பயனுறு பயணம்

உடலுறுப்புக் கொடை விழிப்புணர்வுக்காக 10000 கி.மீ. பயணம்
இயல்பான மரணத்திற்குப் பின் ஆராய்ச்சிக்காக உடற்கொடை, மற்றவர் பயன்பாட்டுக்காக விழிக்கொடை, மூளைச் சாவு அடைந்தால் உடல் உறுப்புகள் கொடை செய்வது மனித குலத்திற்கு நாம் செய்யும் மறுபயன். இவை குறித்த விழிப்புணர்வை நாட்டு மக்களிடையே ஏற்படுத்தும் தலைசிறந்த நோக்கத்தோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த சதுரங்கப் பயிற்சியாளர் ஜெயவேலன் இந்தியா முழுக்க இரு சக்கர வாகனப் பயணத்தைத் தொடங்கினார்.
இப்பயணத்தை 01.02.2016 அன்று சென்னை பாடியில் ரோட்டரி சங்கத்தினர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
தனது பயணத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் வழியாக பீகார், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், இந்திய_பாகிஸ்தான் எல்லைப்பகுதி வரை சென்று, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா வழியே தமிழ்நாட்டிற்கு 04.03.2016 அன்று வந்தடைந்தார்.
செல்லும் வழியெங்கும் உடற்கொடை, உடலுறுப்புக் கொடை குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, மொத்தம் 10,300 கிலோமீட்டர் தொலைவை 33 நாட்களில் பயணித்துத் திரும்பியுள்ளார் ஜெயவேலன்.
– ஓவியா கோபால், பவானி