எளிய அறிவியல் தொடர், மின்சாரம் எதனால் ஆனது?-3
கீ கொடுக்கும் சக்கரத்தை நாம் சுற்றுவதன் மூலம் கைக்கடிகாரத்திற்குத் தேவையான எந்திர விசையினை உருவாக்குவதுபோல, காந்தப்புலத்தை சுழலச் செய்து அதன் நடுவே மின் கடத்தியை வைப்பதன் மூலம் மின் விசையினை உருவாக்குகிறோம் என சென்ற கட்டுரையில் விரிவாகப் பார்த்தோம்.
நாம் தற்போது பெருமளவில் உபயோகித்துக் கொண்டிருக்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையங்களும் இதே போன்று சுழலும் காந்தப் புலத்திற்கு நடுவில் மின் கடத்தியை வைத்துதான் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றனவா? ஆம். அவ்வாறுதான் உருவாக்குகின்றன.
நாம் தற்போது பயன்படுத்தும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையங்களில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் சில:
1. அணுமின் நிலையங்கள்
2. அனல்மின் நிலையங்கள்
3. நீர்மின் நிலையங்கள்
4. காற்றாலை மின் நிலையங்கள்
ஆனால், இந்த அனைத்து மின் நிலையங்களும் ஒரே வகையில் தான் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. மிகப் பெரிய டர்பைன்களில் (Turbine) காந்தங்களை இணைத்து அவற்றை சுழலச் செய்வதன் மூலம் ‘சுழலும் காந்தப் புலத்தை’ உற்பத்தி செய்து, அதன் நடுவே ஒரு மின் கடத்தியை வைப்பதன் மூலமாக மின் விசையினை உற்பத்தி செய்கின்றனர்.
கைக்கடிகாரங்களில், நம் கைகளால் கீ கொடுப்பது போல இந்த வெவ்வேறு மின் உற்பத்தி நிலையங்களில் வெவ்வேறு வழிகளில் டர்பைன்களை சுழலச் செய்கின்றனர். அணுமின் நிலையங்களில், அணுப் பிளப்பு மூலம் உருவாகும் அளப்பறியா ஆற்றலைப் பயன்படுத்தி நீரினைக் கொதிக்க வைத்து நீராவியினை உற்பத்தி செய்து, அந்த நீராவி மூலமாக டர்பைன்களை சுழலச் செய்கின்றனர் (நீராவி இன்ஜினைப் போன்று).
அனல்மின் நிலையங்களில் நிலக்கரியினை எரித்து அதன் மூலமாக கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்தி நீராவியினை உற்பத்தி செய்து அந்த நீராவி மூலமாக டர்பைன்களை சுழல செய்கின்றனர்.
நீர்மின் நிலையங்கள் பொதுவாக அணைகளில்தான் நிறுவப்பட்டிருக்கும். திறந்து விடப்படும் அணைகளில் இருந்து ஓடும் நீர், அங்கு இணைக்கப்பட்டுள்ள டர்பைன்களை சுழலச் செய்யுமாறு அவை வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல, காற்றாலைகளில், பெரிய இராட்சத டர்பைன்களை வீசும் காற்று சுழலச் செய்யுமாறு அதிகமான காற்று வீசும் பகுதிகளில் அந்த டர்பைன்கள் நிறுவப்பட்டிருக்கும். ஆகவே, அனைத்து மின் நிலையங்களும் ஒரே வடிவமைப்பின்படிதான் இயங்குகின்றன. அதாவது, மின் காந்தங்கள் இணைக்கப்பட்டிருக்கும் டர்பைன்களை சுழலச் செய்து அதன் நடுவே மின் கடத்தியினை வைப்பதன் மூலம் மின்விசை உற்பத்தி செய்யப்படுகிறது என்பதனைத் தெளிவாக அறியலாம்.
ஆகவே, மின்சாரம் என்பது ஒரு விசைதான் என்பதனையும், அந்த விசை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதனையும் தெளிவாகவும், மிக எளிதாகவும் பார்த்தோம். ஆனால், நடைமுறையில் மின்னியல் இவ்வளவு எளிதாக இருந்ததில்லை. மின்விசையினைப் பற்றிப் பேசும்போது வோல்டேஜ் (Voltage), வாட்ஸ் (Watts), ஆம்பியர் (Ampere) என பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்துவோம்.
இவை எல்லாம் என்னென்ன? இப்போதெல்லாம் ஒரு சாதாரண மின் சாதனம் வாங்க கடைக்குச் சென்றால்கூட இவைகளைப் பற்றிய அடிப்படை அறிவு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஆகவே, இவற்றைப்-பற்றியெல்லாம் அடுத்த கட்டுரையில் எளிமையாகவும், விரிவாகவும் காணலாம். <