’தங்கமான நேரம்!’
முதலுதவி என்றால், இரத்தப்போக்கை நிறுத்துவது. மூச்சு நின்று போகாமல் தடுப்பது, பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது, இன்னபிற என்பது போலத்தான் நாம் எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதையும் தாண்டி முதலுதவிக்குப்பின் மருத்துவ மனையிலுள்ள மருத்துவர்களுக்கு உதவ சில குறீயீடுகளையும் முதலுதவி செய்கிற மருத்துவர்களே அனுப்பி வைத்துவிடுகிறார்கள். அந்த குறிகள் என்ன? அதன் அவசியம் என்ன?
அதாவது, விபத்தில் அடிபட்டு அதிக இரத்த இழப்பு ஏற்பட்டிருந்தால், அதை சுருக்கமாகக் குறிப்பிட அடிபட்டவர்மீது H என்றும், அதேபோல அடிபட்டதில் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால் அதைப் பார்த்தவுடன் உள்ளுறுப்பு-களுக்கான சிகிச்சையை அளிக்கும் வகையில் உடனே X என்றும்,
கதிர்வீச்சு பாதிப்பு ஏதாவது இருந்தால் R என்றும், பாம்புக் கடியோ அல்லது வேறு ஏதாவது கடித்து விஷம் ஏறியிருந்தாலோ C என்றும், விசம் அருந்தியிருந்தால் அதிக அவசரம் என்பதைக் குறிக்க X X என்றும், அறுவைச் சிகிச்சை செய்வதற்கான தேவையிருந்தால் S என்றும் குறிகளை இடுவர்.
ஒருசில மணித்துளிகளில்கூட சிகிச்சை கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆதலால், ஏற்கெனவே பரிசோதனையை முதலுதவி செய்த மருத்துவரே பார்த்துவிட்டதால், மீண்டும் அந்த அடிப்படை பரிசோதனைக்கே நேரத்தைச் செலவிடுவது கூடாது என்ற அடிப்படையில் இப்படிப்பட்ட நேர மிச்சம் மிகமிக அவசியமாகிறது. இப்படி அடிபட்ட நேரத்திற்கும் உயிர்காக்கும் சிகிச்சைக்கும் இடைப்பட்ட நேரத்தைத்தான் ‘தங்கமான நேரம்’ என்று தமிழிலும், Golden Hour என்று இங்கிலீசிலும் அழைக்கின்றனர்.