திணித்து வருவதல்ல திறமை! 2
ஒப்பிட்டு குறை கூறக்கூடாது
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை ஆற்றல், திறமை இருக்கும். அதுதான் இயற்கை. இந்த உண்மையை அறியாது, அடுத்தக் குழந்தையோடு ஒப்பிட்டு ஏன் அப்படியில்லை என்று குத்திக்காட்டுவது, பிள்ளைகளின் உள்ளத்தைப் பாதிப்பதோடு உற்சாகத்தையும் குலைத்து, அவர்களின் திறமையை வளர்ச்சியைத் தடுக்கும்; கெடுக்கும்.
அச்சுறுத்தாது அன்புகாட்டி நெறிப்படுத்த வேண்டும்
அடித்தல், திட்டுதல், தண்டித்தல் மூலம் குழந்தைகளைச் சீர்படுத்தி வளர்க்க முனைவது முட்டாள்தனமாகும். “முருங்கையை ஒடித்து வளர்க்க வேண்டும்; பிள்ளையை அடித்து வளர்க்க வேண்டும்” என்ற அறிவுரை அர்த்தமற்றது. அச்சுறுத்தலால் வரும் எந்தப் பயனும் தற்காலிகமானது. அறிவுறுத்தலால் வரும் பயனே நிலையானது. இந்த அணுகுமுறை ஆசிரியருக்கும் பொருந்தும்.
மூடநம்பிக்கைகளை மூளையில் ஏற்றக்கூடாது
நம்முடைய நம்பிக்கைகளையெல்லாம் பிள்ளைக்கு ஏற்றுதல் தப்பு. பிள்ளைகளை ஏன்? எப்படி? எதற்காக? என்று சிந்தித்து வாழ ஊக்குவிக்க வேண்டும்.
திணித்து திறமையை உருவாக்க முடியாது
நம்முடைய விருப்பங்களையெல்லாம் குழந்தை மீது திணித்து, அவர்களைச் சாதிக்கச் செய்ய முயலக் கூடாது. பிள்ளையின் ஆர்வம், ஆற்றல், உடற்கூறு இவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப அவர்களைச் சாதிக்கத் தூண்ட வேண்டும்.
நல்ல விளையாட்டு வீரனாக வரக்கூடியவனை, பாடகனாக ஆக்க முயல்வதும்; நல்ல ஓவியனாக வரக்கூடிய பிள்ளையை, நடிகனாக்க முயற்சிப்பதும்; பொறியாளனாக வரக்கூடிய பிள்ளையை, மருத்துவராக மாற்றிக் கொண்டுவரத் துடிப்பதும் திறமையை வளர்க்க உதவாது; பெற்றோர் திருப்திக்கே உதவும். மருத்துவர் பிள்ளை மருத்துவர், வக்கீல் பிள்ளை வக்கீலாக வரமுயற்சிப்பதும் தப்பு. பிள்ளையின் விருப்பம் இன்றி வற்புறுத்தக்கூடாது.
தங்களுடைய திருமணத்தைக்கூட பெற்றோர் விருப்பத்திற்கு விட்டுத்தர முன்வரும் பிள்ளைகள், தங்கள் கல்வி, சாதனைகளில் தங்கள் விருப்பப்படியே செய்ய விரும்புகின்றனர். இதனைக் கீழ்க்கண்ட கருத்துப் பதிவே உறுதி செய்கிறது.
திறமை திணித்து வருவதல்ல; ஆர்வத்தால், வேட்கையால், விருப்பத்தால் வருவது. அதுவே சாதனையாக மாறும்.
எனவே, பெற்றோர் தங்கள் விருப்பங்களை பிள்ளைகளின் மீது திணிக்காது, அவர்களின் திறமை, விருப்பத்திற்கேற்ப அவர்களை அவர்களாக உருவாக வாய்ப்பளிக்க வேண்டும். அதற்குப் பெற்றோர் துணை நிற்க வேண்டும். அதுவே பெற்றோரின், ஆசிரியர்களின் கடமை!