நலமாய் வெல்லும் வழியிதுவே!
சின்னச் சின்னப் பறவைகளாய்
சிறகு விரித்துப் பறந்திடவே
எண்ணம் கொண்டு எழுந்தேனே
என்னில் இன்பம் கண்டேனே!
வானம் எந்தன் வசமாகும்
வாசல் திறக்கக் கண்டேனே
நேசம் தந்த கரங்களையே
நேராய்ச் சிறகாய் விரித்தேனே!
கோடி மின்னல் நம்பிக்கை
கோட்டை எழும்பி கண்முன்னே
தாகம் தீர்க்கும் மழையென்றே
தாங்கிப் பிடிக்கும் கலையன்றோ!
பாடும் பறவைக் கூட்டத்தின்
பார்வை பேசும் மெட்டென்றே
ஆசை, மயக்கம், போலிகளும்
ஆதி சிரம் விட்டகன்றே!
இன்பம் இன்பம் ஈதென்றே
இயங்கும் காலம் நலமென்றே
நடக்க நடக்க நாடாளும்
நயமும் எட்டும் வரமாகும்!
பயிற்சி நாளும் எடுத்தன்றே
பக்கம் பார்த்து பழகென்ற
முயற்சி கைகள் விரித்தேனே
முடிவில் நலமாய் வென்றேனே!
– நாகினி