மீண்டு எழும் தனுஷ்கோடி
நீண்ட நாட்களாக நான் காண விரும்பிய தீவான _ கடல் சீற்றத்தால் அழிந்துபோன தனுஷ்கோடி துறைமுக நகரை நாங்கள் குடும்பத்தோடு சென்று பார்த்தோம்.
தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ராமேசுவரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் தனுஷ்கோடி உள்ளது.
சுற்றுலா வருபவர்களுக்காக உள்ள சில கடைகள், மற்றும் சில குடிசை வீடுகள் மட்டுமே ஊரில் இப்போது இருக்கின்றன.
அங்கு இருந்த 65 வயது பெரியவர் ஒருவர், “எனக்கு வயது 12 இருக்கும்போது கடல் நீர் உள்ளே புகுந்து ஊரையே தன்னோடு இழுத்துக்கொண்டு போனபோது, அதோ அங்கே தெரியுதே அந்த 20 அடி மணல்மேட்டில் ஏறி தப்பித்தேன்’’ என்று இன்னமும் கண்களில் பயத்தோடு சொல்லும்போது அந்தக் கொடுமை எங்கள் மனக்கண்களில் வந்துபோனது.
டிசம்பர் 23ஆம் தேதி 1964 அன்று நடந்த அந்த அமைதிக்கடலின் கோரத்தாண்டவத்தால் அழிந்தவர்கள் அங்கு பெரும் பகுதியாக வாழ்ந்த மீனவர்களும், பார்ப்பனர்களும் ஆவர்.
பார்ப்பனர்கள் இங்கு இருந்துதான் நாள்தோறும் இராமேசுவரம் கோயிலுக்குச் சென்று கோயில் பணிகளை செய்தார்களாம்.
இந்த நகரத்தின் இரண்டு புறமும் பாக் வளைகுடாவும் (றிணீறீளீ தீணீஹ்), லட்சத்தீவு கடலின் ஒரு பகுதியான மன்னார் வளைகுடாவும் எல்லையாக உள்ளன. அலைகள் வேகமாக உள்ள பாக் வளைகுடா அந்தப் புயலின்போது ஒன்றும் செய்யவில்லை. ஆனால், எப்போதும் அமைதியாக இருக்கும் மன்னார் வளைகுடாக் கடல் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து, வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆண்டபோது “மினி சிங்கப்பூர்’’ என்றழைக்கப்பட்ட தனுஷ்கோடியை அழித்துவிட்டது. பக்கத்து நாடான இலங்கையின் சில பகுதிகளையும் சேர்த்தே அழித்துவிட்டது.
நாங்கள் எல்லோரும் இந்தக் கடலில்தான் 250 அடி வரை உள்ளே சென்று குளித்தோம். ஒரு பெரிய குளம் போன்று-தான் அது அப்போது எங்களுக்குத் தோன்றியது. ஆனால், இந்த கடல்தான் அந்த புயலடித்தபோது ஊரையே நாசப்படுத்தியுள்ளது என்பதை நம்பவே முடியவில்லை.
இடிந்து கிடக்கும் ரயில்வே நிலைய தண்ணீர்த் தொட்டி பகுதியும், பவளப் பாறைகள், சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட தேவாலயமும், சுமார் 200 ஆண்டுகள் பழைமையான மருத்துவமனையும் புயலின் பாதிப்பை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. கடல் சீற்றத்தால் அழிந்துபோன அழகான நகர் வரிசையில் தனுஷ்கோடி நமக்கு இன்றும் சாட்சியாக இருக்கிறது.
அங்கிருந்த ஒரு கடைக்காரர் எங்களிடம் பேசியபோது, “இங்கிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள “ராமர் பாலம் என்று நம்பப்படுகின்ற ஒன்று இல்லை. பவளத் திட்டுக்களான பாறைகளும் அவை’’ என்று சொன்னார். அவர் மட்டுமல்ல அந்த ஊரில் மணல் திட்டுகளுமே இருக்கும் மற்றவர்களும் அப்படித்தான் சொன்னார்கள். தனுஷ்கோடி என்ற தீவு அந்தப் புயலுக்குப் பிறகு காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.
அங்கே போடப்பட்டுள்ள புதிய சாலை வசதியால் சுற்றுலாத் தளமாக விரைவில் மீண்டு எழும் தனுஷ்கோடி என்று காத்திருக்கிறார்கள் இராமேஸ்வரம் தீவு மக்கள்.
_ இ.ப.இனநலம்,
பெரியார் மெட்ரிக் பள்ளி, ஜெயங்கொண்டம்.