செவ்வாய்க் கிரகம் போலாமா?
காட்டிலிருந்து வெகு தொலைவில் நீர் தேடி வந்து கொண்டிருந்தன கஜா, மகா என்ற இரண்டு குட்டி யானைகள்.
“கஜா! இன்னும் எவ்வளவு தூரம் நடப்பது. எனக்கு இப்போதே கால்கள் வலிக்கத் தொடங்கி விட்டன. அம்மாவிடம் வேறு சொல்லாமல் வந்துவிட்டேன். அவர்கள் என்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள்’’ என்றது மகா.
“என்ன மகா செய்யறது. காட்டுல குடிக்கத் தண்ணீர் இல்லையே. அருகே ஒரு கிராமம் இருக்கிறது. கண்டிப்பாக அங்கே தண்ணீர் கிடைக்கும். சோம்பல் படாமல் வா… குடித்துவிட்டு வரலாம்.’’
“கஜா! பூமியில தண்ணீர்த் தட்டுப்பாடு வர்றதுக்கு என்ன காரணம்?’’
“தேவைதான் காரணம்’’
“புரியலையே கஜா’’
“அதாவது மனிதர்கள் தங்களின் தேவைகளுக்காக காட்டினை ஆக்கிரமித்தனர். அவர்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களுக்கு மரங்களை வெட்டினர். அலங்காரத்திற்கும் ஆகாரத்திற்கும் மிருகங்களை அழித்தனர். இப்படி இயற்கை அழித்து, மேலும் எதை அழித்தால் நாம் வாழலாம் என தேடிக் கொண்டிருக்கிறார்கள்.’’
“இவர்களை தட்டிக் கேட்க யாருமில்லையா கஜா?’’
“இருக்கிறார்கள். இவர்கள் நடத்தும் அரசாங்கம்… ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக ஒரு மரக்கன்றை நடச் சொல்கிறது. இவர்கள் வாகனங்கள் மூலம் மிருகங்களுக்கு விபத்து என்றால் தண்டனைத் தருகிறது. ஆனால் அவற்றை எல்லாம் மீறுவதையே இவர்கள் விரும்புகிறார்கள் மகா’’ என்றது குட்டி யானை கஜா.
“அப்படின்னா நம்மைப் போன்றவர்கள் வாழவே முடியாதா கஜா?’’
“முடியும் மகா. மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், நுண்ணியிரிகள், பூச்சிகள் என அனைத்து உயிரினங்களும் வளர்ந்து வாழ்ந்து-தானே இயற்கையாக எல்லாம் உருவாகி-யிருக்கின்றன. ஆனால் ஆறறிவை நாம் பெற்றிருக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் மனிதர்கள், தேனீக்கள் சேகரிக்கும் தேன் துளிகளைக் களவாடுவது, மிருகங்களை அடிமைப்-படுத்தி வேலை வாங்குவது, நாய்களைப் பழக்கப்-படுத்தி வீட்டினைக் காவல் காக்க வைப்பது எனப் பலவற்றை செய்துகொண்டிருக்கிறார்கள்.
இருந்தாலும் பரவாயில்லை இயற்கைக்கு தீங்கு விளைவிக்காமல் இருந்தாலே போதும்…’’ என்றது கஜா.
“அப்படின்னா நாம இந்தப் பூமியை விட்டு செவ்வாய்க் கிரகத்திற்கு சென்று விடலாமே கஜா’’
“நீ நினைக்கிற மாதிரி செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது மகா’’
“ஏன் கஜா’’ என வருத்தத்துடன் கேட்டது குட்டி மகா.
“பூமியில் இருப்பதைப் போன்று, செவ்வாய்க் கிரகத்திலும் காற்று மண்டலம் சூழ்ந்துள்ளது உண்மைதான். ஆனால் அக் காற்று மண்டலத்தில் பூமியில் இருப்பதில் ஆயிரத்தில் ஒரு பங்கு உயிர்வளி (ஆக்ஸிஜன்)தான் இருக்கிறது. ஆனால் ஏராளமான பங்கு கார்பன் டை ஆக்ஸைடு உள்ளது. இதனால் உயிரினங்கள் சுவாசிப்பது கடினமாகிவிடும்…’’
“அங்கு தண்ணீர் இருக்கிறதா கஜா’’ இடைமறித்துக் கேட்டது மகா.
“பூமியில் இருப்பதைப் போல நீர்ப்பகுதி இல்லாமல் செவ்வாய்க் கிரகத்தில் நீர்ப்பகுதி மிகமிகக் குறைவு. நிலப்பகுதியின் பரப்பளவுதான் அதிகம். அதனால் அங்கே மேகங்கள் உருவாகாது. மேகங்கள் இல்லையென்றால் மழை பொழியாது.
அதுமட்டுமல்லாமல் பனி மூடிய சிகரங்கள் உள்ளன. ஒருசில நீரோடைகள் இருக்கின்றன. பூமியில் ஏற்படுவது போன்று பருவநிலை மாற்றங்களும் ஏற்படுகின்றன. ஆனால் அவை பூமியைப் போல இருக்காது மகா’’ எனத் தனக்கு தெரிந்த செய்தியைத் தெளிவாக விளக்கியது கஜா.
“கஜா! அங்கே பார் ஒரு ஏரி தெரிகிறது வா.. போகலாம்’’ என்றது உற்சாகமாக.
“இரு மகா! அவசரப்படாதே. நாம் காட்டிலிருந்து நாட்டிற்கு வரும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமக்கு ஏதாவது ஆபத்தை நேரும்படி செய்திருப்பார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். நீயும் ஏதாவது ஆபத்து தென்படுகிறதா என கவனமாக பார்’’ என்றது கஜா.
சுற்றும் முற்றும் பார்த்தன குட்டியானைகள்.
“ஆமாம் கஜா! நீ சொன்னது உண்மைதான். ஏரிக்கு அருகில் மின்சார வேலி அமைத்திருக்-கிறார்கள்’’ என்றது மகா.
“கவலைப்படாதே மகா! மனிதர்களை விட ஓரறிவுதான் நமக்குக் குறைவு. நாம் குனிந்து துதிக்கையை மட்டும் வேலிக்கு கீழே விட்டு அசைக்காமல் நீரைப் பருகலாம் வா…’’ என்றது கஜா.
தாகம் தீர்ந்தது. “கஜா. நீ புத்திசாலிதான்’’ என்றது மகா.
“நான் மட்டுமல்ல; மிருகங்கள் எல்லாமே புத்திசாலிகள்தான்’’ என்றது கஜா.
“ஆமாம்… ஆமாம்…’’ என்று கூறிக்கொண்டே மகா சிரிக்க…. அச்சிரிப்பொலியில் சேர்ந்து கொண்டது குட்டியானை கஜா.