பிஞ்சுகளே! எச்சரிக்கை!
வாசகப் பெருமக்களே,
இக்கட்டுரையை மிகுந்த மனவேதனையுடன் தான் வெளியிடுகிறோம். சுற்றியிருக்கும் சமூகத்தின் மீதான அவநம்பிக்கையையும் அச்சத்தையும் விதைப்பது அல்ல இதன் நோக்கம். எச்சரிக்கையுடன் இருக்கச்செய்ய வேண்டும் என்பதே!
இயல்பான அன்பு வெளிப்பாடுகளைக் கூட எச்சரிக்கை உணர்வோடு பார்க்க வேண்டியிருக்கிறதென்னும் உளைச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. வாசகர்கள் புரிந்துகொள்வார்களாக!
அன்புக்குரிய பிஞ்சுகளே, நீங்கள் உடலால் மட்டுமல்ல, உள்ளத்தாலும், உணர்வாலும் மென்மையானவர்கள்! நீங்கள் கள்ளம் கபடம் அற்றவர்கள். அன்பாகப் பேசக் கூடியவர்களிடம் நெருங்கிச் செல்வீர்கள். சுவையான தின்பண்டங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். பொம்மைகள் பிடிக்கும்; விளையாடப் பிடிக்கும், விரும்புவதை வாங்கித் தருபவர்களைப் பிடிக்கும்.
உங்களுடைய இந்த இயற்கையான இயல்புகள் சிறந்தவை. ஆனால், அவையே உங்களுக்கு ஆபத்தையும், அழிவையும், கேட்டையும் தரக்கூடியவையாகவும் ஆகிவிடுகின்றன.
இன்றைய உலகில் ஏமாற்றுகின்றவர்கள், கடத்துகின்றவர்கள், கொடியவர்கள், கெட்டவர்கள் அதிகம் உள்ளனர். இவர்களை நீங்கள் உருவத்தை வைத்து தெரிந்துகொள்ள முடியாது. நல்லவர்கள் போல்தான் இவர்களும் இருப்பார்கள்.
எல்லோரிடமும் எச்சரிக்கையாய் இருங்கள்
உங்களுக்குக் கேட்டினை, பாதிப்பை, கொடுமையை, அழிவை, துன்பத்தைச் செய்யக் கூடியவர்கள் வெளியாட்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்கள் உங்களுடன் வாழ்பவர்களாக, உறவினர்களாக, பழகக் கூடியவர்களாக, அன்பு காட்டக் கூடியவர்களாக, ஆசிரியர்களாகவும் இருப்பர்!
அவர்கள் உங்களோடு அன்பாகப் பேசுவார்கள். அடிக்கடி தின்பதற்குக் கொடுப்பார்கள், முத்தம் இடுவார்கள், கட்டிப் பிடிப்பார்கள், செல்லமாகத் தட்டுவார்கள்; மெல்ல கிள்ளுவார்கள்.
அவர்கள், நீங்கள் ‘அண்ணா’ என்று கூப்பிடும் இளைஞர்களாகவும் இருப்பார்கள், ‘தாத்தா’ என்று கூப்பிடும் வயதானவர்களாகவும் இருப்பார்கள்; மாமா’ என்று கூறும் உறவினராகவும் இருப்பார்கள்!
தொடுவதை வைத்து தூர விலகுங்கள்!
யாராக இருந்தாலும் பெண் குழந்தைகள், சிறுமிகள் உங்கள் பெற்றோரைத் தவிர மற்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் உடலில் தொடக்கூடாத இடத்தை யாராவது தொட்டாலோ, உங்கள் விருப்பமின்றி உங்களுக்கு முத்தம் கொடுத்தாலோ, அணைத்துப் பேசினாலோ, தனியே அழைத்தாலோ அவர்களை விட்டு உடனே விலகி வீட்டிற்கு வந்து உங்கள் பெற்றோரிடம் சொல்லிவிடுங்கள்.
