சாதனைப் பிஞ்சுகள்
எந்திர மனிதனைத் தயாரிக்கும்
கடலூர் மாணவர்
கடலூர் மங்களம்பேட்டையில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ரிஷிகுமார் (வயது 15) இவருக்கு அடிப்படையிலேயே கணினி விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளதால் புதிய விளையாட்டு செயலிகளை உருவாக்கி அதற்கு அவரே பெயர் சூட்டுவார். அது மட்டுமின்றி அவர் சொல்வதை எல்லாம் ஒழுங்காக செய்யும் வகையில் 43 ஆயிரம் ரூபாய் செலவில் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இதைவிட முன்னேறிய திறனுடன் ரோபோ ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருப்பதாக ரிஷி கூறியுள்ளார். “என்னுடைய கண்டுபிடிப்புகளை இந்திய நிறுவனங்களைத் தவிர வேறு எந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கொடுக்க மாட்டேன்’’ என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றைத் தேடிப்பிடித்த
ஒன்பதாம் வகுப்பு மாணவி
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற உறுப்பினரும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி மு.அபிநயா. இவர் வரலாற்றுத் தேடலில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள கழுமர வழிபாட்டையும், ராமநாதபுரம் மாவட்டம், பள்ளபச்சேரி, கோவிந்தன் கோவிலில் அய்ந்து கழுமரங்கள் உள்ளதையும், கழுவேற்றம் நடந்ததையும் கண்டுபிடித்துள்ளார்.
பழங்காலத்தில் அரசை எதிர்ப்போர் மற்றும் திருடர்களுக்கு வழங்கப்படும் கொடுமையான தண்டனையாகும். பொதுவாக, கழுவேற்றப்பட «வ்ணடியவரை நிர்வாணமாக்கி, மரம் அல்லது இரும்பால் செய்யப்பட்ட கூர்முனையில், அவரை அமரவைத்து கழுவேற்றுவர்.
இதில் மக்களுக்காகப் போராடிய வீரர்கள் கழுவேற்றப்பட்டால், அந்தக் கழுமரங்களை வழிபடும் பழக்கம் அக்காலத்தில் இருந்துள்ளது.
கழு மரங்கள், மரம் மற்றும் இரும்பால் செய்யப்பட்டிருக்கும், காலப்போக்கில் கல்லால் ஆன கழுமரங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, மண்டலமாணிக்கம் அருகே கழுவன் பொட்டலில், அதிகமாக கழுவேற்றம் நடந்ததற்கான தடயங்கள் உள்ளன. மேலும், திருப்புவனம், உத்தரகோசமங்கை அருகில் உள்ள கண்ணன்குடி, கோவிந்தனேந்தல், கழுதி அருகில் உள்ள மண்டலமாணிக்கம் ஆகிய ஊர் கோவில்களில், தலா, மூன்று கழுமரங்கள் உள்ளதையும், களரியில், கழுமரம் வணங்கப்படுவதையும் கண்டறிந்துள்ளார்.