எளிமை கற்போம்!
பள்ளிக் கூடத்திலும், திருமண வீடுகளிலும் கோட்டு போட்டுக் கொண்டு சிலரைப் பார்த்திருப்போம். வாழ்நாளில் ஒரு முறை, இரு முறையைத் தவிர கோட்டு பலருக்கும் தேவையே படாது. அதற்கு பல்லாயிரம் செலவில் கோட்டு சூட்டு தைத்துப் போடுவார்கள். ஆனால், அமெரிக்காவுக்கு செல்லத் தயாராகிக் கொண்டிருந்த அண்ணா, அங்கு பயன்படுத்துவதற்காக கோட்டு வேண்டுமே என்று யோசித்தார்.
அப்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர். அவர் நினைத்தால் எத்தனை புது கோட்டுகள் வாங்கலாம். பலர் இலவசமாகவே அவருக்குத் தைத்துக் கொடுத்திருப்பார்கள். ஆனால், அவையெல்லாம் எதற்கு வீண் என்று கருதிய அண்ணா, தன் கட்சித் தோழரும், பாசத்திற்குரிய உடன்பிறவா தம்பிகளுள் ஒருவருமான நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனிடம்,”சினிமாவில் நடிப்பதற்காக நிறைய கோட்டுகள் வாங்கி வைத்திருப்பாயே… அதில் எனக்கேற்ற ஒன்றை எடுத்துவா… அளவைக் குறைத்துக் கூட சரி பண்ணிக் கொள்ளலாம்” என்று கேட்டாராம்.
புதிது வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்ன போது, “அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு எனக்குக் கோட் அவசியப்படாது. பிறகு வீண் தானே!” என்று பழைய கோட்டினையே கேட்டாராம். ஆனால், கடைசியில் எஸ்.எஸ்.ஆர் அவர்கள் அண்ணாவைக் கேட்காமலேயே புத்தாடை எடுத்துக் கொடுத்துவிட்டார் என்பது தனிக்கதை.
அறிஞர் அண்ணா, தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கர் என்று புகழப்படுபவர். எளிமைக்கும், சிக்கனத்துக்கும் பெயர் பெற்ற தலைவர் பெரியாரிடமிருந்து அண்ணாவுக்குக் கிடைத்த பண்பு இது.
எளிமையும், சிக்கனமும் எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் இருப்பது உயர்ந்தோரின் பண்பு அல்லவா?
– பிஞ்சண்ணா