தப்பாக உங்களிடம் நடக்கின்றவர்கள் உங்களை தொடுவதை வைத்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம். தொடக்கூடாத இடங்களைத் தொட்டால் அவர்களிடம் பழகுவதை அறவே விட்டுவிடுங்கள்.
ஆசை காட்டுவார்கள்! ஏமாறாதீர்கள்!
உங்களுக்குக் கேடு செய்ய முயற்சிக்கின்ற வர்களும், கடத்திச் செல்ல நினைப்பவர்களும் உங்களுக்கு சாக்லட் தருவார்கள்; பொம்மை தருவார்கள்! தனியே கூட்டிச் செல்வார்கள். எனவே, வீட்டிலுள்ளவர்களைத் தவிர யார் எதைக் கொடுத்தாலும் வாங்காதீர்கள்; சாப்பிடாதீர்கள். தனியே அழைத்தால் போகாமல், வீட்டிற்கு ஓடிவந்துவிடுங்கள்.
தனியே செல்லாதீர்கள்
வாயில் துணிவைத்து அழுத்தியோ, வாகனங்களில் அமர்த்தியோ உங்களை கடத்திச் சென்றுவிடுவார்கள். எனவே, தனியே செல்லாதீர்கள். மக்கள் நடமாட்டமில்லாத இடங்களுக்குப் போகாதீர்கள்.
உங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் உங்களைத் தனியே அழைத்தால், உங்கள் பெற்றோரிடம் சொல்லாமல் அவர்கள் பின்னே செல்லாதீர்கள்.
பக்கத்து வீடு, எதிர் வீடு என்று எங்கும் தனியே செல்லாதீர்கள். செல்லவேண்டிய கட்டாயம் வந்தால் பெற்றோரிடம் சொல்லிவிட்டு அவர்கள் போகச் சொன்னால் மட்டும் போங்கள்!
தயக்கம் கூடாது:
உங்களுக்குப் பிடிக்காத எது நடந்தாலும், சந்தேகப்படும்படியாக யார் நடந்தாலும் அதைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் உடனே சொல்லிவிடுங்கள். சொல்லாமல் மறைப்பது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பள்ளியில் ஆசிரியர் சிலர்கூட உங்களிடம் தப்பாக நடப்பார்கள். ஆசிரியரைப் பற்றி எப்படி பெற்றோரிடம் சொல்வது என்று தயங்காமல் உடனே சொல்லிவிடுங்கள்! பெற்றோரிடம் சொல்லாமல் நீங்கள் எதை மறைத்தாலும் அதுவே உங்களுக்குக் கேடாக மாறும்; பாதிப்பு உண்டாகும்.
பெற்றோரிடம் எதையும் சொல்லுங்கள்
நீங்கள் விளையாடச் சென்றாலும், கடைக்குச் சென்றாலும் பெற்றவர்களிடம் சொல்லி, அவர்கள் அனுமதித்தால் மட்டும் செல்லுங்கள்.
கடையில் விற்கும் தின்பண்டங்கள் வேண்டாம்
கடையில் விற்கும் சாக்லட்டுகளில்கூட தற்போது போதைப் பொருளைக் கலந்து மாணவர்களை போதைக்கு அடிமையாக்கு-கிறார்கள். எனவே, சாக்லட், அஸ்கிரீம், பானிபூரி, பர்கர், பீசா, சிப்ஸ், கூல்டிரிங்ஸ் போன்றவற்றைச் சாப்பிடாதீர்கள்.
திறந்த நிலையில் உள்ள பண்டங்கள், ஈ மொய்க்கும் பண்டங்களைச் சாப்பிடாதீர்கள். வீட்டில் செய்யும் தின்பண்டங்களையே சாப்பிடுங்கள்.
இவற்றைத் தெரிந்து வைத்திருங்கள்:
உங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி, செல்பேசி எண், அப்பா, அம்மா பெயர் இவற்றை நன்றாக அறிந்து கட்டாயம் நினைவில் வைத்திருங்கள்.
– சிகரம்