உணவைக் காப்போம்!
தட்டில் வைத்த உணவினையே
தரையில் சிந்திக் களையாதே;
கொட்டிப் பரப்பி உண்ணாமல்
குறைவாய் உண்ணப் பழகிடுக:
கிட்டும் உணவை ஏழையர்க்குக்
கேட்கும் முன்னர் பகிர்ந்துண்க;
மட்டில் லாத மகிழ்வெல்லாம்
மனதில் பிறக்கும், நீஉணர்க!
உண்ணும் உணவின் பின்புலத்தில்
உழைத்தோர் பல்லோர் என்றறிக;
எண்ணி அவர்தம் உழைப்பினையே
என்றும் நீயும் மதித்திடுக;
உண்ண உணவே இல்லாமல்
உலகில் மாய்வோர் பலகோடி;
எண்ணி நீயும் உணர்த்திட்டே
எதையும் வீண்செய் யாதிடுக!
நெல்லின் மணிகள் ஒவ்வொன்றும்
நெடுநாள் உழைப்பின் பரிசாகும்;
கொல்லும் பசியால் வாடிடுவோர்
குறையைத் தீர்த்தல் அறமாகும்:
இல்லம் தோறும் எல்லோர்க்கும்
என்றும் வயிறு நிறைந்திடவே
நல்ல உணவைப் படைத்திடுவோம்;
நன்றாய்ப் பகிர்ந்து வாழ்ந்திடுவோம்!