கேள்விகளை விதைத்த பழகுமுகாம்
வழக்கம் போலவே இந்த ஆண்டும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பெரியார் பிஞ்சு வழங்கும் குழந்தைகள் பழகுமுகாம் 2016, மே மாதம் 8 _ 12 ஆம் தேதி வரையிலான அய்ந்து நாட்களும் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
நல்ல பழக்கவழக்கங்கள், எளிய அறிவியல், சாலைப் பாதுகாப்பு, முதலுதவி, மூடநம்பிக்கை முறியடிப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை எதிர் கொள்ளல் போன்றவவை குறித்த ஏராளமான அமர்வுகள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விடுகதைகள்! அதன் மூலம் விடைகளையும், அதனூடே பகுத்தறிவு சிந்தனைகளையும் கற்றுக்கொடுத்த கவிஞர் தாத்தா!
தஞ்சை சிவகங்கைப் பூங்காவில் உற்சாகத்தில் திளைக்க வைத்த நீச்சல்! கண்களையும், கருத்தையும் கவர்ந்த பொம்மலாட்டம்! இதெல்லாம் இந்த அய்ந்து நாட்களிலும் பெரியார் பிஞ்சுகள் பார்த்த, பழகிய, கற்றுக்கொண்ட அடுக்கடுக்கான, ஆனந்தமான நிகழ்வுகள்!
பள்ளிக்கூடத்தையே நினைவுப்படுத்தாத சூழல்! புதிய புதிய நட்பு! புதிய புதிய அறிவு! புதிய புதிய கலைகள்! அதுமட்டுமா? குழந்தைகளுக்கு மதிப்பும் அங்கீகாரமும் கொடுக்கின்ற கற்றறிந்த ஆசிரியர்கள்! பிஞ்சுகள் விரும்புகின்ற வகையில் நடைபெறும் வகுப்புகள்! வேறென்ன வேண்டும்? நான்காம் நாள் முடிவில் ஏறக்குறைய எல்லோருக்குமே தயக்கமென்ற தடை தானாகவே இளகி, உருகி வழிந்தோடிவிடுகிறது! பிறகென்ன? ஆர்ப்பரிக்கும் நீரோடை போல கேள்விகளைக் கேட்கத் தொடங்கி விடுகின்றனர்.
ஆசிரியர்களுக்கும், ஒருங்கிணைப் பாளர்களுக்கும் அதற்கு பதில் சொல்லித்தான் மாளவில்லை. இந்தத் தடைகளை உடைத்த துணிச்சல் எவ்வளவு தூரத்திற்குச் சென்றதென்றால், ‘கேளுங்கள் சொல்கிறோம்’ என்பதையே வாழ்நாள் கடமையாகக் கொண்ட ஆசிரியர் தாத்தா அமர்ந்திருக்கும் மேடையிலேயே மற்றவர்களைப் பார்த்து கேள்விகள் கேட்கும் அளவுக்குச் சென்றது.
இப்படி ஏறக்குறைய எல்லோரும்தான் கேள்விகள் கேட்டனர். மனித வளர்ச்சியை நினைத்துப் பார்த்தால் எல்லோரும் கேள்விகள் கேட்பது என்பது எவ்வளவு புரட்சிகரமான ஒன்றென்று இன்னமும் ஆழமாகப் புரியும்! பழகுமுகாமின் அருமையும், தேவையும்கூட நன்றாகப் புரியும்.