யாரென்று தெரிகிறதா?
பொதுவாக ஒரு குழந்தையின் தாய் ஊரார் அனைவரும் தனது குழந்தையை சிறந்தவன் என்று பாராட்டுவதையே விரும்புவார். ஆனால், உங்கள் பையன் ரொம்ப சுட்டித் தனமாக இருக்கிறான் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் அந்த தாய்க்கு? மைக்கேல் பெலப்ஸ் என்ற 15 வயது சிறுவனின் தாய்க்கும் அப்படியொரு நிலைமை தான்.
அவன் மிகவும் சுட்டித்தனமாக இருந்ததால் தினசரி ஏதாவது ஒரு புகாரை அவரது அருகில் உள்ள வீட்டார்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
ஒருமுறை மைகேல் பெலப்ஸின் தாயாரிடம் அந்தப் பகுதி காவலர் ஒருவர், “இவனை சிறார் சிறையில் சேர்த்துவிடுங்கள் அங்கு இவன் அடங்கிவிடுவான்” என்று அறிவுரை கூறும் அளவிற்கு மைக்கேல் பெலப்ஸின் குறும்புகள் இருந்தன.
கல்வியில் அதிக ஆர்வமின்மை, அனை-வரிடமும் கடுமையாக நடந்து கொள்ளுதல் போன்ற மைக்கேல் பெலப்ஸின் பழக்கங்களால், அவரது தாய் மிகவும் துயரத்திற்கு ஆளானார். இந்த நிலையில் அவரது சகோகதரி விட்னிக்கு நீச்சல் பயிற்சி அளித்த பாப் பவ்மென் மைக்கேலுக்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க முன்வந்தார்.
இதனால் மைகேல் பெலப்ஸின் கவனம் நீச்சல் போட்டிகளில் திசை திரும்பியது. நீச்சல் பயிற்சியின் போதே அவர் எதிர்காலத்தில் உலகப் புகழ்பெற்ற நீச்சல் வீராராக வருவார் என்று தெரிந்துவிட்டது, மெல்ல மெல்ல நீச்சல் போட்டிகளின் ஆர்வம் அதிகரித்து வந்தது. 20-ஆம் வயதில் மைக்கேல் பெலப்சுக்கு, உயிராகிப் போனது நீச்சல்!
2000ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதல்முதலாக கலந்துகொண்டு முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அதன் பிறகு அவரது தங்க வேட்கை தீரவே இல்லை.
2004-ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் 6 தங்கம், இரண்டு வெங்கலப் பதக்கங்களை வென்றார். 2008-ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற போட்டியில் 8 தங்கப் பதக்கங்களை வென்றார். 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 4 தங்கம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கங்களை வென்றார்.
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்று மொத்தம் 23 தங்கப் பதக்கங்களுடன் உலக ஒலிம்பிக் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்.
இவரது தொடர் வெற்றிக்குக் காரணமாக இவருடைய மாறுபட்ட அணுகுமுறை சொல்லப்-படுகிறது. நீச்சல் போட்டிகளில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் வீரர்கள் அங்கிருந்து திரும்பி வர நீருக்குள்ளேயே ஒரு குட்டிக்கரணம் அடித்து கால்களால் சுவரை உதைத்து, உந்தி, மீண்டும் நீந்திச் செல்வர்.
ஆனால், மற்ற நீச்சல் வீரர்களைப் போல் குட்டிக்கரணம் அடிக்கும்போது பெலப்ஸ் அதிக ஆழத்திற்கு செல்லமாட்டார். நீரின் மேல்மட்டத்தில் இருப்பதால் நீரின் ஈர்ப்பு விசை மிகக் குறைவாக இருக்கும். இதன் காரணமாக மற்ற வீரர்கள் கால்களால் சுவரை உதைத்து, கடக்கும் தூரத்தை விட பெலப்ஸ் சற்றே அதிக தூரம் செல்ல முடிகிறது.
இதுபோன்ற நுணுக்கமாகக் கவனம் செலுத்தி தனித்துவத்தை ஏற்படுத்திக் கொண்ட காரணத்தாலேயே மைக்கேல் பெலப்ஸ் அதிகளவில் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்கும், பல உலக சாதனைகளுக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார்.