சும்மா மொக்க போடாதீங்க
கோகிலாவின் அப்பா முதலில் விண்வெளித் தாத்தாவோடு ஒரு மணி நேரம் கைப்பேசியில் பேசிவிட்டுத்தான் வீட்டுக்குப் புறப்பட்டார்.
இரவில்… படுக்கையில் உட்கார்ந்தவாறே அப்பாவும் மகளும் பேசிக்கொண்டிருந்தனர்.
“முதல்ல அய்ன்ஸ்டீன் 100 ஆண்டு களுக்கு முன்னாடி ஈர்ப்புப் புலம் பத்தி என்ன சொன்னாருன்னா? அண்ட வெளியை ஒரு கயிற்றுக் கட்டிலாக கற்பனை செஞ்சுக்குவோம். கயிற்றுக் கட்டிலின் நடுவில் மிகவும் குண்டான ஒருவர் உட்கார்ந்தால் என்ன ஆகும்?’’
“என்ன ஆகும்? அந்தக் கட்டிலின் நடுவில் அமுங்கம், பள்ளமாகும்!’’
“அதேதான். அப்படி பள்ளம் ஏற்பட்ட பிறகு, அந்தக் கட்டிலின் ஓரத்தில் ஒரு கோலிக்குண்டை வைத்தால் என்னாகும்?’’
“ம்… அது உருண்டு பள்ளத்தை நோக்கிச் செல்லும்!’’
“ஆங்… எக்ஸாட்லி. அதுபோலத்தான் சூரியன் போன்ற அதிக நிறை (Mass) உடைய பொருட்கள் அண்ட வெளியில் பள்ளத்தை உருவாக்கும். அவற்றைவிட எடை குறைவான பொருட்கள் அந்தப் பள்ளத்தில் சறுக்கிவிழும். அவ்வாறு விழுவதைத்தான் ஈர்ப்பு புலம் (Gravitational Field) என்கிறார் அய்ன்ஸ்டீன். இது புரியுதுதானே?
“ம்… நல்லாவே புரியுது.’’
“அதேமாதிரிதான் விண்வெளியில் ஏதோ ஓர் இடத்தில் சூரியனைப் போன்று இலட்சக்கணக்கான மடங்குகள் அதிகமான நிறை (Mass) கொண்ட இரண்டு மா…பெரும் கருந்துளைகள் அதனதன் ஈர்ப்பின் காரணமாக ஒன்றோடு ஒன்று மோதிச் சேர்திருக்கு. அதனால் ஏற்பட்ட ஈர்ப்புப் புலத்திலிருந்து கிளம்பிய அதிர்வலை களைத்தான் விஞ்ஞானிகள் இப்பொழுது கண்டுபிடிச்சிருக்கீங்க..
“ஓ!… கருந்துளைன்னா என்னாப்பா?’’
முதலில் சூரியன் மாதிரி இருக்கும் நட்சத்திரம் தன் வாழ்நாளில் கொஞ்சம் கொஞ்சமாக வயதாகி அதனுள்ளிருக்கும் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் ஆகியவை முற்றிலும் எரிந்து தீர்ந்து, தன் சுய ஈர்ப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு, வெறும் சக்தியாக மட்டுமே மாறி வெடிக்கவே வெடிக்காத பலூன் போல விரிவாகி விரிவாகி இறுதியில் கற்பனைக்கும் எட்டாத மாபெரும் நிறை கொண்டதாக மாறுகிறது. எரியும் சக்தி தீர்ந்தபிறகு, அது விண்வெயில் பார்ப்பதற்கு கருந் துளைகளைப் (Black holes) போல இருக்கும்.
“அடேயப்பா… சரி, அந்த ஈர்ப்பு அலைகளை எப்படிக் கண்டுபிடிச்சாங்க?!’’
“சரி, தமிழில் ‘ட’ என்ற எழுத்தை மனசுல நினைச்சுக்க. அதுல ஒரு பக்கம் 4 கிலோ மீட்டர் நீளம், இன்னொரு பக்கம் அதே 4 கிலோ மீட்டர் நீளத்தில் ஒரு நீண்ட குழாய் அமைச்சாங்க.” என்று படம் போட்டுக் காட்டத் தொடங்கினார். “இரண்டு குழாய்களும் சேரும் இடத்தில் ஒளி பாய்ச்சப்பட்டு, இரு குழாய்கள் வழியாகவும் செல்லும். இரண்டும் ஒரே தொலைவு என்பதால் அவை சென்று குழாயின் முனையில் இருக்கும் கண்ணாடியில் பட்டு பிரதிபலித்துத் திரும்பும் நேரமும் ஒன்றாகவே இருக்கும்.
