புதிய தொடர் 1 – தந்தை பெரியாரின் கதை
“பெரியார் நமது இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். இந்தச் சமுதாயத்தில் எப்படியோ ஊடுருவிவிட்ட ஜாதிக் கொடுமைகளை அகற்றப் போராடினார், பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தார், மூடநம்பிக்கையைக் கண்டித்தார். இன்னபிற செயல்களில் எல்லாம் ஈடுபட்டு நாட்டு மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்றவர் பெரியார்.’
பாரதி, மேற்கண்ட வரிகளை மார்பிலடித்துக் கொண்டு மனப்பாடம் செய்துகொண்டிருந்தாள். பாரதி 6ஆம் வகுப்பு படிக்கிறாள். அவள் தமிழ் புத்தகத்தில் பெரியாரைப் பற்றி பாடம் வந்துள்ளது.
அப்பா பாரதியை தன்னருகில் கூப்பிட்டார். பாரதி படிப்பதை நிறுத்திவிட்டு வந்தாள்.
‘என்னம்மா படிக்கிறாய்?’ என்று அப்பா கேட்டார்.
‘பெரியார் பாடம், நாளைக்கி பரீட்சை இருக்கிறது’ என்று பாரதி பதில் சொன்னாள்.
‘பெரியாரை எதற்காகப் படிக்கிறாய்?’
‘இதென்ன கேள்வி அப்பா, பத்து மதிப்பெண்ணுக்கு கேள்வி பெரியார் பாடத்திலிருந்து வருகிறதே’ என்றாள் பாரதி.
‘பெரியாரை மனப்பாடம் செய்து பரீட்சை எழுதி மதிப்பெண் எடுத்து பிறகு மறந்து விடுவாய். அப்படித்தானே?’ என்ற அப்பாவின் கேள்வி புரியாமல் தலையை அசைத்தாள் பாரதி.
‘மதிப்பெண் எடுப்பதற்காக பெரியாரை படிக்கக் கூடாது. பெரியாரைப் புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் கதையை உனக்குச் சொல்கிறேன் கேட்கிறாயா?’ என்று கேட்டார் அப்பா.
‘கதையா? சொல்லுங்க அப்பா’ என்று ஆவலோடு நிமிர்ந்து உட்கார்ந்தாள் பாரதி. கதை என்றவுடன் பாரதியின் தங்கை சோவியாவும் ஓடோடி வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். அப்பா பெரியார் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
அடுத்த இதழில்…