புதுமைச்சிந்தனை
அதே கேன்…
நன்னீர் குடிக்க..
சிறுநீர் கழிக்க
– தமிழோவியன்
திருச்சி மாவட்டம் குறும்பப்பட்டியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவைகள் உண்டாகி அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை எடுக்கும் சூழல் உருவானது. மேலும் இந்நிகழ்வு நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருந்ததால் பள்ளி நிர்வாகம் செய்வதறியாது திகைத்து நின்றது.
இதுகுறித்து மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டது. உடனே இதற்குத் தீர்வு காணவேண்டும் என முடிவு செய்தனர். மாணவர்கள் சார்பாக அய்ந்து உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அக்குழுவில் பதின்மூன்று வயது நிரம்பிய சுபிக் பாண்டியன், சந்தோஷ், தயாநிதி, ராகுல் மற்றும் பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த அய்வர் குழு பிரச்சினைகளுக்கு என்ன காரணம் என்பதை தீவிரமாய் ஆராயும்பொழுது ஓர் உண்மை வெளிப்பட்டது. பள்ளியில் சரியான முறையில் கழிப்பிட வசதி இல்லாததால் மாணவர்கள் கட்டாந்தரையில் சிறுநீர் கழிக்கின்றனர். கழிவுகள் வெளியேற சரியான வடிகால் வசதி இல்லாததால் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. அதன் காரணமாகவே பள்ளி அறைகளில் விரும்பத்தகாத மணம் வீசுகிறது. மேலும் சிறுநீர் கழிக்கும்போது தரைத்தளத்தில் பட்டு காலிலும், செருப்பிலும் தெறிப்பதால் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர்த் தொற்று (ஹிக்ஷீவீஸீணீக்ஷீஹ் மிஸீயீமீநீtவீஷீஸீs) போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என அறிந்துகொண்டனர்.
பிரச்சினைகளைக் கண்டறிந்து விட்டோம். இனி தீர்வு காணவேண்டும் என்று முனைப்புடன் களத்தில் இறங்கினர். உடனே கழிவறை கட்டினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தனர்.
கழிவறை கட்ட வேண்டுமானால் அதிகச் செலவு ஆகும். அது நம்மால் முடியாது என்று உணர்ந்தனர். அதிகம் செலவும் ஆகக் கூடாது. அதே சமயத்தில் இதற்கு முடிவும் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தனர். அய்வர் குழுவின் தொடர் உழைப்பால் அதற்கான தீர்வும் கண்டுபிடிக்கப்பட்டது.
20 லிட்டர் தண்ணீர் கேன்களை தலைகீழாகப் பார்த்தால் ஆண்களுக்கான சிறுநீர் கழிப்புப் பாத்திரம் போல இருக்கிறதே… அதைப் பயன்படுத்தினால் என்ன என்ற புதுமையான எண்ணம் தோன்றியது. 20 லிட்டர் பழைய வாட்டர் கேன்களை வாங்கி அதை நீளவாட்டில் பிறைவடிவில் வெட்டி சரியான வடிவம் செய்தனர். முதலில் அதற்கு வெளிர் பச்சை வண்ணம் பூசி சுவற்றில் பொருத்தி, அனைத்து வசதிகளோடும் நேர்த்தியாய் கழிவறையைத் தயார் செய்தனர். பழைய தண்ணீர் கேன்களையும், இதற்குத் தேவையான இன்னும் பிற பொருட்களையும் வாங்குவதற்கு மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் அன்பளிப்பு பெற்று சிறப்பாய் செய்து முடித்தனர்.
குறைந்த விலை, குறைவான எடை, உறுதியான நீடித்த உழைப்பு என்று இம்மாணவர்களின் கற்பனையால் உருவாக்கப்பட்ட இந்த மாற்றுச் சிந்தனை முயற்சிக்கு “பாதுகாப்பான சிறுநீர் கழிக்கும் அமைப்பு’’ என்று பெயரிடப்பட்டது. இதை இவர்கள் பள்ளியில் செய்ததோடு மட்டுமல்லாமல் மற்ற பள்ளிகளுக்கும் சென்று இதைப்பற்றி விளக்கிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழ் மாணவர்களின் அபார சிந்தனையால் உருவான இந்தப் புதிய முயற்சிக்கு 2016இன் மாற்றுச் சிந்தனைக்கான I can
(என்னால் முடியும்) விருது வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இந்தப் பெருமை மிகுந்த செயலுக்கு கிராமக் கல்விக் குழுவும் பாராட்டி பரிசுகளை வழங்கியது.
மாற்றுச் சிந்தனை, கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு போன்றவற்றால் இன்று இந்தக் கிராமத்து மாணவர்களின் புகழ் உலகம் முழுவதும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது! பிரச்சினைகளைக் கண்டறிவோம். தீர்வுகளைத் தேடுவோம். பிஞ்சுகளால் முடியாதா என்ன? <