நம்மை எப்போதும் ஊடுருவிக் கொண்டிருக்கும் ஈர்ப்பு அலைகள் குறுக்கிட்டால், குழாய்க்குள் சென்று திரும்பும் இரண்டு ஒளிக்கற்றைகளின் நேரத்தில் மாற்றம் ஏற்படும்.’’
“எப்படி அதைக் கண்டுபிடிப்பது-?”
“அலை பரவும்போது இப்படி கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் பிரபஞ்சத்தில் தோன்றிய ஈர்ப்பு அலைகள் கூட நம்மைக் கடந்து வரும். ஒரு ரப்பரைப் பிடித்து இழுத்தால் எந்த வாக்கில் இழுக்கப்படுகிறதோ, அந்தப் பக்கத்தின் நீளம் அதிகரிப்பதைப் போல இந்த ‘ட’ வடிவ கருவியின் எந்தத்திசையில் ஈர்ப்பு அலைகள் நுழைந்து வெளியேறும்போது, அது விரிவடைவதால் ஆய்வுக்காக பாய்ச்சப்பட்ட. ஒளிக் கற்றை, சென்று திரும்பும் நேரத்தில் மாற்றம் வருமல்லவா-? அதைக் கொண்டுதான் ஈர்ப்பு அலைகள் உறுதிசெய்யப்பட்டன. இந்தக்கருவியின் பெயர் லேசர் இண்டர் ஃபெராமீட்டர்.’’’
“அம்மாடி… இந்த ஈர்ப்பு அலைகளில் எவ்வளவு மாறியிருக்கும்?”
“ஹ… ஹ…. சொல்றேன். இதை நியூட்டன் 1019 ன்னு சொல்றாங்க. அதாவது 1 போட்டு அதுக்கு பின்னால 20 சைபர் போடனும். அதாவது, ஒரு அணுவை 1 கோடிக்கு பங்காகப் பிரிச்சு, அதுல வர்ற சின்…ன துகளை மறுபடியும் 1 கோடி பங்காகப் பிரிச்சு அதுலயும் கிடைக்கிற இன்னும் சின்…ன துகளை 1 லட்சம் பங்காகப் பிரிச்சா வர்ற சின்னஞ்சிறு துகள்களால் உண்டாகின்ற அதிர்வுகளைத்தான் லேசர் இண்டர் ஃபெராமீட்டர் கணக்கிடுகிறது.’’
கோகிலா வியப்பில் உறைந்தே விட்டாள்.
“இதுக்கே வியந்துவிட்டாயே! இதை 100 ஆண்டுகளுக்கு முன்பே, அய்ன்ஸ்டீன் கணித்திருக்கிறார். இதை அடிப்படையாக வைத்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்டால் எவ்வளவு வியப்பாக இருக்கம். உலகில் இதற்கான ஆய்வுக்கூடங்கள் அமெரிக்காவில் இரண்டும், ஜெர்மனியிலும் இத்தாலியிலும் தலா ஒன்றும் உள்ளன. அமெரிக்காவின்
ஆய்வுக்-கூடங்கள்தான் மிக நவீனமானவை. அங்குதான் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. இரண்டு மய்யங்களில் உள்ள கருவிகளிலும் ஒரேமாதிரியான முடிவுகள் வந்துள்ளன. அதுக்கப்புறம்தான் விஞ்ஞானிகள் இதை உறுதிப்படுத்தி இருக்காங்க.’’
“இப்போ விஞ்ஞானிகள் கண்டு பிடிச்சிருக்கிற ஈர்ப்பு அதிர்வலைகள்கூட 150 கோடி ஒளியாண்டுகளுக்கு முன்னாடி பிரபஞ்சத்திலிருந்து புறப்பட்ட அதிர்வலைகளாகும்.’’
கோகிலா மெல்ல வானியலோடு வசப்பட்டுக் கொண்டிருந்தாள். அப்புறம் சொல்ல மறந்துட்டேன். பிரபஞ்சம் கோகிலாவோடு பேசிவிட்டது.
ஆம்! அவள் உணர்ந்து கொண்டாள்.
நீங்கள்?