்கள்.
வலம்புரிச் சங்கினை காதில் வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலியோ கடலின் இரைச்சலோ கேட்கும் என்பர். உண்மையா? இது வலம்புரிச் சங்குல மட்டும் தானா? பதிலளிக்கிறார் நம்ம பாபு அண்ணே!
சங்குகள் இயல்பாக இடம்புரியாகவே உருவாக, வெகு அபூர்வமாக வலம்புரியாகவும் உருவாகிடும். இது இயல்பான ஒரு நிகழ்தகவுச் செயல்பாடு. அதில் தெய்வீகமோ, ஆன்மீகமோ ஏதும் இல்லை. சிலர் அப்படிச் சொல்லிக் கொள்வார்கள்.
இது அபூர்வம் என்பது தவிர வேறொன்றும் சிறப்பு கிடையாது. சரி, காதில் வைத்தால், ஓம் என்றும் கடல் அலைகளின் ஓசையும் கேட்கிறதாமே என்று கேட்டால், அது இடம்புரிச் சங்கிலும் கேட்கும், காபி குடிக்கும் டம்ளரிலும் கேட்கும், தண்ணீர் முகரும் கப்பிலும் கேட்கும். என்ன ஒன்று ஓசைகள் வித்தியாசமாக வரும், அவ்வளவுதான்.
அறிவியல் விளக்கம்:
சிலர் சொல்வார்கள், காதுக்குள் இருக்கும் நரம்புகளில் ஓடும் ரத்தத்தின் ஓசைதான் சங்கிற்குள் பட்டு எதிரொலிக்கின்றது என்று. அப்படி என்றால், உடற்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ செய்து விட்டு சங்கை காதில் வைத்துக் கேட்டால், அதன் ஓசை விரைவாகவும் அதிகமாகவும் கேட்கவேண்டுமே. அப்படிக் கேட்கவில்லை.
சரியான காரணம் என்னவென்றால், சங்கு ஒரு ஒத்திசைக்கூண்டு (Resonance Chamber) போன்று செயல்படுகின்றது. வெளிக்காற்றின் ஓசைகளை உள்ளே கடத்தி ஏற்படுத்தும் ஒத்த சலனம்தான் நமக்கு இரைச்சலாகக் கேட்கின்றது.
சங்கு என்றில்லை, மூன்று புறமும் மூடியுள்ள எதனைக் கொண்டும் இது உருவாகும். காதிலிருந்து அது எத்தனை தொலைவில் இருக்கிறது, எத்தனை கோண அளவில் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
அந்த இரைச்சலை, ஓம் என்றோ, கடலோசை என்றோ எண்ணிக் கொள்வது நம் கற்பனை. எளிய மனம் எதைச் சொன்னாலும் நம்பி அதன் பின்னே போய் விடும்.