ஆதிக்கக் கோட்டைகளை நொறுக்கிய பிடல் காஸ்ட்ரோ!
ஆதிக்கக் கோட்டைகளை நொறுக்கிய பிடல் காஸ்ட்ரோ!
கியூபா அழகான குட்டி தீவு. அந்த அழகிய குட்டி தீவில் 1926 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ல் ஏஞ்சல்காஸ்ட்ரோ-லினா இணையருக்கு மகனாகப் பிறந்தார் பிடல் காஸ்ட்ரோ. அவரின் இயற்பெயர் பிடல் அலெஜான்ட்ரோ காஸ்ட்ரோ ரூஸ். 1945 ஆம் ஆண்டு ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றபோது அரசியல் மற்றும் கம்யூனிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கல்லூரி மாணவராக இருந்த போதே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.
மேடையில் இவர் உணர்ச்சி பொங்கப் பேசுவதைக் கேட்கவே பெரும் கூட்டம் சேர்ந்தது. 1952 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்து கியூபாவை ஆட்சி செய்த கொடுங்கோல் சர்வாதிகாரி பாடிஸ்டாவை எதிர்த்து புரட்சி செய்த காரணத்தால் கைது செய்யப்பட்ட காஸ்ட்ரோவிற்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஆனால் மக்களின் கிளர்ச்சியால் இரண்டு ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டார்.
மெக்சிகோவிற்கு கள்ளத் தோணி மூலம் சென்று கொரில்லா போர் முறையை கற்றுத்தேர்ந்த இவர் சேகுவரா உடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் கியூபா வந்து மக்களை புரட்சிக்குத் தயார் செய்தார்.
“தாய்நாட்டிற்காக விடுதலை அல்லது வீரமரணம்”, “வரலாறு என்னை விடுதலை செய்யும்” போன்ற வீர முழக்கங்களால் ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தையும் அதிரச் செய்தார். இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மிகப்பெரிய ஆதரவோடு 1959 பிப்ரவரி 16ல் கியூபாவின் பிரதமராக பிடல் காஸ்ட்ரோ பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரைத் தன்வசம் இழுக்க அமெரிக்கா பல வழிகளில் முயற்சி செய்தது. ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காத அவர் கியூபா நாட்டு வளங்கள் அனைத்தும் கியூபா நாட்டு மக்களுக்கே சொந்தம் என அறிவித்து அனத்தையும் பொதுவுடைமை ஆக்கினார்.
50 ஆண்டுகள் அமெரிக்காவை அஞ்சி நடுங்கவைத்த உலகின் ஒரே புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ. இவரை கொலை செய்ய அமெரிக்கா 638 முறை முயற்சி செய்த போதும் இந்த வரலாற்றுப் புரட்சியாளரை நெருங்க முடியவில்லை. 49 ஆண்டுகள் கியூபாவின் அதிபராக இருந்து 11 அமெரிக்க அதிபர்களின் மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் அஞ்சாமல், கியூபாவின் வளர்ச்சியில் மட்டுமே குறியாக இருந்த சோசலிச சிந்தனையாளரான பிடல் காஸ்ட்ரோ 2016 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் தனது 90 வயதில் மறைந்தார்.
மிகச்சிறந்த பேச்சாளரான காஸ்ட்ரோ 1960 ஆம் ஆண்டு ஜநா பொதுசபையில் 269 நிமிடங்கள் தொடர்ந்து பேசி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதற்கும் அடிபணியாத புரட்சியாளரை வரலாற்றின் புகழில் இருந்து ஒருபோதும் விடுவிக்க முடியாது.
காஸ்ட்ரோவின் மறைவிற்காக வீரவணக்கம் செலுத்தியுள்ள ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “இறுதியில் ஆதிக்க கோட்டைகள் நொறுங்கும், உரிமைக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் என்பதற்கான அடையாளச் சின்னம் பிடல் காஸ்ட்ரோ” என புகழாரம் செலுத்தியுள்ளார்.
வாழ்க புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ!!
– தமிழ் கா.அமுதரசன்