சட்டமன்றம் எப்படி அமைக்கப்படுகிறது?
நீங்கள் வாக்களிக்கப் போவதில்லை. 18 வயது நிறைந்தவர்களுக்கே அந்த உரிமை. என்றாலும், சில அடிப்படையான அரசியல் செய்திகளைப் பிஞ்சுகள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியத் தேவையாகும். இந்த மாதம் 16ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் நீங்கள் அதுபற்றி அறிய வேண்டும் அல்லவா? எனவே, இந்த இதழில் சட்டமன்றம் எப்படி அமைக்கப்படுகிறது? என்பதைப் பார்ப்போம்.
ஆட்சியாளர்கள்: இந்தியா முழுமைக்கும் ஆளும் உரிமையுள்ள அரசு மத்திய அரசு. ஒவ்வொரு மாநிலத்தையும் ஆளும் உரிமையுள்ள அரசு மாநில அரசு. ஒவ்வோர் ஊரையும் ஆளும் உரிமையுள்ளவை ஊராட்சி மன்றம் போன்ற உள்ளாட்சி அமைப்புகள். இந்த மூன்றுக்கும் தனித்தனி அதிகாரங்களும், கடமைகளும், உரிமைகளும் உண்டு. எல்லாவித ஆட்சி அமைப்பிற்கும் வருவாயும் உண்டு, செலவும் உண்டு.
மாநில அரசு: ஒரு மாநிலத்தை மட்டும் ஆளும் அதிகாரமும், உரிமையும், கடமையும் உடையது மாநில அரசு. மாநில அரசின் ஆட்சியாளர் ஆளுநர் (கவர்னர்) ஆவார். இவரை மத்திய அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் மூலம் பணியமர்த்துகிறது.
மாநில ஆளுநர் நேரடியாக மாநிலத்தை நிர்வாகம் செய்வதில்லை. முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை மூலம் ஆட்சியை நடத்துகிறார்.
அமைச்சரவை எவ்வாறு அமைக்கப்படுகிறது?
சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில முதலமைச்சரைத் தேர்வு செய்கின்றனர். மாநில முதலமைச்சர் மற்ற அமைச்சர்களைத் தேர்வு செய்கிறார். எல்லா அமைச்சர்களுக்கும், பதவி ஏற்கும் உறுதிமொழியை செய்து வைப்பவர் மாநில ஆளுநர் ஆவார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்:
தமிழ்நாடு 234 சட்டமன்ற தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர். அத்தொகுதி மக்களால் அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஒரு தொகுதிக்கு உட்பட்ட 18 வயது நிரம்பியவர்கள் (வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள்) தங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். அத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டவர்களில் யார் அதிக வாக்கு பெற்றாரோ அவரை, தேர்வு செய்யப்பட்டவராக தேர்தல் அதிகாரி அறிவிப்பார். அதற்கான சான்றையும் தருவார்.
தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. அது முழு அதிகாரம் பெற்ற ஓர் அமைப்பு. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகின்றவரை மாநிலத்தின் கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் தன் பொறுப்பில் வைத்திருக்கும்.
அரசியல் கட்சிகள்: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களை ஒவ்வோர் அரசியல் கட்சியும் தேர்வு செய்து நிறுத்தும்.
அரசியல் கட்சியைச் சேராதவரும் தன் விருப்பத்தின்படி தேர்தலில் போட்டியிட உரிமையுண்டு.
கூட்டணி: சட்டமன்றத் தேர்தலில் பங்குகொள்ள அரசியல் கட்சிகள் தனியாகவும் போட்டியிடும் அல்லது தங்களுக்கு ஒத்துவரும் மற்றக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தும் போட்டியிடும்.
ஆட்சி: தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளில் எக்கட்சி அல்லது எந்தக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதோ அக்கட்சியை அல்லது அக்கூட்டணியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார்.
234 சட்டமன்றத் தொகுதிகளில் 118 அல்லது அதற்குமேல் சட்டமன்றத்திற்கு யார் வெற்றி பெற்றுள்ளார்களோ அவர்களே ஆட்சி அமைக்க உரிமையுள்ளவர்கள்.
ஆளுநரால் அழைக்கப்பட்ட, பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவரைத் தேர்வு செய்வர். அத்தலைவரே முதலமைச்சராகப் பதவி ஏற்பார். அவர் மற்ற அமைச்சர்களைத் தேர்வு செய்வார்.
சட்டமன்றத் தலைவர்: சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் வாக்களித்து சட்டப் பேரவைத் தலைவர், துணைத் தலைவரைத் தேர்வு செய்வர்.
சட்டப் பேரவைத் தலைவரே சபையை தலைமையேற்று நடத்துவார். தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம்
5 ஆண்டுகள். எனவே ஆட்சியின் காலமும்
5 ஆண்டுகள்.
இடைத்தேர்தல்: தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் 5 ஆண்டுகள் முடிவதற்குள் பதவி விலகினாலோ அல்லது இறந்து போனாலோ அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, புதிய சட்டமன்ற உறுப்பினர் மக்களால் தேர்வு செய்யப்படுவார்.
சட்டமன்ற மேலவை: சட்டப்பேரவை உள்ளதுபோலவே சில மாநிலங்களில் சட்டமன்ற மேலவையும் உண்டு. தமிழ்நாட்டில் முன்னர் இருந்தது; பின் கலைக்கப்பட்டுவிட்டது. மீண்டும் வர வாய்ப்புண்டு. அப்போது அதுபற்றி அறியலாம்.