உலகப் புத்தக நாள் விழா-ஏப்ரல் 23
படிப்பு என்றால் பள்ளிக்கூடத்தில் கற்பிக்கப்படும் பாடங்களைப் படித்தல் என்ற அளவோடு மாணவர்கள் நிறைவு பெற்று விடுகின்றனர். ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதுவே போதும்; அதுமட்டுமே போதும் என்று முடிவுகட்டுகின்றனர்.
பள்ளிப் பாடங்கள் மாணவர்கள் அனைவருக்கும் பொதுவானவை. கல்லூரிப் பாடங்கள் துறை வாரியாகத் தொடர்புடைய பாடங்களைத் தொடர்புடைய மாணவர்கள் படிப்பதாகும்.
இவை ஒரு குறிப்பிட்ட அறிவைப் பெற, மட்டுமே உதவும். மாணவர்கள் சாதிக்க, புதியன காண, புலமை பெற பல்துறை அறிவு பெற பலவற்றைத் தேடித் தேடி படிக்க வேண்டும்.
சிந்தனை வளர்ச்சியே உலக வளர்ச்சி, மனித வளர்ச்சி. சிந்தனை வளம் என்பது சிந்தனைகள் சேரச்சேர, மோத மோத, புதிதாகச் சிந்தனை தோன்றிச் செழிப்பதைக் குறிக்கும்.
ஒரே கருத்தோடு இருந்தால் சிந்தனையில் வளர்ச்சியும் வராது, வளப்பமும் வராது. ஒரு கருத்தோடு இன்னொரு கருத்து மோத புதுக் கருத்து பிறக்கும் அத்தோடு இன்னொரு கருத்து மோத மேலும் ஒரு புதுக்கருத்துப் பிறக்கும். ஆக, சிந்தனையென்பது நுட்பமாக, கூர்மையாக, சரியாக வளர்ச்சி பெற்றுச் செல்லக்கூடியது; செல்ல வேண்டியது.
சிந்தனை மோதல்கள் மனிதர்களுக்கிடையேயும் உருவாகலாம்; ஒரே மனிதர்க்குள்ளும் நடக்கலாம். ஒரே மனிதருக்குள் பல சிந்தனைகள் உருவாகவேண்டும் என்றால் அம்மனிதர், பல்துறைச்சார்ந்த பலநூல்களைப் படிக்க வேண்டும்.
அப்படிப் படிக்கிற மனிதன் ஒரு சிந்தனைக் களஞ்சியமாக மாறுவான். பிறகு அவனிடம் பல சிந்தனைகள் பிறந்து கொண்டேயிருக்க சிந்தனை ஊற்றாக உருப்பெறுவான்.
தந்தை பெரியார் பள்ளியில் படித்தது அய்ந்தாம் வகுப்பு வரைதான். ஆனால், அவர் இறக்கின்றவரை எண்ணற்ற நூல்களைப் படித்துக் கொண்டேயிருந்தார். அதனால்தான் அவர் சிந்தனைகளை உலகே தேடித்தேடிப் பெற்றது, பெறுகிறது.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஆயிரக்கணக்கான நூல்களைத் தேடித்தேடிப் படித்தவர்.
அறிஞர் அண்ணா அவர்கள் கற்ற நூல்களுக்குக் கணக்கே இல்லை. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் அமெரிக்காவில் அவருக்கு அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்ட போது, அதை இரண்டு நாள்கள் தள்ளி வைக்கலாமா என்று மருத்துவரிடம் கேட்டார்.
அவர் படித்துக் கொண்டிருந்த நூலை முடிக்க இன்னும் இரண்டு நாள்கள் தேவைப்பட்டன. அறுவை சிகிச்சையின் போது இறந்து போனால் அந்த நூலைப் படித்து முடிக்க முடியாமல் போகுமே என்ற கவலையில் இறப்பதற்குள் அந்த நூலைப்படித்து முடிக்க விரும்பினார். உயிரைப் பற்றிக் கவலைப்படாது, நூலை படித்து முடிக்க வேண்டும் என்பதில் கவலை கொண்டார்.
காரல்மார்க்ஸ் “மூலதனம்” என்ற நூலை எழுத 14 ஆண்டுகள் நூலகத்தில் நூல்களைப் படித்தார்.
அலக்சாண்டர் வெற்றிமேல் வெற்றி பெற்ற நிலையில் தன் குரு அரிஸ்டாட்டிலுக்கு அச்செய்தியைக் கூற, உனக்கு நாடு முக்கியமாக இருக்கலாம் எனக்கு அந்த நாடுகளில் உள்ள அறிஞர்களின் நூல்கள் முக்கியம்; அவற்றை அனுப்பிவை என்றார். அவர் சொத்தாக நினைத்தது அறிஞர்களின் நூல்களை.
கலைஞர் படித்தது பதினோறாம் வகுப்பு. அதிலும் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் தேடிப்படித்த நூல்கள் ஆயிரக்கணக்கானவை. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், எங்குச் சென்றாலும் புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கிப் படிப்பார். அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எதையாவது படித்துக் கொண்டுதான் இருப்பார். அவர் பல்துறைக் களஞ்சியமாக மாறி, சிந்தனைகளை உலகுக்குத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
பகத்சிங்கைத் தூக்கில்போடும் நேரம் நெருங்கியபோது லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” என்ற நூலின் கடைசி அத்தியாயத்தைப் படித்துக் கொண்டிருந்ததால், அதிகாரிகளிடம் அய்ந்து நிமிடம் அனுமதி வாங்கி, அந்நூலைப்படித்து முடித்துவிட்டுத் தூக்குமேடைக்குச் சென்றார்.
இப்போது புரிகிறதா நூல்கள் எந்த அளவிற்கு முக்கியம் என்பது. ஆக, பிஞ்சுகள் அறிவும், ஆற்றலும், சிந்தனைவளமும், பல்துறைத் திறனும் பெற்றுச் சாதிக்க, பல்துறை நூல்களையும் தேடித்தேடிப் படிக்க வேண்டும். படிப்பவற்றில் தேவையானவற்றை குறிப்பெடுத்து வைக்க வேண்டும். நூல்களைத் தேர்வு செய்வதில் பெற்றோர், ஆசிரியர், பெரியோர் துணை நாடவேண்டும்.
பள்ளிப் படிப்பு மட்டும் என்பது சாதிக்க உதவாது; அறிவாற்றலுக்கும் போதாது. எனவே, பல்துறை நூல்களை விருப்பத்தோடு தேடிப்படித்து பல்துறை அறிவு பெறவேண்டியது பிஞ்சுகளின் கட்டாயக் கடமையாகும்.
சிறுவயது முதலே பயனுள்ள பல்துறை நூல்களை வாங்கிச் சேர்த்து வீட்டில் கட்டாயம் ஒரு நூலகத்தை அமைக்க வேண்டும்.
நூலகத்தை அலங்காரமாகக் கருதாமல், நூல்களை நாள்தோறும் கட்டாயம் படிக்க வேண்டும்.
உலகத்தில் உயந்த, சிறந்த, சாதித்த தலைவர்கள் அனைவருமே நூல்களை ஏராளமாய்க் கற்றவர்கள் தான்.
எனவே, நீங்களும் உயர, சிறக்க நூல்களை நாள்தோறும் படியுங்கள்! வாழ்வில் உயரங்களை எட்டிப் பிடியுங்கள்!